அமெரிக்காவின் டேனியல் சோலா, 12 வருடங்களாகப் பணத்தைத் தொடவே இல்லை என்றால்... நம்புவீர்களா?
51 வயது டேனியல் சோலா, டென்வார் நகரைச் சேர்ந்தவர். கடந்த 2000-ல் தன் கையில் இருந்த 30 டாலர் பணத்தை ஒரு போன் பாக்ஸில் வைத்துவிட்டு, மோப் உதக் என்கிற இடத்தில் இருக்கும் குகைகளில் குடியேறிவிட்டார். ஒரு சைக்கிள், நான்கைந்து உடைகள், இரண்டு தகர அடுப்புகள், கத்தி, கிடார், பாட்டில். இவ்வளவுதான் அவரது சொத்து. மீன் பிடித்து, பழங்களைப் பறித்து, இறந்துகிடக்கும் விலங்குகளை உண்டு வாழ்பவர், தற்செயலாகத் தன் வாழ்க்கையைப் பற்றி பிளாக்கில் எழுத, பணம் இல்லா மனிதன் என்கிற பெயரோடு பாப்புலர் ஆகிவிட்டார்.
டேனியலுக்குப் பணத்தின் மீது அப்படி என்ன கோபம் ? ஒரு ஃப்ளாஷ்பேக்...!!
இளம் வயதில் கிறிஸ்துவத்தில் ஈடுபாட்டோடு இருந்தவருக்கு, கல்லூரி வந்ததும் இணையத்தை மேயும் பழக்கம் வந்தது. பலான பக்கங்களைத் தேடாமல், புத்தர், ராமகிருஷ்ணர், காந்தி என்று தத்துவ மேதைகளின் போதனைகளைத் தேடித் தேடிப் படித்தார். அந்த எல்லாத் தத்துவங்களையும் ஒட்டுமொத்தமாக இந்த ஒரே வாழ்க்கையில் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார் டேனியல். ஒருகட்டத்தில், தனிமையில் இருப்பது, தத்துவமாகப் பேசுவது என்று வித்தியாசமாக வாழ ஆரம்பித்தார்.
இளம் வயதில் கிறிஸ்துவத்தில் ஈடுபாட்டோடு இருந்தவருக்கு, கல்லூரி வந்ததும் இணையத்தை மேயும் பழக்கம் வந்தது. பலான பக்கங்களைத் தேடாமல், புத்தர், ராமகிருஷ்ணர், காந்தி என்று தத்துவ மேதைகளின் போதனைகளைத் தேடித் தேடிப் படித்தார். அந்த எல்லாத் தத்துவங்களையும் ஒட்டுமொத்தமாக இந்த ஒரே வாழ்க்கையில் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார் டேனியல். ஒருகட்டத்தில், தனிமையில் இருப்பது, தத்துவமாகப் பேசுவது என்று வித்தியாசமாக வாழ ஆரம்பித்தார்.
டேனியலுக்கு அவ்வளவாக எதிலும் ஸ்பெஷல் திறமை இல்லை. அதனால், நிரந்தரமாக எந்தப் பணியிலும் நிற்க முடியவில்லை. பசி, வயிற்றைக் கிள்ளியது. கிடைத்த வேலையைச் செய்வது, அதில் கிடைக்கும் சம்பாத்தியத்தில் இன்னும் நான்கு புத்தகங்கள் வாங்கிப் படிப்பது, பின் வேலையை விட்டுவிடுவது என இருந்தார். ஆனால், அதுவும் டேனியலுக்குப் போரடித்தது. கொஞ்சம் பீர் அடித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு மேலே ஏறி டாப் கியரில் பள்ளத்தில் பாய்ந்தார். அதிர்ஷ்ட தேவதை அந்த நேரம் டேனியலின் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். பாறை இடுக்குகளில் முட்டி கார் தொங்கியது. டேனியலுக்குப் போதை தெளிந்தது. பாதை புரிந்தது. சம்பாதித்துக் காசு சேர்த்துக்கொண்டு, நண்பனோடு சேர்ந்து நாடு நாடாகச் சுற்ற ஆரம்பித்தார். பொறுப்புகள், பண டென்ஷன் இந்த இரண்டும் இல்லாத வாழ்க்கையைத் தேடுவதுதான் அவரது ஐடியா. புத்த பிக்குகள் அவருக்குக் கை காட்டிய இடம்... இந்தியா!
