Saturday, December 27, 2014

கடவுள் பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன ?

கடவுள் எங்கே இருக்கிறார் ? எப்படி இருக்கிறார் ? கடவுளைக் காண முடியுமா ? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றிற்கெல்லாம் பதில் இதோ...................
 

இராம் மனோகர் - வேதங்களின் கடவுள் குறித்த கருத்து இன்றைய விஞ்ஞானத்தின் கருத்தை ஒத்ததாகவே இருக்கிறது. சொல்லப் போனால் இன்னும் மிகத் தெளிவாக, விளக்கமாகவே சொல்லப்பட்டுள்ளது. விஞ்ஞானம் அதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான். வேதத்திலோ, விஞ்ஞானத்திலோ குழப்பம் இல்லை. நமக்குத்தான் குழப்பம். காரணம், நமக்கு தெரியாத விஷயங்களைக் கூட தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் நமக்கு நிகர் நாமேதான். அது போல படித்தோ அல்லது கேள்விப்பட்ட விஷயங்கள் சிலவற்றை நாம் ஆராய்வதே இல்லை. அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஏனென்றால் நம்மால் ஆராய முடியாத தொலைவிலோ, நிலையிலோ அவைகள் இருப்பதினாலோ அல்லது ஆராய முடியாத நிலையில் நாம் இருப்பதினாலோ அது போன்ற விஷயங்களை, நாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். நம் அறிவுக்கு எட்டாத பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இருப்பதால் அமானுஸ்ய விஷயங்கள் அல்லது அற்புதங்கள் என்று சொல்லி அவற்றை ஆராயமலேயே நாம் நம்புகிறோம். அது போல சில ஆதார பூர்வமான விஷயங்களைக் கூட கடுமையாக எதிர்ப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். நாம் எவ்வளவுதான் விளக்கிச் சொன்னாலும், அவை அனைத்தையும் தங்கள் வாதத் திறமையால் மறுத்துப் பேசுவார்கள். கடவுள் மறுப்பாளர்கள்தான் என்று இல்லை ஆன்மீகவாதிகளும் அப்படி பேசுவதுண்டு. நிலாவில் மனிதன் காலடியை பதித்து விட்டான் என்று உலகமே பெருமைபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அது உண்மையில்லை நிலா போன்று செட் அமைத்து நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்ன ஒரு ஆன்மீகவாதி ஒருவர் இன்னும் இருக்கிறார். அதற்குப் பிறகு வான்வெளி ஆராய்ச்சி எவ்வளவோ முன்னேறி செவ்வாய் கிரகத்தில் போய் நிற்கிறது. அதையும் தாண்டி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதும் தவறு, மறுப்பதும் தவறு. ஆராய வேண்டும். நம் அறிவின் திறனைக் கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, தெளிந்து அதற்குப் பிறகுதான் மறுக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ வேண்டும். கடவுள் விஷயமும் அப்படித்தான். கடவுள் எப்படி இருக்கிறார் என்று கடவுளின் சூக்கும நிலையை விளக்குகின்ற அளவு அன்றைய மொழிகள் அமைந்திருக்கவில்லையாதலால், கடவுள் வார்த்தைகளுக்கு எட்டாதவர் என்று சொல்லி ஓரளவு விளக்கி வைத்தார்கள். ஆனால், அதற்கு பிறகு வந்தவர்கள் அந்த வார்த்தைகளுக்கு எட்டாத அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய வல்லமையான பரம் பொருளுக்கு உருவங்கள் படைத்து விளக்க முயன்றார்கள்.பரம்பொருளினின்று வெளிப்படும் ஒவ்வொரு சக்தியையும் அதனதன் தத்துவங்களை விளக்கும் விதமாக வடிவங்களாகப் படைத்தார்கள். அந்த வடிவங்கள் அனைத்தும் தத்துவ விளக்கங்களாகும். நாம் அந்தத் தத்துவங்களை மறந்து விட்டோம். வடிவங்களை மட்டும் ஆராதிக்கிறோம். அதனதன் தத்துவங்களை உணர்ந்து கொண்டேமேயானால் இல்லை என்று சொல்லி கேள்வி கேட்பவர்களுக்கு இருக்கிறார், ஆனால், எப்படி இருக்கிறார் என்று நம்மால் விளக்கிச் சொல்ல முடியும்.
விஞ்ஞானம் சொல்வதற்கும், நம் வேதங்கள் சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நமது இந்த அண்டசராசரம் என்பது பல நடசத்திர மண்டலங்களை உள்ளடக்கியது. ஒரு நட்சத்திர மண்டலம் என்பது பல சிறியதும், பெரியதுமான நட்சத்திரங்கள், கிரகங்கள், உபகிரகங்களை உள்ளடக்கியது. நாம் வாழும் சூரிய மண்டலமும் இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர மண்டலத்தில் ஒரு சிறிய பகுதியாகும். நமது சூரிய மண்டலம் இருக்கின்ற நட்சத்திர மண்டலத்தை பால்வீதி மண்டலம் என்று விஞ்ஞானமும், ஆகாய கங்கை என்று வேதங்களும் குறிப்பிடுகின்றன. இந்த பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதி பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து நட்சத்திரங்கள் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் சொல்கிறது. அந்த மையப்பகுதியையே கோடி சூரியப் பிரகாசம் கொண்ட சகுணப் ப்ரம்மம்(ப்ரம்மா) என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்கள் சொலவதென்னவென்றால் இந்த ஆகாய கங்கையானது இந்த கோடி சூரியப் ப்ரகாசமான மையப்பகுதியில் இருந்து விரிவடையவும், ஒடுங்கவும் செய்கின்றன என்கிறது.
