Wednesday, December 17, 2014

ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது

மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுவடிவில் பிரசுரமாகி இருப்பதைவிட ஆச்சர்யமான விஷயம், அந்த பேட்டியில் வெளிப்படும் ஜாபிசின் தொலைநோக்கு.

இன்று கம்ப்யூட்டரும் , இணையமும் சர்வசாதாரணமாக இருக்கலாம் ,ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ’பி.சி’க்களை விரும்பி வாங்கும் காலம் வரும் என்று சொல்ல துணிவும் தொலைநோக்கும் வேண்டும் அல்லவா? இரண்டுமே ஜாப்சிடம் இருந்ததை இந்த பேட்டி உணர்த்துகிறது. மக்கள் கம்ப்யூட்டர்களை விரும்பி வாங்குவார்கள் என்பதற்கு ஜாப்ஸ் முன் வைத்த காரணம், தேசிய அளவிலான தகவல் தொடர்பு வலைப்பின்னலில் இணைவதற்காக என்பதாகும்.

ஜாப்ஸ் குறிப்பிட்டது இணையத்தை தான். மிகவும் மகத்தான மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கிறோம் என்றும் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் ஜாப்ஸ் இந்த கணிப்பை பகிர்ந்து கொண்ட அந்த காலகடத்தில், இணையம் பல்கலைக்கழகங்கள் மற்றும் ராணுவ அமைப்புகள் மட்டுமே அறிந்த, பயன்படுத்திய வலைப்பின்னலாக இருந்தது .அதோடு பர்சனல் கம்ப்யூட்டர்களின் விலையும் சரி, அவற்றின் செயல்பாடும் பெரும்பாலானோருக்கு எட்டாக்கனியாக இருந்தது. அப்படி இருந்தும் கூட ஜாப்ஸ், பெரும்பாலானோர் வீட்டிலேயே கம்ப்யூட்டர்களை பயன்படுத்த துவங்குவார்கள் என்ற கணிப்பை உறுதிபடி வெளியிட்டிருந்தார்.

கம்ப்யூட்டர்கள் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது எனும் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜாப்ஸ், நமக்கு கிடைத்த அற்புதமான சாதனம் என்றும் கம்ப்யூட்டரை வர்ணித்திருப்பதை அவரது பதிலில் உணரலாம்.
ஒருவர் பர்சனல் கம்ப்யூட்டரை ஏன் வாங்க வேண்டும் எனும் கேள்விக்கு அலுவலகம் மற்றும் கல்வியில் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை பட்டியலிட்டுள்ளதோடு , வீடுகளிலும் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வரும் என சொல்லியிருப்பதுதான் இந்த பேட்டியின் ஹைலைட். எல்லா வீடுகளிலும் கம்ப்யூட்டர் முக்கிய அங்கமாகும் என்றும் அவர் பதில் அளித்திருக்கிறார்.

அது எப்படி ?எனும் கேள்விக்கு தான், தேசிய அளவிலான வலைப்பின்னல் பற்றி குறிப்பிடுகிறார். ஆச்சர்யம் தான் இல்லையா?

மேக்கிண்டாஷ் வடிவில் பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டதால் மட்டும் ஜாப்ஸ் இவ்வாறு கூறியிருக்கவில்லை. உண்மையில் கம்ப்யூட்டர்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அவர் ஊகித்திருந்தார். கம்ப்யூட்டர்களை பயனுள்ளதாக ஆக்ககூடிய வலைப்பின்னலின் தாக்கத்தையும் அவர் முன்நோக்கியிருந்தார்.

ஜாப்ஸ் கம்ப்யூட்டர்களை கிராஹாம் பெல்லின் தொலைபேசியுடம் ஒப்பிட்டு, அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.

100 ஆண்டுகளுக்கு முன் கிராஹாம் பெல்லிடம் தொலைபேசி மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கேட்டிருந்தால் அவருக்கு பதில் சொல்லத்தெரிந்திருக்காது. அதே போலதான் கம்ப்யூட்டர்கள் விஷயத்திலும் மகத்தான மாற்றம் வரப்போகிறது என ஜாப்ஸ் பதில் அளித்திருக்கிறார்.

தந்தி செய்யாத மாற்றத்தை தொலைபேசி செய்தது பற்றி விளக்கியுள்ள ஜாப்ஸ் , ஐபிஎம் கம்ப்யூட்டர் செய்யாததை தனது மேக்கிண்டாஷ் செய்யக்கூடிய விதம் பற்றியும் பேசியிருப்பது அவரது கர்வத்திற்கு மட்டும் அல்ல, தொலைநோக்கு பார்வைக்கும் சான்று.

ஸ்டீவ் ஜாப்சின் இந்த பேட்டி ஆச்சர்யப்படக்கூடிய வகையில் 1985 ல் பிளேபாய் இதழில் வெளியானது. பிளேபாய் இதழை கிளர்ச்சியூட்டக்கூடிய படங்களுக்காக பலரும் அறிந்திருந்தாலும், அருமையான முழுநீள நேர்காணல்கள் பல அதில் வெளியாகி இருப்பது பலரும் அறிந்திராதது. அப்படி வெளியான ஸ்டீவ் ஜாப்சின் முழுநீள பேட்டியைதான், லாங்க்பார்ம் இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
பொறுமையாக படிக்க வேண்டிய நீளமான, ஆழமான பழைய மற்றும் புதிய கட்டுரைகளை தேடி கண்டுபிடித்து வெளியிட்டு வரும் இணையதளம் இது.

ஸ்டீவ் ஜாப்சின் முழு நீள பேட்டியை படிக்க:http://longform.org/stories/playboy-interview-steve-jobs

ஜாப்சின் பேட்டியின் முக்கிய பகுதியை படிக்க: http://paleofuture.gizmodo.com/steve-jobs-imagines-nationwide-internet-in-1985-intervi-1671246589/+ericlimer
Thanks to
- சைபர்சிம்மன்