போபால் பேரழிவோ, சுனாமி தாக்குதலோ எதையும் காமெடியாக எடுத்துக்கொள்ளும் நாடு அல்லவா... இந்தியாவில் டேனியலுக்குப் பதில் இருந்தது. திபெத் அகதிகளோடு தங்கி இருந்தவர், காடுகளில் வாழும் சாதுக்களைப் பற்றிக் கேள்விப்பட... எகிறிக் குதித்துவிட்டார். மாதாந்திர இலக்கு, பால் பாக்கி, அண்ணாச்சிக் கடை அக்கவுன்ட், பீர்விலை ஏற்றம் போன்ற இல்வாழ்க்கைப் பிரச்னைகள் இல்லாத சாதுக்களின் வாழ்க்கை முறை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஐந்து வருடங்களில் 'காயமே இது பொய் யடா... வெறும் காற்றடைத்த பையடா’ என்பதை இங்கிலீஷில் உணர்ந்து, பணம் இல்லாத வாழ்க்கைக்குத் தாவிவிட்டார்.
நாள் முழுக்க இரை தேடிப் பயணம்... இரவில் குகையில் கேம்ப் ஃபயரில் கிடார் ப்ளே... கை வலித்தால் புத்தக வாசிப்பு. இவ்வளவுதான் டேனியலின் ஒரு நாள். இப்படி ஓடிக்கொண்டு இருந்த டேனியலைப் பற்றி மார்க் சன்டீன் என்பவர் புத்தகம் எழுத, இப்போது பரபர பாப்புலராகிவிட்டார் பார்ட்டி. புத்தகம் பரபரப்பாக விற்பனை ஆகி... மார்க்குக்குப் பணம் கிடைத்தது தனிக் கதை.
டேனியலைச் சந்திக்கும் எல்லா நிருபர்களும் தவறாமல் கேட்கும் கேள்வி: ''எப்படிப் பணம் இல்லாமல் வாழ்கிறீர்கள்?''
டேனியலின் பதில்: ''காட்டுக்குள் கழுகு, குதிரை, பாம்பு, பாக்டீரியா எல்லாம் பணம் வைத்துக்கொண்டா வாழ்கிறது? அவற்றைப் போலவே நானும் வாழ்கிறேன்.''
டேனியலைப் பார்க்க பலர் வந்துபோக, அந்த இடமே டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. 'நாம சொல்றதைக் கேட்கவும் நாலு பேர் இருக்காங்களே!’ என்று நினைத்தாரோ என்னவோ, ஒரு வலைப்பூவையும், ஓர் இணையதளத்தையும் ஆரம்பித்துவிட்டார் டேனியல். ஒரு பயணம் முடிந்ததும் அருகில் உள்ள பிரவுசிங் சென்டருக்குச் செல்வார். வாழ்க்கையைப் பற்றியும் பணத்தைப் பற்றியும் தத்துவக் குத்துக் கருத்துகள் எழுதுவார். ஓனரிடம் சென்று, ''நான் பணம் இல்லா மனிதன். பிரவுசிங் கட்டணத்துக்குப் பதிலாக, ஏதாவது வேலை பார்க்கட்டுமா'' என்பார். பெரும்பாலும் டேனியலை எல்லாருக்கும் தெரியும் என்பதால் விட்டுவிடுவார்கள். இல்லையென்றால், கார் துடைக்க வேண்டியிருக்கும். டேனியல் எதற்கும் அலட்டிக்கொள்வது இல்லை.
டேனியல் பிளாக்கின் முகப்பு வரிகள் என்ன தெரியுமா?
''நான் பணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என்னைப் பின்பற்றுங்கள் அல்லது பணத்தோடு போராடுங்கள்."
___________________________________________________
___________________________________________________