Tuesday, December 2, 2014

ROAD SOLAR இது சூரிய ரோடு!

குஜராத்தில் கால்வாய்கள் மீது சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் பதிக்கும் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் சூரிய ஒளித் தகடுகளால் ஆன சாலைகளையே உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள். சாலையில் படும் சூரிய ஒளி, மின்சாரமாக மாற்றப்படுகிறது.
இது போன்ற சாலைகளை உருவாக்குவது பற்றி 2000 ஆண்டிலிருந்து முயற்சிகள் துவங்கிவிட்டன. அமெரிக்காவில் இன்னமும் ஆராய்ச்சி கட்டத்திலேயே இருக்கும்போது, நெதர்லாந்துக்காரர்கள் சோலார் சாலைகளை உருவாக்கி, காலரை உயர்த்துகிறார்கள். முதல் கட்டமாக 350 அடிக்கு போடப்பட்ட சைக்கிள் சாலையை திறந்துவைத்துள்ள ஆம்ஸ்டர்டாம் நகர மேயர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஆம்ஸ்டர்டாமைச் சுற்றியும் இந்தச் சாலையை அமைத்துவிடுவோம் என்கிறார்். இந்த 350 அடி சாலையே மூன்று வீட்டுக்கான மின்சாரத்தை ஆண்டு முழுவதும் வழங்கிவிடுமாம். நகர் முழுவதும் அமைக்கும்போது கிட்டத்தட்ட நகர மின் தேவையில் 85 சதவிகிதம் கிடைத்துவிடும் என்கிறார்கள்.  
என்னதான் நெதர்லாந்து முதல் ஆளாக ரோட்டைப் போட்டு கணக்கைத் துவங்கியிருந்தாலும் அமெரிக்காவின் சோலார் சாலை திட்டம் என்பது இதைக் காட்டிலும் டெக்னிக்கலானது. அது முழுக்க முழுக்க டிஜிட்டல் டிஸ்பிளே கொண்ட சோலார் பேனல்களினால் ஆனது. ஒரு நாய் சாலையின் குறுக்கே ஓடினாலும் அதன் சென்சார்கள் கண்டுபிடித்து, பயணித்துக்கொண்டிருக்கும் வாகனங்களை எச்சரிக்கை செய்யும். டிராஃபிக் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதை ஒழுங்குபடுத்த தானாகவே மாற்றுப்பாதையில் வாகனங்களை மாற்றிவிடும். நோ பார்க்கிங்கில் வாகனம் நின்றிருந்தால், காவல் துறைக்கு மெசேஜ் அனுப்பும். இவ்வளவும் செய்துகொண்டே மின்சாரமும் உற்பத்தி செய்யும்.
நம் ஊரில் ஒரு மழை பேஞ்சா இருக்கிற ரோடே காணாம போயிடுது, இதுல சோலார் ரோடெல்லாம்...ஹ்ம்ம்ம்!    
செந்தில்குமார்