பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.
ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.
இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.
இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )
இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :
பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )
பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,
நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )
இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.
இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.
பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.
இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.
தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.
இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.
பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.
இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.
1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.
1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.
இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.
யோகா செயல்படும் விதம் :
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.
நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.
மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.
இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.
யோகா பற்றிய குறிப்புகள் :
• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.
• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.
• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.
யோகாவின் இன்றைய அவசியங்கள் :
இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.
இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.