Wednesday, October 29, 2014

RTI APPLICATION



ஆர்.டி.ஐ. விண்ணப்பம் எழுதுவது எப்படி ?
முகவரி என்ன ?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க சில விதிமுறைகள் உண்டு
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 (Right To Information Act 2005 - RTI) மூலம் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் தகவல் பெற முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தனி நபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்கலாம்.


ஆர்.டி.ஐ.யின் பயன்:
சுயமரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கான மத்திய, மாநில அரசின் பயன்களைப் பெறவும், அரசின் திட்டங்களில் முறைகேடுகளைக் களையவும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கவும் RTI சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.
விண்ணப்பம் எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
ஆர்.டி.ஐ. சட்டத்தில் விண்ணப்பம் செய்யும்போது பொதுத் தகவல் அலுவலர் உங்கள் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்யமுடியாதபடி விண்ணப்பம் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏன் எப்படி, எப்போது போன்று கேள்வி வடிவம், ஆலோசனை, கோரிக்கை மற்றும் புகார் வடிவில் இருத்தல் கூடாது. அப்படி இருந்தால் பொதுத் தகவல் அலுவலர் தகவல் தரலாம். தராமலும் இருக்கலாம். தகவல் தரவில்லை என்பதற்காக நீங்கள் எடுக்கும் சட்டபூர்வ மேல் நடவடிக்கைகள் எல்லாம் தோற்றுப் போகும் ஆபத்து உள்ளது.
விண்ணப்பிப்பதற்கு ஒரு வெள்ளைத்தாள் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் தேவையில்லை. எழுதும் நோட்டு பேப்பரிலேயே கூட விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தட்டச்சில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கையால் எழுதலாம். விண்ணப்பத்தைப் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவான எழுத்துக்களில் எழுத வேண்டும்.
ஒரு விண்ணப்பத்தில் எத்தனை தகவல்கள் வேண்டுமானாலும் கேட்கலாம். இருப்பினும் குறிப்பிட்ட அளவிலும் தொடர்புடைய தகவலாகவும் இருத்தல் நல்லது.
தகவலை சிறு கேள்விகள் மூலம் கேட்கலாம். நீண்ட தகவல்களை ஒரே விண்ணப்பத்தில் கேட்பதைத் தவிர்க்கவும். விண்ணப்பத்தில் உங்கள் பெயர், கையொப்பம் போதுமானது. பதவி மற்றும் இதர பொறுப்புகள் குறிப்பிடத் தேவையில்லை.
தங்களுக்கு எதற்காகத் தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதைத் தெரிவிக்க அவசியமில்லை.
நேரடியாக ஏன் என்று ஆரம்பமாகும் விண்ணப்பங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்பட ஏதுவாகும். உதாரணமாக, ஏன் அந்தப் பில் அனுமதிக்கப்படவில்லை என்று எழுதுவது கூடாது.
கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்பத்தின் இறுதியில் தவறாமல் குறிப்பிடவும்.
தாங்கள் பாதிக்கபட்டவராக இருப்பின், பகுதி 4(1)(d)ன்படி நிர்வாக மற்றும் அரசு நீதித்துறையின் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கேட்கலாம்.
விண்ணப்பத்தை யாருக்கு அனுப்புவது?
எந்தப் பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவர் முகவரிக்கு விண்ணப்பம் எழுதலாம்.
ஒருவேளை அருகில் உள்ள பொதுத் தகவல் அலுவலரின் முகவரி அறிய முடியவில்லை எனில், மாநில அரசாக இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் அனுப்பலாம். அந்தத் துறை தலைமை அலுவலர் அதனை அதற்குண்டான தகவல் அலுவலருக்கு அனுப்புவார்.
பொதுத் தகவல் அலுவலரின் பெயரிடாமல் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். ஏனெனில், அலுவலர்கள் பணி இடமாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.
கட்டணம் மற்றும் அதைச் செலுத்தும் முறை:
முதன் முறை விண்ணப்பம் அனுப்புவதற்கு கட்டணம் பத்து ரூபாய், (பின்னர் தகவல்கள் தரும் நகலின் பக்கம் ஒவ்வொன்றிற்கும் 2 ரூபாய். குறுந்தகடுகள் போன்றவற்றிற்கான கட்டணம் 50 ரூபாய் எனக் கட்டணம் வேறுபடும்). வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. ஆனால் இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராப்ட், பாங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்புகள், வரையறுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத்துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம் (இதற்கான விண்ணப்பத்தை தலைமைத் தபால் அலுவலகத்தில் இலவசமாக அனுப்பலாம்).
இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் சென்று, தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவுசெய்து கொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். இதற்கு பிரத்யேகமான எண்கள் வழங்கப்படும். இந்த எண்களை தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.
30 நாட்களுக்கு மேலாகி விட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்புவது எப்படி?
நேரடியாக கையில் விண்ணப்பத்தை கொடுத்தல் - உங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்தியமைக்கான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை அனைத்தும் இருக்கின்றனவா என உறுதி செய்து கொள்ளுதல்.
பதிவு அஞ்சலுடனான பதில் அட்டை (AD) - இந்த அட்டையில் உள்ள தபால்துறை முத்திரை, விண்ணப்பம் சென்று சேர்ந்துள்ளமைக்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்திற்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்து, வாங்கித் தருமாறு கேட்க வேண்டும்.
விரைவு அஞ்சல் (தபால் துறையின் ஒரு சேவை) - உங்கள் விண்ணப்பத்தை விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்தல்.www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம் உரிய அலுவலகத்திற்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான நிலை குறித்து ஓர் அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ளவேண்டும்.
சாதாரண அஞ்சல் அல்லது தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. காரணம், விண்ணப்பம் சேர்ந்ததற்கான உத்தரவாதம் எதுவும் கிடைக்காது.
மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை எனில் (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தியளிக்கவில்லை எனில், முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அத்துறையின் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை / முடிவை விவரிப்பார். தாமதத்திற்குத் தகுந்த காரணங்களை எழுத்து மூலம் தெரிவித்து விட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக் கொள்ளலாம்.
முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்தி செய்து, இதுவரை கிடைக்கப் பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.
இரண்டாம் மேல் முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு:
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை,ஆலயம்மன் கோயில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை 600 018 (அல்லது)
தபால் பெட்டி எண்: 6405 தேனாம்பேட்டை, சென்னை-600 018
Phone : 044 2434 7590, Fax: 044 2435 7580
Email : sicnic.in Web : www.tnsic.gov.in
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு:
CENTRAL INFORMATION COMMISSION,
II floor, August Kranti Bhavan, Bhikaji Kama Place,
NEW DELHI – 110 066.
ஆன்லைனில் ஆர்.டி.ஐ. விண்ணப்பிக்க:
www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின்கீழ் வரும் 37 துறைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தளத்திலேயே முதல் மேல் முறையீடும் செய்யலாம்.www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு / எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆர்.டி.ஐ. குறித்த சந்தேகங்களுக்கு / உதவிக்கு:
www.voiceof Indian.org என்ற தளத்தையோ 94434 89976, 94443 05581 என்ற எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.