Wednesday, September 24, 2014

திண்டுக்கல்

 தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் திண்டுக்கல் சில விஷயங்களில் தனித்துவம் பெறுகிறது. சினிமா படத்தில் கதாநாயகனின் குடும்பம் கிராமத்தில் இருந்து வருவதாக காண்பிப்பதற்கு, ஒரு இரும்பு பெட்டியுடன் கதாநாயகனின் குடும்பம் பஸ்சில் இருந்து இறங்கி வருவதாக காட்சி வைப்பார்கள். சிவகாசிக்கு பட்டாசு தொழில் போல திண்டுக்கல்லில் இரும்பு பெட்டியும், பூட்டு தயாரிப்பும் பிரசித்தம். திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட இரும்பு பெட்டிகளை அவ்வளவு எளிதாக யாரும் திறந்து விட முடியாது. கப்பல் தகடுகள் எனப்படும் இரும்புத் தகடுகளை வாங்கி வந்து அவற்றை வெட்டி பெட்டியின் வடிவத்தை உருவாக்குவார்கள்.

இந்த பெட்டி வடிவத்திற்கு வந்த பின் அதற்கு பூட்டும், சாவியும் தயார் செய்வார்கள். ஒரு பெட்டிக்கு தயார் செய்யப்படும் சாவி அந்த பெட்டியை மட்டும் தான் திறக்கும். கள்ளச்சாவி என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த பூட்டுகள் இந்தியாவில் புகழ் பெற்ற அலிகார் பூட்டுகளை விட சிறந்தவை. இதில் 5 முதல் 7 லிவர் வரை உள்ள பூட்டுகள், திறக்க முடியாத லிவர் பூட்டுகள், பெண் சாவி பூட்டுகள் என்றெல்லாம் வித்தியாசமான பூட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் இருக்கும் உண்டியல்களையும், வீடுகளில் பணத்தை பாதுகாக்க பயன்பட்ட அலமாரிகளையும் அலசிப்பார்த்தால் அது திண்டுக் கல்லில் தயாரிக்கப்பட்டதாக எங்காவது விவரம் இருக்கும்.திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட இரும்பு பெட்டிகள் கர்நாடக மாநிலத்திற்கு அதிக அளவில் கொண்டு போகப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த காலத்தில் மாப்பிள்ளைக்கு கொடுக்கப்படும் சீர்வரிசை பொருட்களை திண்டுக்கல் பெட்டியில் வைத்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

திண்டுக்கல்லுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. புகையிலை போடும் நபர்களுக்கு திண்டுக்கல் வாசனைப் புகையிலை என்றால் அலாதி பிரியம். புகையிலை, கருப்பட்டி பாகு, வாசனை பொருட்கள் கலந்து மட்டைகளில் அடைக்கப்பட்டு இந்த புகையிலை விற்பனைக்கு வரும். அந்த காலத்தில் இந்த புகையிலை போடாதவர்களை பார்ப்பதே அபூர்வம். வாசனைப் புகையிலையை மென்று கொண்டு வாயில் ஓரத்தில் எச்சில் வழிய பேசுபவர்களை எங்கேயும் பார்க்கலாம்.

புகையிலைக்கு பெயர் பெற்றதால் என்னவோ, ஒரு காலத்தில் சுருட்டு தயாரிப்பிலும் திண்டுக்கல் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது. ஸ்பென்சர் என்ற நிறுவனம் சுருட்டுகளை தயாரித்து வந்தது. சுருட்டு தயாரிப்பாளர்களுக்கு இந்த கம்பெனியை தெரியாமல் இருக்காது. இந்த கம்பெனி மூடப்படும் வரை இங்கிருந்து தான் சுருட்டுப் பிரியரான சர்ச்சிலுக்கு சுருட்டுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் திண்டுக்கல்லை வாழ்விடமாக கொண்ட சவுராஷ்ட்ரா இனமக்கள் தயாரிக்கும் ஜிலேபி, சிறுமலை வாழைப்பழம், பேகம்பூர் தோல்கள், ‘தக்ஷின்காசாடி’ என்று பெயரிடப்பட்ட கைத்தறி சேலைகள் உள்பட பல பொருட்கள் திண்டுக்கல் பெயரை கடந்த பல ஆண்டுகளாக பிரபலமாக்கிக் கொண்டு இருக்கின்றன.

இந்த வரிசையில் திண்டுக்கல் பெயரை அடைமொழியாகத் தாங்கி அதற்கு பின்னால் வெவ்வேறு பெயர்களில் பிரியாணி கடைகள் தமிழகமெங்கும் திண்டுக்கலை பிரபலமாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பெயருக்கு உரியவை எல்லாம் திண்டுக்கல்லை பூர்வீகமாக கொண்டவையா என்ற கேள்விக்குள் போக வேண்டியதில்லை. ஆனால் பிரியாணியின் வாசனை போல, திண்டுக்கல் என்ற பெயரை பல இடங்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது.

No comments:

Post a Comment