வானியல் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவும் தேடத் தேட ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டிருப்பதுமானவை பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ள கரும் துளைகள் (Black holes) ஆகும்.
பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் நம்மால் கணக்கிட முடியாத மிக வலிமையான ஈர்ப்பு விசையுடன் தொழிற்படும் event horizon எனும் நிகழ்வை ஏற்படுத்தும் கரும் துளைகளின் அபார ஈர்ப்பு விசையில் இருந்து மிக நுட்பமான ஒளி கூட தப்ப முடியாது என அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
இப்படிப் பட்ட ஓர் இடத்தில் இருந்து கூட சில சில நுட்பமான கதிர்கள் வெளியாவதாகவும் இக்கதிர்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் குறித்த பகுதி ஒன்றில் கரும் துளைகள் உள்ளனவா அல்லது இல்லையா என எதிர்வு கூற முடியும் என்ற தனது மிகத் தனித்துவமான தத்துவத்தை இந்த நூற்றாண்டில் ஒருவர் கூறியிருந்தார். ஹாவ்கிங்க் கதிர்வீச்சு (Hawking radiation) என்று இவரது பெயரால் அறியப் படும் இக்கதிர்வீச்சுக்களைக் கண்டு பிடித்த அந்த விஞ்ஞானி தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வானியலாளரும் (cosmologists) பௌதிகத் தத்துவவியலாளருமான (theoretical physicst) ஸ்டீபன் ஹாவ்கிங் (Stephen Hawking) ஆவார். இவரது 'The brief hisotry of time' என்ற புத்தகம் உலகில் அதிகளவு விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கரும் துளைகள் தமது இறுதிக் கட்டத்தை அடையும் போது (இறக்கும் போது) என்னவாகும்? இதற்குப் பதிலாக இவற்றின் பாரிய ஈர்ப்பு விசை நேர் எதிராகி தான் அள்ளி விழுங்கிய அனைத்து சடப் பொருட்கள் மற்றும் அலைகளையும் உப்பித் தள்ளி வெடித்துச் சிதறும் என்று கூறும் ஈர்ப்பு ஊக குவாண்டம் கோட்பாட்டு விஞ்ஞானிகள் (speculative quantum theory of gravity scientists) இந்நிகழ்வை ஏற்படுத்தும் துளையை வெண்துளை (white hole) எனப் பெயரிட்டும் உள்ளனர்.
White hole என அறியப் படும் இத்தத்துவத்தின் படி அது முன்பு கரும் துளையாக இருந்த போது தனது ஈர்ப்பால் உள்வாங்கிய அனைத்து திணிவுடைய சடப் பொருட்கள், போட்டோன்கள் (Photon) மற்றும் ஏனைய கூறுகளை ஒரு கட்டத்தில் வெளித் தள்ளும் (expel) என ஊகிக்கப் படுவதால் உண்மையில் கரும் துளைகள் தாம் விழுங்கும் பதார்த்தங்களை முற்றாக அழிக்குமா அல்லது நிலைமாற்றம் செய்யுமா என்பதை முடிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பும் உள்ளது என வானியலாளர்கள் கூறுகின்றனர்.
நவீன வானவியலில் அதி திணிவு கரும் துணிக்கைகள் (super massive black holes) எனக் கருதப் படும் நமது சூரியனை விட மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு திணிவுடைய பாரிய கரும் துளைகள் ஓவ்வொரு அண்டத்தினதும் (Galaxy) மையத்தில் தொழிற்படுவதாகக் கருதப் படுகின்றன. அப்படியிருந்த போதும் பிரபஞ்சம் தோன்றிய புதிதில் உருவாகிய மிகச் சிறியளவான கரும் துளைகள் மடிந்து எதிர்த்திசையில் தோற்றம் பெற்ற அதிக சக்தியுடைய பின்புலக் கதிர்களையோ அல்லது கதிர் வீச்சையோ வெளித் தள்ளும் வெண் துளைகளை (white holes) இதுவரை மனித இனத்தால் அவதானிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அதி திணிவு கரும் துணிக்கைகள் பற்றியோ அல்லது வெண்துளை (இருப்பின்?) பற்றியோ ஆய்வு செய்வதற்கு நம்மிடம் இப்போது இருப்பதை விட மிக சக்தி வாய்ந்த எக்ஸ் ரே விண் தொலைக் காட்டிகள் நிச்சயம் தேவைப் படுகின்றன என விஞ்ஞானிகள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.