தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.
ஹோட்டல்களில் நாம் சாப்பிடுவது இட்லி, தோசை, சாதம் மட்டுமல்ல; கூடவே பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்களும்தான். உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிச் சொல்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆய்வாளருமான நித்யானந்த் ஜெயராமன்.
நல்ல பிளாஸ்டிக்?
‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.
பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம்.
பிரஷ் முதல் பால் வரை!
நம் அன்றாட வாழ்வில் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக் ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக் மயம். பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்து விடும். இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும் நம் உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமான நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன” என்றார். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவோடு கலந்து பின்விளைவுகளை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான விமல்ராஜ்.
“பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல் பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.
தாலேட்ஸ் உள்ள பி்ளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் நாராயணன்.
‘‘ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்ட கவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவி பறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிக மைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை. கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்து ஹோட்டல் உணவையே பார்சல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். .
பார்சல் உணவைப் பாதுகாப்பாய் மாற்ற...
அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கவர், பேப்பர் கப் என எந்த உணவு கவராக இருந்தாலும் அதில் ஐ.எஸ்.ஐ தர முத்திரை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். 40 மைக்ரான்கள் அடர்த்தி கொண்ட கவரில் பார்சல் செய்து தரும்படி கேட்கலாம். பிளாஸ்டிக் கவர்களிலேயே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய கவர்கள் என பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழ் என்று உள்ள கவரை மட்டுமே ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரில் வைக்கலாம்.
ஹோட்டலில் பார்சல் வாங்கும் முன் சாப்பாட்டை, வாழை இலையில் கட்டித் தரச் சொல்லுங்கள். சாம்பார், ரசம், பொரியல் எனில் வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பேக் செய்து தர வேண்டும் என ஹோட்டல் உரிமையாளரிடம் கேளுங்கள்.அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர். அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது.
பிளாஸ்டிக்கில் கவனம்
குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free), தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free) என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். அவெனில் (Oven) சமைக்க, எவ்வளவு பெரிய பிராண்ட் தயாரிப்பாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது. கண்ணாடிப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு வாங்கும் தண்ணீர் கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்குப் பதில் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், மண் பாத்திரம், இரும்புப் பாத்திரம், செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்?
சதீஷ், புற்றுநோய் சிறப்பு மருத்துவர்
'ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை. சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும். தொடர்ச்சியாக 1015 ஆண்டுகள் வரை பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு. ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். அவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது, இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம். சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும். ஆகவே, எந்த வகைகளிலும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நல்லது. ''
கண்ணாடியிலும் கவனம்
உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாது காக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.
ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில் பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாக கருதப்பட்டு வந்தன. எனினும் சில நிறுவனங்கள் அதிகளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில் காரீயம் (led) கலக்கிறார்கள். இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை.
பு.விவேக் ஆனந்த்
பிளாஸ்டிக் ரகசியம்
ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.
1 Polyethylene terephtalate (PETE or PET) - தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.
4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 2, 4, 5
குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது - 1
மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 3, 6, 7