Monday, September 22, 2014

C.S.R (Community Service Register) , F.I.R ( First Information Report) - ஒரு அலசல்....



'தமிழக காவல் நிலையங்களில், கொடுக்கப்படும் புகார்கள், 'முதல் தகவல் அறிக்கை' என்றழைக்கப்படும், 'பர்ஸ்ட் இன்பர்மேஷன் ரிப்போர்ட் - எப்.ஐ.ஆர்.,' ஆக பதிவு செய்யப் படுவதற்கு பதில், 'சமூக சேவை பதிவேடு' என்றழைக்கப்படும், 'கம்யூனிட்டி சர்வீஸ் ரிஜிஸ்டர் - சி.எஸ்.ஆர்.,' ஆக தான் பதிவு செய்யப்படுகின்றன. எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது தானே முறை?' என, காவல் நிலைய நடவடிக்கைகள் குறித்து அறியாதவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



புகார் கொடுக்கும்போது, அது முதலில், சி.எஸ்.ஆரில் பதிவாகி, ரசீதாக புகார்தாரருக்கு கொடுக்கப்படுகிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை.காவல் துறை குறித்த மக்களின் விழிப்புணர்வு இப்படி இருக்க, காவல் துறையினர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் சி.எஸ்.ஆர்., பதிவு, அவர்களின் நன்மதிப்புக்கு 'வேட்டு' வைத்திருக்கிறது. 'சி.எஸ்.ஆர்., பதிவு என்பது, போலீசார் நடத்தும் வெறும் கண் துடைப்பு நாடகமே' என, சமீப காலமாய், இப்பதிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், 'காவல் நிலையத்தில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்குத் தான், சி.எஸ்.ஆர்., பதிவு நடைபெறுகிறது' என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? சி.எஸ்.ஆர்., மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு நியாயம் கிடைக்கிறதா? பாதிக்கப்பட்டவருக்கும், பாதிப்பு ஏற்படுத்தியவருக்கும், சி.எஸ்.ஆர்., பதிவின் அடிப்படையில் செய்யப்படும் சமரசத்தால் யாருக்கு லாபம்? எப்.ஐ.ஆருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சி.எஸ்.ஆர்., பதிவுகளுக்கும் காவல் துறையினர் தருகின்றனரா?இதுபோன்ற, எண்ணற்ற கேள்விகள் எழும்புவதால், இப்பதிவுகளின் தொடர் நடவடிக்கைகளை, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.



எதற்காக சி.எஸ்.ஆர்.,?


'பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் தவிர்த்து, மற்ற புகார்களை, சி.எஸ்.ஆரில் பதிவு செய்கிறோம். நீதிமன்றம், வழக்கு, வாய்தா, தீர்ப்பு என, இழுத்தடிக்காமல், காவல் நிலையத்திலேயே நியாயம் கிடைக்க, இந்த சி.எஸ்.ஆர்., உதவுகிறது. இதனால் தான், பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது' என்கின்றனர் காவல் துறையினர்.மேலும், 'எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர், நியாயம் கிடைக்க, வழக்கு போட்டு காத்திருக்க வேண்டும். அதே போல், குற்றம் செய்தவர், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இருபுறமும், வன்மம் இருந்து கொண்டே இருக்கும். இந்த வன்மம், மேலும் பல குற்றங்களுக்கு அடித்தளமாகி விடும். இதை தவிர்க்கவே, சி.எஸ்.ஆர்., பதிவுகளை அதிகப்படுத்துகிறோம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி, பிரச்னையை சுமுகமாக தீர்க்கிறோம்' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.ஆனால், 'கட்ட பஞ்சாயத்து செய்ய, காவல் துறை எதற்கு?' என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

சட்டத்தில் இடம் இல்லை


'சமூக ஒற்றுமை காக்கத்தான் சி.எஸ்.ஆர்.,' என, காவல் துறையினர் கூற, 'அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது' என்கிறார், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்துரு. இதுகுறித்து அவர் கூறுகையில், 'சி.எஸ்.ஆர்., என்பது, தமிழகத்தில் மட்டும் அமலில் இருக்கும் ஒரு ஏற்பாடு. இதைப் பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ, இந்திய தண்டனைச் சட்டத்திலோ எதுவும் கூறப்படவில்லை. ஒரு வழக்கு பதிவாவதை தள்ளிப் போடுவதற்கு, தமிழக காவல்துறை அமல்படுத்தியிருக்கும் ஏற்பாடு இது. இதோடு மட்டுமில்லாமல், குற்றப் புள்ளி விவரங்களை மறைப்பதற்கும், இந்த சி.எஸ்.ஆர்., பயன்படுத்தப்படுகிறது' என்றார்.



சோம்பலும், ஊழலும்


'நீதிமன்றத்தில், வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும், சி.எஸ்.ஆர்., பயன்படுவதாக காவல்துறையினர் கூறுகின்றனரே?' என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்துரு, 'அப்படி கூறுவது சட்டப்படி தவறு' என்றார்.மேலும், 'குற்றவியல் நடைமுறை சட்டப்படி, வழக்குகள் அத்தனையும், கடைசியாக தான் நீதிமன்றங்களை அடைகின்றன. அதற்கு முன்னால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, புலனாய்வு, சாட்சியங்களின் வாக்குமூலம், புலனாய்வு அதிகாரியின் இறுதி அறிக்கை என, பல கட்டங்கள் உள்ளன. இவற்றை எல்லாம், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தபின், அவற்றிற்கு வழக்கு எண் கொடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கு பின் தான், அவை வழக்குகள் என்று கருதப்படும். அதுவரை இருக்கக்கூடிய காலகட்டம், விசாரணைக்கு முந்தைய கட்டம் (Pre&trial Stage) ஆகும். இதையெல்லாம் தவிர்க்க விரும்பும் காவல்துறையினருடைய சோம்பலும், ஊழலும் தான், சி.எஸ்.ஆரில், புகார்கள் இடம் பெறுவதற்கான முக்கிய காரணங்கள். மற்றபடி, சி.எஸ்.ஆருக்கு, சட்டத்தில் எந்த இடமும் இல்லை. அதனால், சட்ட அங்கீகாரம் பெற்ற, 'லோக் அதாலத்' போல் காவல் துறையினர் செயல்படுவது நல்லதல்ல' என்றார்.



சி.எஸ்.ஆர்., மர்மம்


சட்ட வல்லுனரின் கூற்று இப்படியிருக்க, சி.எஸ்.ஆர்., பதிவுக்கு, காவல் துறையினர் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட, 'புகார்களை முறையாக வாங்கி,

சி.எஸ்.ஆர்., பதிய வேண்டும்' என, அனைத்து காவல் நிலையங்களுக்கும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். கூடவே, 'புகார்கள் பதிவில் பிரச்னை ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என, 044 -2561 5086 என்ற, பிரத்யேக தொலைபேசி எண்ணையும் அறிவித்திருந்தார்.இந்த எண், செயல்பாட்டுக்கு வந்த ஒரு வாரத்திற்குள், புகார்கள் குவிய, பத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், ஆணையரால் கடுமையாக கண்டிக்கப்பட்டனர்.



இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:'சி.எஸ்.ஆரில் பதியப்படும் புகார்களுக்கு, எப்.ஐ.ஆருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. புகாரை காவல் நிலைய ஆய்வாளர் பெற்றுக் கொண்டார் என்பதற்கான ஒப்புதல் சீட்டே, சி.எஸ்.ஆர்., பதிவு! இதற்கு சட்டத்தில் எவ்வித அங்கீகாரமும் இல்லை.புகாரில், ஒருவரை கைது செய்யக்கூடியமுகாந்திரம் இருந்தால், உடனே, எப்.ஐ.ஆர்., போட்டு விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணையில், குற்றம் உறுதியானால், எப்.ஐ.ஆர்., பதிவு அவசியம். ஆனால், காவல் துறையினர் இதை முறையாக பின்பற்றுவதில்லை. தற்போது இருக்கும் பிரச்னையே, சி.எஸ்.ஆர்., புகார்கள் முறையாக விசாரிக்கப்படுவதில்லை என்பது தான்! இதை, சென்னை காவல் ஆணையரின் சமீபத்திய நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.இதற்கு ஒரு உதாரணமும் உள்ளது.



நடப்பது என்ன?


