தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.
‘வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றது. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம்தான். அதனால்தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம் (500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சி முடிவும் இதுதான். இதன் அடிப்படையிலேயே தை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி).
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால்தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் உண்ணும் சோற்றை, “சோறு” எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்…
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
-பாவேந்தர் பாரதிதாசன்.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப்படும் சான்றுகள் சில:-
1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை
2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை
3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு
4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு
5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை
No comments:
Post a Comment