Thursday, December 25, 2014

ஏன் Christmas க்குப் பதில் Xmas என்றழைக்கிறோமெனத் தெரிந்து கொள்ளவில்லை



இயேசுநாதரின் பிறந்ததினமாக டிசம்பர் 25ம் தேதி நள்ளிரவை உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொண்டாடுகின்றனர். அதைக் ‘கிருஸ்மஸ்’ (Christmas) என்ற பெயரில் இப்போது அழைக்கிறோம். ஆனால், கிருஸ்மஸ் என்பதற்குப் பதில், X’mas என்றும் நம்மில் சிலர் அழைக்கிறார்கள். ஆனால் இன்றுவரை நாம் ஏன் Christmas க்குப் பதில் X’mas என்றழைக்கிறோமெனத் தெரிந்து கொள்ளவில்லை. அதாவது இயேசுநாதரின் பெயரான ‘Christ’என்பதற்குப் பதில் ‘X’ என்னும் எழுத்தை ஏன் பயன்படுத்துகிறோம் என்பது தெரியாது. இயேசுவுக்கும் ‘X' க்கும் என்ன சம்மந்தம் இருக்கலாமென்று எப்பவாவது நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?

அது ஏன் என்பதை இப்போது நாம் பார்க்கலாமா? இதன் விளக்கம் விக்கிப்பீடியாவில் இருந்தாலும்கூடக் கொஞ்சம் தெளிவாக அதை நாம் பார்க்கலாம்.

கிரேக்க மொழியில் ‘Christ' என்பதற்கு ‘Christos' என்றே சொல்வார்கள். கிரேக்க மொழியிலுள்ள பைபிளின் புதிய ஏற்பாட்டிலும் ‘Christos' என்றே இருக்கிறது. இதைக் கிரேக்க எழுத்துகளில் ‘Χριστός’ என்றெழுதுவார்கள். இதில்வரும் முதல் எழுத்தான X ஐ ‘Chi' என்று உச்சரிப்பார்கள். அதுபோல இரண்டாவது எழுத்தான p ஐ ‘rho’ என்றும் உச்சரிப்பார்கள்.

கி.பி.306-337களில் ரோமை ஆட்சிசெய்த கொன்ஸ்டாண்டைன்1 சக்கரவர்த்தி, மாக்ஸெண்டியஸ் (Maxentius) அரசனுடன் நடத்திய போரின்போது, தனது போர்க்கொடியில், மேலே சொல்லப்பட்ட Xp ஆகிய இரண்டு எழுத்துகளுடன் கூடிய சின்னத்தை அமைத்துப் போரிட்டார். அந்தப் போரில் கொன்ஸ்டாண்டைன் வெற்றியும் பெற்றார். அதிலிருந்து X என்னும் எழுத்து கிருஸ்துவைக் (Chirist) குறிக்கும் எழுத்தாக மாறியது. அதுவே படிப்படியாக இப்போது X’mas என்று அழைப்பதற்குக் காரணமாகவும் ஆகியிருக்கிறது.
- ராஜ்சிவா -

No comments:

Post a Comment