Sunday, October 26, 2014

BANK SLR CRR வங்கியில் போடும் பணத்திற்கு உத்தரவாதம் எப்படி கிடைக்கிறது?

* 650 ரூபாயில் மினி போர்ட்போலியோ *

கடந்த வார சந்தையில் வங்கி பங்குகள் நல்ல உயர்வைக் கொடுத்தன. ரிசர்வ் வங்கி SLR என்ற விகிதத்தை குறைத்தது தான் இந்த உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த SLR விகிதத்தைப் பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.

SLR என்பதன் விரிவாக்கம் "Statutory liquidity ratio".

உதாரணத்திற்கு நாம் வங்கியில் 1000 ரூபாய் பணத்தை வைப்பு நிதியாக வைக்கிறோம். அந்த ஆயிரம் ரூபாயும் வங்கியால் பயன்படுத்தப்பட முடியுமா? என்றால் இல்லை. நமது பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதற்காக ரிசர்வ் வங்கி சில நிபந்தனைகளை வங்கிகளுக்கு விதித்துள்ளது.


அதன்படி, நமது ஆயிரம் ரூபாய் பணத்தில் 730 ரூபாய் மட்டுமே வங்கிகள் தமது விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதி 270 ரூபாயை ரிசர்வ் வங்கி சொல்லுமாறு தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, 1000 ரூபாயில் 40 ரூபாயை பணத்தை ரிசர்வ் வங்கியிடம் வைத்து இருக்க வேண்டும். இதற்கு வட்டி எதுவும் கிடையாது. இதனை CRR விகிதம் என்று அழைக்கிறார்கள். தற்போது CRR விகிதம் 4% என்ற அளவில் உள்ளது.

CRR தொடர்பாக நாம் முந்தைய பதிவில் விரிவாக எழுதி இருந்தோம். அதனை இங்கு பார்க்க..CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

மீதியில் 23% பணத்தை, அதாவது 230 ரூபாயை ரிசர்வ் வங்கி சொல்லும் முதலீடுகளில் தான் முதலீடு செய்ய வேண்டும். இது பொதுவாக அரசு பத்திரங்களாக இருக்கும். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கிறது. அதே சமயத்தில் அரசுக்கும் தமது திட்டங்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைக்கிறது.

இந்த 23% விகிதத்தைத் தான் SLR என்று அழைக்கிறார்கள்.

இந்த இரண்டு விகிதங்களும் இருப்பதால் தான் நாம் வங்கியில் போடும் பணத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாதம் கிடைக்கிறது.

அதே சமயத்தில் ரிசர்வ் வங்கிக்கு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த இரண்டு விகிதங்கள் கருவிகளாக உள்ளன.

தற்போது ரிசர்வ் வங்கி SLR விகிதத்தை 23% என்பதிலிருந்து 22.5% என்று குறைத்துள்ளார். இந்த அரை சதவீத குறைப்பால் அரசின் பிடியில் இருக்கும் 40000 கோடி ரூபாய் விடுபடுகிறது. இது தனி மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடனாக கொடுக்கப்படும் சமயத்தில் புதிய முதலீடுகள் உருவாக்கப்படும். இதனால் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

ஆனால் இந்த விகிதங்கள் அதிகமாக குறைக்கப்பட்டு விட்டால் சந்தையில் பண புழக்கம் அதிகமாகி பணத்தின் மதிப்பு குறைந்து விடும். இதனால் விலைவாசி கூடி விடும்.

ஆதலால் விலைவாசி, வளர்ச்சி என்ற இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் இருக்கும்.

சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்த இரண்டு விகிதங்களும் சேர்ந்து 40% என்ற அளவில் இருந்தது. தற்பொழுது குறைந்து 26% என்ற நிலைக்கு வந்துள்ளது. தனியார் மயமாக்குதலும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

சீட்டுக் கம்பெனிகளை விட வங்கிகள் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளே!