Monday, September 22, 2014

வீட்டுக் கடன் பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்ல முடியுமா?

நான் சொந்தமாக வீடு கட்டத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு வீட்டுக் கடன் பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்ல முடியுமா?

- ஜெயமுருகன், திருச்சி

இதற்குப் பதிலளிக்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன்.

சொந்த வீடு கனவில் இருக்கும் பலருக்கும் கை கொடுப்பது வங்கிக் கடன்தான். வீட்டுக் கடன் பெற முடிவுசெய்துவிட்டால், பல ஆவணங்களை நீங்கள் கண்டிப்பாக வைத்திருப்பது அவசியம். அலைச்சலின்றி எளிதில் வீட்டுக் கடன் பெற இந்த ஆவணங்கள் உதவியாக இருக்கும்.

வீட்டுக் கடன் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை என்பதை வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம், விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்த பத்திரம்), தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி), விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியிடம் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல், கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்) ஆகியவற்றை வங்கிகள் கேட்கும்.

நீங்கள் வங்கியில் கடன் வாங்க நினைக்கிறீர்கள் என்றால், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையான அளவு வருமானம் உங்களிடம் இருக்கிறதா என்பதை வங்கிகள் முக்கியமாகப் பார்க்கும். நமது மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகைப் பிடித்தங்களும் போக, நாம் நமது சம்பளத்தில் குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை உறுதிசெய்த பிறகே வீட்டுக் கடனை வங்கிகள் கொடுக்கும்.

வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன. ஏனைய வங்கிக் கடன் திட்டங்களுக்கு இல்லாத சில அம்சங்கள், வீட்டுக் கடன் திட்டத்தில் உள்ளன. அதுதான், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம்.

சாதாரணமாக வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதிகள் இருக்கின்றன. உங்களது தற்போதைய வருமானம், எதிர்கால வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீங்கள் அதைத் தேர்வுசெய்து கொள்ளலாம்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டைப் பிரபல பில்டரிடம் வாங்கிக் குடியேறினேன். ஒரு வருடம்கூட ஆகவில்லை. கட்டிடச் சுவர்களில் கீறல் விழுந்திருக்கிறது . இதைச் சரிசெய்யச் சொன்னால் அது தங்கள் பொறுப்பு இல்லை என பில்டர் கைவிரித்துவிட்டார். முறைப்படி கட்டுமான நிறுவனத்திடம் இருமுறை புகார் அளித்தும் பதில் இல்லை. இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?

- ச. சிதம்பரம், சென்னை

இதற்குப் பதிலளிக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷ்யாம் கணேஷ்.

வீடு வாங்கும், விற்கும் வணிகத்தில் வீட்டை விற்பவருக்கும், வாங்குபவருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். அந்த ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினரும் செயல்படுவார்கள். வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் விரிசல்களோ பிரச்சினைகளோ ஏற்பட்டால், அதற்கு மழை, வெயில் காரணமாக இருக்கும் என்று கட்டுமான நிறுவனங்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

வீட்டு உட்புறச் சுவர்களில் கீறல்கள் விழுந்தால் அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்க வேண்டும். இதுமாதிரியான பிரச்சினைகள் எல்லாமே தரமற்ற கட்டுமானப் பொருட்கள் கொண்டு கட்டப்படுவதால்தான் ஏற்படுகிறது என்பதைப் பல வழக்குகளின் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

இது சேவை குறைபாடு என்ற வகையில் வரும். அதாவது, தரமான வீட்டைக் கட்டிக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு அதன்படி நடக்கவில்லை என்ற புகார் இது. இதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.

தரமற்ற வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இழப்பீடும் கோரலாம். ஆனால், வழக்கைப் பொறுத்தவரை 2 முதல் 3 ஆண்டுகள் வரை இழுத்துக் கொண்டு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. நன்றி - தமிழ் தி ஹிந்து

No comments:

Post a Comment