Sunday, October 19, 2014

வீட்டைப் பாதுகாக்கும் cc tv

உலகத்தின் எந்த மூலையில் இருந்துகொண்டும் உங்கள் வீட்டில் நடப்பதை ஒரு மொபைல் போன் மூலம் பார்க்கவும் கட்டுப்படுத்துவதையும் கற்பனை செய்துபாருங்கள். தற்போது அது சாத்தியம்தான். தானியங்கிக் கருவிகள், சிசிடிவி கேமராக்கள், சென்சார் கருவிகள், உங்கள் வீட்டை நீங்கள் இல்லாதபோது பாதுகாக்கும் உத்தரவாதத்தைத் தருகின்றன.

வீட்டைப் பாதுகாக்கும் தானியங்கிக் கருவிகளின் விலை இனி நடுத்தர வர்க்க மக்களுக்கும் கட்டுப்படியாகக் கூடியதாக இருக்கும் என்கின்றனர் அத்துறை நிபுணர்கள். இப்போது சென்னை போன்ற நகரங்களில் வர்த்தக ரீதியான கட்டிடங்களில் இவ்வகைப் பொருள்களை உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர்.

சில அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும் இவ்வகை வசதிகள் வந்துவிட்டன. அடுக்குமாடிக் குடியிருப்பின் விலையில் இருந்து கூடுதலாக ரூ. ஐந்து லட்சம் வரை ஆகும் என்கின்றனர். ஆனால் கட்டிடம் கட்டும்போது சிசிடிவி கேமராக்கள், சென்சார் கருவிகளைப் பொருத்துவதை முடிவுசெய்துவிட்டால் அதற்குத் தகுந்தாற்போல வடிவமைக்கலாம். ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் கண்காணிப்புக் கருவிகளை அமைப்பதற்குக் கூடுதலாகச் செலவாகும்.

தானியங்கிக் கருவிகளின் பயன்பாடுகள்ஆடியோ, வீடியோ ஸ்பீக்கர்களைக் கட்டுப்படுத்துதல், ஜன்னல் திரைகள் மற்றும் இன்டர்காம் வசதிகளை நிர்வகித்தல், வீட்டின் தட்பவெப்ப நிலையைப் பராமரித்தல், செடிகளுக்கு நீர் ஊற்றுதல் போன்றவற்றுக்கு உதவும்.

கட்டிட நிர்வாக மென்பொருள்

இந்த மென்பொருளைக் கொண்டு அலுவலகங்களில் மின்சாரத்தைச் சேமிக்க முடியும். அலுவலகத்தில் ஆட்கள் இல்லாதபோது எரியும் மின்விளக்குகளை இந்த மென்பொருள்கள் உடனடியாகக் கண்டறிந்து அணைத்துவிடும். வழக்கத்தில் இல்லாத நடவடிக்கை அலுவலகத்தில் நடந்தால் அதுகுறித்த எச்சரிக்கையையும் சென்சார் கருவிகள் தரும்.

உள்கட்டமைப்பு தேவை

24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் மற்றும் நீர்வசதி இருந்தால் மட்டுமே இந்தத் தானியங்கிக் கருவிகள் சரியாக வேலை செய்யும். அத்துடன் இதன் செலவும் அதிகம் என்ற கருத்தும் ஒருசாராரிடம் நிலவுகிறது.

தற்போதைக்கு வீடியோ போன் கதவு, அந்நியர் நுழைந்தால் எச்சரிக்கும் அலாரம், சமையல் எரிவாயுக் கசிவை எச்சரிக்கும் கருவி ஆகியவற்றுக்கு மவுசு காணப்படுகிறது. நன்றி - தமிழ் தி ஹிந்து