இதை பகவத் கீதை உறுதிப்படுத்துகிறது. பகவத் கீதை அத்யாயம் 8, சுலோகம் 17, 18ல் சொல்லப்படுவது என்னவென்றால், ஆயிரம் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு இரவு என்றும், அறிந்து கொள்பவர்கள் ப்ரம்மத்தின் தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகின்றனர் என்பதாகும். அதாவது ஆயிரம் யுகங்கள் விரிவடைகின்ற ஆகாய கங்கை முடிவில் அந்த ப்ரகாசமான மையத்தில் (ப்ரம்மத்தில்) ஒடுங்கி விடுகின்றன. பிறகு ஆயிரம் யுகங்கள் ஒடுக்க நிலையில் இருந்து விட்டு மீண்டும் விரிவு நிலையான தோற்றத்திற்கு வருகின்றன என்பதாகும் கருத்து. விரிவடையும் ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவிற்கு பகல். ஒடுங்குவது ப்ரளயம். ஒடுக்கத்தில் நிலை பெற்றிருக்கும் ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவிற்கு இரவு. இந்த இரண்டாயிரம் யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு நாள். இப்படிப்பட்ட ப்ரம்மாவுக்கு வயது நூறு. இதைப் போலவே நம் ஆகாய கங்கைக்கு அப்பால் அண்டத்திலுள்ள அத்தனை நட்சத்திர மண்டலங்களிலும் தோற்றமும் ஒடுக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ப்ரம்மாவின் நூறு வயது பூர்த்தியாகும் பொழுது அத்தனை நட்சத்திர மண்டலங்களும் பேரண்டத்தின் மையப்பகுதியிலுள்ள நிர்குணப்ரம்மத்தில் ஒடுங்கி விடுகின்றன. இது மகாப்ரளயமாகும்.
இது ஏதோ விட்டலாச்சாரியாரின் கதை போலத் தோன்றலாம். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அண்டங்கள், நட்சத்திர மண்டலங்கள், அவற்றின் தோற்றம் ஒடுக்கம் பற்றி வேதம் சொல்லி வைத்திருக்கிறது. சிலர் வேத காலம் என்று ஒன்றைச் சொல்லி வேதத்திற்கு வயது நிரணயம் செய்கிறார்கள். ஆனால், ஒன்றை மனதில் கொள்ள வேண்டும், வேதத்தை வியாசர் படைக்கவில்லை, தொகுத்தார் என்பதே புராணம். எனில், அவருக்கு முன்பாகவே வேதம் இருந்திருக்கிறது. அவ்வாறு உலகெங்கிலும் பரவிக் கிடந்த வேதத்தையே வியாசர் தொகுத்தளித்தார் என்பது தெளிவு. இந்தப் ப்ரளயத்திற்கு ஆதாரமாக நம் வாழ்வையே எடுத்துக் கொள்ளலாம். தினந்தோறும் நாம் பகலில் விழித்திருக்கிறோம், இரவில் உறங்கி விடுகிறோம். இதற்கிடையே நமக்குள்ளும், வெளியேயும் எத்தனையோ பொருட்கள் தோன்றவும், அழியவும் செய்கின்றன. இதை விஷ்ணு புராணம் நித்தியப் ப்ரளயம் என்கிறது. ஆகாய கங்கையின் ஒடுக்கத்தை நைமித்திகப் ப்ரளயம் என்றும், மொத்த நட்சத்திரமண்டலங்களும், ப்ரம்மாக்களும் நிர்குணத்தில் ஒடுங்கும் மகா ப்ரளயத்தை அது ப்ரகிருதி லயம் என்றும் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் தோன்றவும், ஒடுங்கவும் செய்கின்ற அந்த மையமே கடவுள் நிலை என்பதே வேதங்கள் கூறும் உண்மை கருத்தாகும். இதை பகவத் கீதை அத்தியாயம் 8, சுலோகம் 19, 20, 21 ல் ''ப்ரம்மாவின் இரவில் பொருட்கள் தன்வசமின்றி ஒடுங்குகின்றன. பகலில் அவை வெளிப்படுகின்றன. இந்த அவ்யக்த நிலையைக் காட்டிலும் மேலான அவ்யக்த நிலை ஒன்று உள்ளது. இந்த அண்டமெல்லாம் அழியும் பொழுதும் அது நிலைத்திருக்கின்றது. அதுவே பரமகதியாகும்'' என்று சொலப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானமும் நம் வேதங்கள் கூறிய கருத்துக்களை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. கடவுள் துகளைக் கூட கண்டு பிடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். கடவுளைக் கூட கண்டு பிடித்து விடுவார்கள். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அதுதான் நம் மனிதப் பிறவியின் நோக்கம் என்றே வேதம் குறிப்பிடுகிறது. ஆனால், அன்று இந்த அண்டமே மகா ப்ரளயத்தில் ஒடுங்கியிருக்கும். நாமும் கூட...............

No comments:

Post a Comment