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நேரு நகரைச் சேர்ந்தவர் சீனி. இவருக்கு சொந்தமான நிலத்தை, ஒருவர் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாகவும், அதை விசாரித்து, தனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் எனவும், நத்தம் காவல் நிலையத்தில், கடந்த ஏப்ரல் 11ம் தேதி புகார் கொடுத்திருக்கிறார். அவருடைய புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலையம், ஒன்பது நாட்களுக்குப் பிறகு, 20ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, சி.எஸ்.ஆர்., தந்திருக்கிறது. தொடர்ந்து, மே மாதம் 5ம் தேதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவின் முன், சீனி விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், 'எப்.ஐ.ஆர்., பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு, ஏப்ரல் 22ம் தேதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த தீர்ப்பில், உத்தர பிரதேச லலிதகுமாரி வழக்கை மேற்கோள்காட்டி, 'புகார் சம்பந்தப்பட்ட விசாரணையை, 7 நாட்களுக்குள் முடித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை, வழக்கு பதிவுக்கான முகாந்திரம் இல்லையென்றால், விசாரணையின் முடிவை, சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு தெரியப்படுத்தி, புகாரை முடித்து வைக்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு மே 6ம் தேதி கிடைக்கப் பெற்றதும், மே 9ம் தேதி, மாவட்ட கண்காணிப்பாளருக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க, மனு ஒன்றை சீனி அனுப்பியிருக்கிறார். இருந்தபோதும், நிதானமாக புகாரை விசாரித்த காவல் துறை, கடந்த ஜூன் ??ம் தேதி தான் எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருக்கிறது.



லலிதகுமாரி வழக்கின் தீர்ப்பு?


கடந்த நவம்பர் 13, 2013ல், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு (ஐந்து நீதிபதிகளடங்கியது), உ.பி., மாநிலம் - எதிர்மனுதாரர் லலிதகுமாரி வழக்கில், முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியது. அதன்படி, 'காவல் நிலையத்திற்கு வரக்கூடிய தகவல்களை, முதல் நோக்கில் பார்க்கும்பொழுது, அவற்றில் விசாரணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் எழுப்பப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி, கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இது, சட்டப்படி அவரது கடமையாகும். அப்படி இல்லாத பட்சத்தில், புகாரின் மீது, பூர்வாங்க விசாரணை நடத்த வேண்டும். அதுகூட, கிடைத்த தகவல்கள், பிடியாணையின்றி கைது செய்யப்படக்கூடிய குற்றங்களா என்று கண்டறிவதற்கு மட்டுமே ஆகும். குடும்ப வழக்குகள், வர்த்தக ரீதியான குற்றங்கள், மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் ஊழல் வழக்குகளுக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட பூர்வாங்க விசாரணை தேவைப்படலாம்' என்கிறது தீர்ப்பு.



பிரச்னை என்ன?


ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக புள்ளி விவரப்படி, தமிழகத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுகள், 2012ம் ஆண்டை விட, 2013ல், 52,860 எண்ணிக்கைகள் குறைந்திருக்கிறது; சி.எஸ்.ஆர்., பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடவே, 'சி.எஸ்.ஆர்., பதிவுகளை, எப்.ஐ.ஆர்., ஆக மாற்ற மறுக்கின்றனர்' என்ற புகாரும் எழுகிறது.'ஏன் இந்த முரண்பாடுகள்?' என்ற கேள்வியோடு, ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதியை அணுகியபோது, '1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர்., மிக நல்ல திட்டம். ஆனால், அதை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது' என்றார்.



இதுபற்றி, அவர் மேலும் கூறியதாவது:முன்பெல்லாம், காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நட்பு இருந்தது. இந்த
நட்பு, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், அப்படி நடந்தால், காவல் துறையினரின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்லவும் உதவியது. ஆனால் இன்று, 'பொதுமக்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்' என, காவல்துறை ஆணையர் உத்தரவிடும் அளவுக்கு, சூழல் மாறியுள்ளது.இதற்கு காரணம், காவல் துறையினருக்கு உள்ள கடுமையான பணிச்சுமையும், மன அழுத்தமும்! தினசரி, அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும்; உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செல்ல வேண்டும்; சாலை மறியலை தடுக்க வேண்டும்; இதெல்லாம் முடித்தபின், புகார்களை கையில் எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், காவல்துறை, பொதுமக்களின் நண்பனாக எப்படி இருக்க முடியும்?பல காவல் நிலையங்களில், ஆய்வாளர் வந்துதான் அனைத்து பணிகளையும் பார்க்க வேண்டி இருக்கிறது. சி.எஸ்.ஆர்., போடுவதென்றால் கூட, ஆய்வாளரின் அனுமதியுடன் தான் செய்ய வேண்டி இருக்கிறது. ஆய்வாளரோ, எப்.ஐ.ஆர்., போடுவதற்கு, மேலதிகாரியின் அனுமதியை பார்த்து நிற்கிறார். இப்படி, குற்றங்களை குறைத்து காண்பிப்பதால் என்ன பலன்? அதிகாரிகளிடம் வேண்டுமானால் நல்ல பெயர் கிடைக்கலாம். ஆனால், மக்களிடம்? மொத்தத்தில், சி.எஸ்.ஆர்., பதிவுகள் மதிப்பு பெற வேண்டுமானால், அதன் மீதான விசாரணை, முறையாக நடக்க வேண்டுமானால், காவல் துறையினருக்கான பணிச்சுமை, குறைக்கப்பட வேண்டும். சி.எஸ்.ஆர்., புகாரை விசாரிக்கும் பொறுப்பு, அனைத்து காவலர்களுக்கும் தரப்பட வேண்டும். இதன்மூலம், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் நல்ல நட்பு ஏற்படும். காவல் துறையினர், தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படவும், இந்த சூழல் உதவிகரமாக இருக்கும்' என்றார்.



