Thursday, October 9, 2014

மனிதன் குடியேறும் புத மண்டலம் (mercury)


”எக்ஸோடஸ் எர்த்” எனும் சயன்ஸ் சானல் நிகழ்ச்சியில் புத மண்டலத்தில் (மெர்க்குரி) மனிதன் குடியேற முடியும் என்பதை விளக்கினார்கள். மெர்க்குரி என்பது கடும் வெப்பம் நிறைந்த,கால் வைக்கவும் இயலாத கோள் எனக் கருதியிருந்த எனக்கு அந்த நினைப்பு தவறு என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்தது.

புதன் (mercury) என்பது சூரியனுக்கு அருகே உள்ள கோள். பூமியின் அளவில் நாற்பது சதவிகிதம் மட்டுமே உள்ள கோள் புதன். புத மண்டலத்தின் ஒரு நாளின் அளவு அதன் ஆண்டின் கால அளவைக் காட்டிலும் சுமார் இரு மடங்கு அதிகம். அது எப்படி என்று பார்ப்போம்.

பூ மண்டலம் 24 மணி நேரத்தில் தன்னைச் சுற்றுகிறது; சூரியனைச் சுற்ற 365 நாட்கள்; ஆனால் புத மண்டலத்தின் இயல்பு வேறு. அது தன்னைத் தானே சுற்ற பூமி நாட்களில் 176 நாட்களுக்கு சமமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அதாவது புதனின் ஒரு நாள் என்பது பூமியில் 176 நாட்களுக்கு சமம்; ஆனால் சூரியனையோ அதே அளவில் 87 நாட்களில் சுற்றி விடுகிறது புத மண்டலம். ஆக புதனின் ஒரு நாள் அதன் வருடத்தை விட சுமார் இருமடங்கு அதிகம்.
சூரியக் குடும்பத்தில் மனிதன் குடியேறும் வாய்ப்புள்ள கிரகங்களில் மெர்க்குரியும் ஒன்று என்பது விந்தையான தகவல்.காரணம் மெர்க்குரியின் வித்தியாசமான நிலவியலே.மெர்க்குரியின் ஒருபக்கம் சூரியனைப் பார்த்தபடி உள்ளது. அந்தப் பகுதியில் 800 டிகிரி வெப்பம் நிலவுகிறது. ஒப்பீட்டளவில் சமையல் செய்யும் அவனில் (oven) 450 டிகிரி வெப்பம் தான்.
இந்த அளவு வெப்பம் மிக்க மெர்க்குரியில் எப்படிக் குடியேறுவது என்று கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். மெர்க்குரியின் ஒரு பக்கம்தான் சூரியனைப் பார்த்தபடி உள்ளது; அதன் இன்னொருபக்கம் சூரியனுக்கு எதிர்ப்புறமாக. அந்தப் பக்கம் சூரியனை நோக்கித் திரும்ப 176 நாட்கள் ஆகும் என்பதால் அங்கே கடும்குளிர் நிலவும், கடும்குளிர் என்றால் -261 டிகிரி குளிர். அதாவது அண்டார்டிகாவை விட இரு மடங்கு குளிர் அதிகம்.

மெர்க்குரியில் சூர்யோதயம் -

ஆனால் அதிசயமாக மெர்க்குரியின் துருவங்களில் சூரிய ஒளி அதிகம் படுவதில்லை. அங்கே விண்கற்கள் விழுந்து உருவான பல குழிகள் உண்டு. அங்கே அண்டார்டிகாவுக்கு ஒப்பான குளிர் நிலவும்.எப்போதும் அங்கே வெயில் படாது. அண்டார்டிகாவில் அறிவியலார் வசிப்பது போல அந்த குழிகளுக்குள் நிரந்தரக் குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு வசிக்கலாம்.
குழிக்குள் வசித்தால் நீர், காற்று, உணவுக்கு எங்கே போவது என்று கேட்கிறீர்களா? அதிசயத்திலும் அதிசயமாக மெர்க்குரியின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் நீர் உள்ளது. அதுவும் கிட்டத்தட்ட அண்டார்டிகா பனித் தகடுக்கு சமமான அளவு பனிக்கட்டி உள்ளது. இத்தனை பனி அங்கே எப்படி வந்தது ? விண்கற்கள் மெர்க்குரியைத் தாக்கியபோது அவற்றிலிருந்த நீர் அப்படியே மெர்க்குரியின் துருவப் பகுதிகளில் தங்கி விட்டது. அங்கே சூரிய வெளிச்சம் படுவதில்லை என்பதால் பனிக்கட்டியாக உறைந்து விட்டது.


நீர் இருக்கு சரி..காற்றுக்கு (உயிர் வளிக்கு) என்ன செய்வது? அறிவியல் அதற்கும் வழி சொல்கிறது. மெர்குரியில் காற்றே இல்லை. ஆனால் மெர்க்குரியின் மண்ணில் ஏராளமான அளவு உயிர் வளி உள்ளது. மண்ணில் இருந்து உயிர்வளியைப் (oxygen) பிரித்தெடுக்க முடியும். மெர்க்குரியில் சிறு நகரம் ஒன்றை ஏற்படுத்திச் செயற்கையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்து, நீர், உயிர்வளி மூலம் உயிர்வாழ இயலும்; உணவுக்குக் கோழி, ஆடு போன்றவற்றை வளர்க்க இயலும்; மெர்க்குரியில் சோலார் பேனல்கள் அமைத்தால் மின்சாரம் எளிதில் உற்பத்தி செய்ய இயலும். மெர்க்குரியில் சூரிய ஒளி ஏராளம் என்பதால் பூமியை விட மிக விரைவில் அங்கே சூரிய ஆற்றல் கிடைக்கும்.

மெர்க்குரியில் புவியீர்ப்பு விசையும் நிலவை விட மூன்று மடங்கு அதிகம் என்பதால் அங்கே வாழ்க்கை சிரமமாக இருக்காது.மனிதனால் ஈர்ப்பு விசை இல்லாமல் உயிர்வாழ இயலாது. அந்த விஷயத்தில் நிலவை விட மெர்க்குரி பரவாயில்லை.அதுபோக நிலவில் இன்னொரு சிக்கலும் உண்டு.அதாவது சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை பூமி மின்காந்த அலைகள் மூலம் தடுக்கிறது. நிலவில் அப்படி மின்காந்த அலை ஏதும் இல்லை. அதனால் நிலவில் அதிகநாள் வசித்தால் புற்றுநோய் வந்து நாம் இறந்துவிடுவோம். மெர்க்குரியும் பூமியைப் போலவே மின்காந்த அலைகளை உருவாக்குவதால் அங்கேயும் மனிதர்கள் வசிப்பது பாதுகாப்பானதே.

மெர்க்குரியில் ஒருபக்கம் 800 டிகிரி வெப்பம், இன்னொரு பக்கம் -260 டிகிரி குளிர். இந்த இரு பெரு நிலப்பரப்புகளும் சந்திக்கும் இடத்தில் அதாவது இரவும் பகலும் சந்திக்கும் சாயங்காலப் பகுதியில் சுமார் 30 சதுர மைல் பரப்புக்கு மனிதன் வாழக்கூடிய அளவு வெப்பம் உள்ளது என்கின்றனர் அறிவியலார்; ஆனால் மெர்க்குரி தன்னைத் தானே சுற்றுவதால்

இந்த 30 சதுரமைல் பகுதி நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த 30 ச. மைல் பிரதேசத்தில் புதன் தன்னைச் சுற்றும் வேகத்திலேயே நாமும் நகர்ந்தால் நாம் பாதுகாப்பாக முழுக் கோளையும் சுற்றிப் பார்க்கலாம்.

சற்று விளக்கமாக -

மெர்க்குரி தன்னைத் தானே சுற்றுகிறது. அதாவது பூமி சுழல்வதைப் போல. இப்படிச் சுழலும்போது மெர்க்குரியின் இருள் கவிந்த பகுதி சூரியனை நோக்கித் திரும்புகிறது. அப்போது அங்கே பகல் ஆகிறது. சூரியனை நோக்கி இருந்த பகுதி மறுபக்கம் திரும்புவதால் அங்கே இருள் கவிகிறது.
இப்படி இரவுக்கும் பகலுக்கும் இடையே 30 சதுரமைல் பகுதி இரவும், பகலும் அற்ற அந்திப்பொழுதாக இருக்கும். மெர்க்குரியின் பகல் பொழுது வெப்பம் 800 டிகிரி செல்ஷியஸ். இரவுப் பகுதி வெப்பம் -261 டிகிரி செல்ஷியஸ். இரண்டுக்கும் இடைபட்ட இந்த 30 சதுரமைல் பகுதியில்தான் மனிதன் வாழத்தகுந்த அளவு வெப்பம் இருக்கும். ஒரு சில ஆயிரம் பேரே மெர்க்குரியில் வசிக்க இயலும்.

ஆனால் மெர்க்குரி தன்னைத் தானே சுற்றுவதால் இந்த பகுதியும் நகர்ந்து கொண்டே இருக்கும். அதனால் மெர்க்குரி சுற்றும் வேகத்தில் நாமும் இந்த அந்திப் பொழுது நிலவும் பகுதியிலேயே தொடர்ந்து பயணித்தால் பாதுகாப்பான தட்பவெப்பத்தில் புதனைச் சுற்றி வரலாம்.

சோலார் பேனல் பொருத்தப்பட்ட ஊர்தி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்; சூரிய ஒளிபடும் இடத்தில் சோலார் பேனலை வையுங்கள்; அதை உங்கள் ஊர்தியுடன் இணையுங்கள். அவ்வூர்தியை 30 ச.மைல் ட்வலைட் சோனில் (twilight zone) நிறுத்துங்கள். மணிக்கு இரண்டு மைல் தூரம் பயணித்தால் மட்டுமே போதும். மெர்க்குரியின் பாதுகாப்பான 30 ச. மைல் பிரதேசம் உங்களுடனே தொடர்ந்து வரும்.

இது ஒரு சுற்றுலாவைப்போல் உள்ளது என்பது வியப்பளிக்கிறது இல்லையா !

No comments:

Post a Comment