Wednesday, October 8, 2014

நிதி நிறுவனங்கள் ஏன் வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன?

* 500 ரூபாயில் 3 ம்யூச்சல் பண்ட் பரிந்துரைகள் *

ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் என்கிற சுயதொழில் ஆர்வமுடைய நண்பர் முதலீடு தொடர்பான சில கேள்விகளை எமக்கு மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். நல்ல கேள்விகள் என்பதால் பதில்களுடன் தளத்திலும் பகிர்கிறோம்.




1. மிகப்பெரிய கம்பெனிகள் எப்படி சிறு நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன?

பெரும்பாலும் நிதி நிறுவனங்களே சிறு நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பும். அவ்வாறு நிதி முதலீடுகளைப் பெறுவதற்கு நிதி நிறுவனங்களை நேரடியாக அணுக வேண்டும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களை அணுகுவதற்கு முன் அரசின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளைப் பற்றி அறிவது முக்கியமானது.

இந்த நிதி நிறுவனங்களின் முதலீடைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. சிறு நிறுவனங்களின் செயல்பாடு, வளர்ச்சி, எதிர்காலம் போன்றவற்றை ஆராய்ந்த பிறகு தான் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. அதே போல் முதலீடாக பெறப்படும் நிதி எதற்கு பயன்படுகிறது என்பதையும் நிதி நிறுவனத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இத்தகைய முதலீடுகளை பெறுவதற்கு முன் CRISIL போன்ற நிறுவனங்களிடம் Credit Rating பெறுவதும் நல்லது. இந்த கிரெடிட் ரேட்டிங் என்பது நிறுவனத்தின் நிதி நிலைமையும் வியாபர நிலைமையும் குறிப்பதாக இருக்கும். இவைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் முதலீடு பரீசலிக்க்ப்படும்.

2. (அக்கம்பெனிகளுக்கு) அதற்க்கான ஆதாயம் என்ன?

முதலீடு செய்யும் போது சிறு நிறுவனத்தில் அதற்குரிய பங்குகளும் நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும். சிறு நிறுவனம் வளர, வளர அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் கூடும். அதனால் நிதி நிறுவனங்களது முதலீடும் அதற்கேற்றவாறு பெருகும். அதாவது இங்கு லாபம் முதலீட்டின் அடிப்படையில் பங்கிடப்படுகிறது.

3. அதனால் அச்சிறு நிறுவனத்திற்க்கு என்ன லாபம்?

சிறு நிறுவனங்கள் அவ்வளவு பெரிய நிதியை கடன் வாங்குவதற்கு பதிலாக முதலீடாக பெறுவதால் நிதிச் சுமை குறைகிறது. ஒவ்வொரு மாதமும் வட்டி கட்ட வேண்டிய தேவையில்லை. இவ்வாறு பெறப்படும் நிதியை வைத்து எளிதாக தங்கள் வியாபாரத்தையும் பெருக்க முடிகிறது.

4. அப்படி முதலீடு செய்வதால் அச்சிறு நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுமையும் அப்பெரு நிறுவனத்திற்கு சென்று விடுமா?

சிறு நிறுவனங்கள் பெரும்பான்மையான பங்குகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு தான் மீதி பங்குகளை தான் மற்றவர்கள் முதலீட்டிற்கு கொடுப்பார்கள். அதனால் நிர்வாக கட்டுப்பாடு என்பது சிறு நிறுவனங்கள் கையிலே இருக்கும். சில சமயங்களில் லாபத்தை மட்டுமே பங்கிடும் வகையில் நிதி நிறுவனங்களின் பங்குகளுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுவதில்லை. அந்த சமயங்களில் நிர்வாகத்தின் முடிவுகளில் அவ்வளவு எளிதில் நிதி நிறுவனங்கள் தலையிட முடியாது.

###

சில சமயங்களில் இத்தகைய முதலீடு என்பது பெரும்பாலும் எதிர்கால வளர்ச்சியை வைத்தே பெறப்படுகிறது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் 6,000 கோடி அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் கடந்த ஆண்டு வரை பிளிப்கார்ட் 150 கோடி வரை நஷ்டமே கொடுத்துள்ளது. அதனால் வியாபாரம் குறைந்து உள்ளது என்று அர்த்தம் அல்ல. இந்த லாப, நஷ்டங்கள் வருமானத்தில் இருந்து செலவீனங்களை கழித்து பிறகு பெறப்படுகிறது.

தற்போது பிளிப்கார்ட் மிக வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. அதனால் செலவீனங்களும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வருமானம் அதிகரித்து வந்தாலும் நிதி அறிக்கை முடிவில் நஷ்டத்தைக் காட்டுகிறது.

ஆனால் இந்த செலவுகள் இன்னும் பத்து வருட காலத்தில் மடங்குகளில் வருமானத்தைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்ப்பபடுகிறது. இதனால் முதலீடு செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

அதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தற்போதைய உண்மையான மதிப்பு 42,000 கோடி என்று இல்லா விட்டாலும் எதிர்கால வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் மதிப்புடைய நிறுவனமாக கருதப்படுகிறது. அதனால் தான் முதலீடுகளும் அவர்களுக்கு குவிகின்றன.

இதே முறை பங்குச்சந்தையில் மற்ற நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவரும் போதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். வெறும் நஷ்டம் என்பதை பார்ப்பதற்கு பதிலாக எதற்காக நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தால் நல்ல முதலீடுகளை இனங்கான முடியும்.

No comments:

Post a Comment