சி.எஸ்.ஆர்., வரமா?




'பேசித் தீர்ப்பதால், பிரச்னைகள் ஒழியும். அதற்கு எப்.ஐ.ஆர்., பதிவை விட, சி.எஸ்.ஆர்., தான் உதவும்' என்கிற வகையில் செயல்படுகிறது காவல் துறை. 'குற்றம் இழைத்தவன் தப்பிக்கத்தான் சி.எஸ்.ஆர்., பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் கிடைக்க அல்ல!' என்கிறது சமூக ஆர்வலர்களின் குரல். 'சி.எஸ்.ஆர்., என்பது சட்டத்தில் இல்லாத ஒன்று; தகவல் அளிப்பவர்களைசமாளிக்க கொடுக்கப்படும் ஒப்புதல் சீட்டு' என்கிறது நீதித் துறை.'இந்நிலையில், 'எங்கள் நடவடிக்கை, சமூகத்துக்கு நல்லது. அதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, காவல் துறை கருதுமாயின், சி.எஸ்.ஆர்., பதிவுகளின் மீதுநிஜமான அக்கறை காட்டி, சமூகப் பிரச்னை களை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்' என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

பதில் சொல்லுமா அரசு?

*லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) திண் சி.எஸ்.ஆர்.,
'லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) கொடுக்கக்கூடிய தீர்ப்பு என்பது இறுதித் தீர்ப்பு. அது வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் இடையே ஏற்படும் சமரச ஒப்பந்தத்தை பதிவு செய்து கொடுக்கப்படும் தீர்ப்பு. அதற்கு, சட்டப்பூர்வமான அங்கீகாரமுண்டு. சி.எஸ்.ஆர்., தீர்ப்பு என்பது, காவல் துறையினர் நடத்தும் பஞ்சாயத்தில் ஏற்படும் முடிவு. அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது!'
- ஓய்வுப்பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்துரு



* எப்.ஐ.ஆர்., பிரச்னையா?


எப்.ஐ.ஆர்., என்பது, குற்றவியல் நடைமுறை சட்டத்தில், 154வது பிரிவாகும்.காவல்நிலைய அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறையிடலாம். அவர், தானாகவோ (அ) குற்ற எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திடமோ, அக்குற்றத்தை புலனாய்வு செய்ய உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 154(3) பிரிவில் கூறப்பட்டுள்ளது.காவல் துறை கண்காணிப்பாளரும், மேல்நடவடிக்கை எடுக்காதபோது, உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு (சென்னை) அல்லது மதுரை அமர்வில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலுள்ள சிறப்புப் பிரிவான 482ன் கீழ் மனு செய்து, சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரலாம்.இதுதவிர, சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அவ்வழக்கு பற்றி தனிநபர் புகாராக கொடுக்கலாம். குற்றவியல் நடுவர் புகாரை ஏற்றுக் கொண்டால், புலனாய்வு விசாரணை மேற்கொள்ள, தகுந்த காவல் துறை அதிகாரிக்கு, அவர் உத்தரவிடுவார்.



டூ 'சீர்' பெறுமா சி.எஸ்.ஆர்.,?


நன்றி: ரங்கநாதன் நஞ்சையன், தினமலர்- நாளிதழ் -17/06/2014.
(தற்போது, csr ஐ, நீக்க சொல்லி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு போடப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment