திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை: முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம். எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.
ராஜா சுவாமிநாத குருக்கள், திருநள்ளாறு கோயில் தலைமை அர்ச்சகர்
துலாமுக்கு பெயர்வதால் என்ன நிலை: இந்தமுறை சனிபகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். துலாம் சனிக்கு உச்சவீடு. எனவே, அதிக ஆற்றலோடு திகழ்வார். எனவே, இந்தக்காலத்தில் ஏழரை, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி( அஷ்டமத்து சனியில் பாதி கஷ்டத்தைக் கொடுக்கும் நிலை) ஜீவனச்சனி(பணி, தொழிலில் சிரமம்) ஆகியவற்றை அனுபவிக்க இருப்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.
சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( தஞ்சாவூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.
ஏழரையை பிரிக்கும் விதம் ஏழரைச் சனி ஒருவரது வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது 221/2 ஆண்டுகள் அவர் ஒருவரது வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.
சனிப்பெயர்ச்சி பலனடையும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், தனுசு
சுமாரான பலன்பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம்
பரிகார ராசிகள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம்
ஏழரைச்சனி யாருக்கு: கன்னி - கடைசி இரண்டரை ஆண்டுகள், பாதச்சனி, வாக்குச்சனி
துலாம் - இரண்டாம் கட்டம் ஜென்மச்சனி
விருச்சிகம்- ஏழரை ஆரம்பம், விரயச்சனி
அஷ்டமச்சனி யாரைத் தாக்கும்: மீனம்- இதுஏழரைச்சனிக்கு நிகராகவோ, அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் எனச் சொல்லப்படுவதுண்டு.
சனி தோஷம் விலக்கும் பாடல்: அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் (மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசியினர்) இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.
1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே
3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே
4. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
5. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே
6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே
7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே
8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே
9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே
10. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே
11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே!