ஸ்ரீ சக்கர தியானம்
ஸ்ரீ சக்கர தியானத்தைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். இதற்கு முந்தைய பதிவில் அதை நீங்கள் சரியாக விளக்கவில்லை எனவே அதற்கு 30 மதிப்பெண்களே தரமுடியும் என்றும் சொல்லப்பட்டது. எனவே, அம்பிகையைத் தொழுது வேண்டிக் கொண்டு இந்தப் பதிவை அவள் காலடியிலும், உங்கள் அன்பு நெஞ்சங்களிலும் சமர்ப்பிக்கிறேன். ஸ்ரீவித்யையில் முக்கியமான மந்திரம் பஞ்சதசாஷரி, முக்கியமான யந்திரம் ஸ்ரீசக்கரம். அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தனிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாச் சொல்லப் படுகிறது.ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் யந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம். மும்மூர்த்திகளின் தொழிலுக்கும் மூலஸ்தானம். பிரம்ம வித்தைகளில் சிறந்தது ஸ்ரீவித்யை. அதன் யந்திரம் ஸ்ரீசக்கரம்.
சிவகோணம் நான்கு, சக்தி கோணம் ஐந்து, ஒன்பது கோணங்களினுள்ளும் உண்டாவது நாற்பத்தி மூன்று. இவற்றின் மூலக் காரணத் தாதுக்கள் ஒன்பது. பிந்துஸ்தானத்தில் உண்டான மந்திரக் கோணங்கள் எட்டு இதழ்கள். அதற்கு மேல் வட்டமாய் எழுந்த பதினாறு இதழ்கள். அதற்கு மேல் அழகான மூன்று வட்டம். அதற்கும் மேல் மூன்று சதுரம், ஆக நாற்பத்து நான்கு தத்துவங்களாக அமைந்துள்ளன என்று ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தின் பெருமையை விவரித்துள்ளார். உலகத்தையே மிகமிகச் சிறிய வடிவில் பிரிதிபலிப்பது நம் ஸ்ரீசக்கரமாகிய மகாமேரு. நம் நாட்டிலிருந்து சீனா, திபெத், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. மாஸ்கோ பல்கலைக் கழக்கத்தில் ஆராய்ச்சிக்காக இடம் பெற்றுள்ளது. விஞ்ஞானிகளையே வியக்க வைக்கும் அற்புதம் ஸ்ரீசக்கரம்.
விரைவாகவும்,இலகுவாகவும் சித்தி, விரும்புபவர்கள் சக்தியின் அம்சமான ஸ்ரீசக்ரத்தின் முன் அமர்ந்து அம்பிகையை மனதில் நினைத்து தியானம் மேற்கொள்ள வேண்டும். இதுவே உயர்ந்த தியானம். ஸ்ரீசக்கரம் தியானிப்போரின் மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. ஸ்ரீசக்கரத்தின் முன் மனம் குவிக்கப்படும் போது மனம் தூய்மைப்படுத்தப்பட்டு, புலன்களின் கதவுகள் மூடப்படுகின்றன. பூரணாதியான நிலையில் மனம் நிலைத்து நிற்கும்.
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை யொளியது காணுந்
தணந்தெழு சக்கரந் தான்தரு வாளே. திருமந்திரம்1348.
திருவருள் துணையால் சக்கரத்தில் தோன்றும் அம்பிகையின் திருவுருவினை உணர்ந்திருந்து, உள்ளத்தின் உள்ளே நோக்கினால், நோக்குவார்க்கு எங்கும் கலந்து பேரருள் பொழிவாள். அகத்தே மணி, யானை, கடல், புல்லாங்குழல்,மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகிய இன்னோசை பத்தும் ஒலித்திடும். அம்பிகையே சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருள்புரிவாள். என்று திருமூலர் ஸ்ரீசக்கரத்தின் பெருமையை பறைசாற்றுகிறார். ஸ்ரீசக்கர தியானம் உயர்ந்த தியானமாகும். இதில் மனம் ஒருமுகப்பட்டு ஏகாக்கிர சித்தம் பெறுகிறது. இதுவே தியானம் வெற்றி பெற, சித்திகள் நமை வந்து அடைய சிறந்த மார்க்கமாகும். அம்பிகையைத் தியானித்தால் தொழுபவர்களுக்கு அவள் அருளாலே எல்லா வளங்களும், நலமங்களும் பெருகும்.காலனும் அணுகான். கதிரவனைப்போல பிரலாசிக்கலாம். நித்தர்களும் அம்பிகையான வாலைப் பெண்ணை தியானிக்காமல் தியானிக்காமல் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
எனவே அவளருளாலே நல்ல குருவை நாடி ஸ்ரீசக்கர தியானத்தை செய்து உய்வோமாக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.
தியானம் செய்பவர்களுக்கென்று சில முன்னேற்பாடுகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். நவீன தியானப் பயிற்சிகள் மனவலிமை மற்றும் புத்தி கூர்மை, செயல் திறன் வேண்டி செய்யப்படுவதால் தியானம் செய்பவர்கள் அவற்றை கடைபிடிப்பதில்லை. இதெல்லாம் தேவையில்லை என்று விட்டு விடுகிறார்கள். ஆனால், முயற்சியின் பலன் விரைவில் கிடைப்பதற்கும், அந்த பலன் நீடித்திருப்பதற்கும் அவற்றைக் கடைபிடிப்பது அவசியமாகும். வேதாத்ரியத்தில் முதலில் உடல் பயிற்சியைக் கற்றுத் தருகிறார்கள். அதுவும் முதியோர்கள், ஊனமுற்றவர்கள் கூட செய்யும் வகையில் யோகாசனங்களை சில மாற்றங்கள் செய்து எளிமைப்படுத்தி மகரிஷி அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்.
வடக்கே சிவ பக்தர்கள் செய்யும் சாஸ்டாங்க நமஸ்காரம் கூட அதில் இடம் பெற்றிருக்கிறது. இங்கே ஆலயங்களில் போய் விழுந்து வணங்குபவர்கள் யாரும் அதை முறைப்படி செய்வதில்லை. யாரும் கற்றுக் கொடுப்பதும் இல்லை. எனவே அறிவாளிகள் அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்து உண்மையை மறைத்து விட்டார்கள். கொடிமரத்தின் முன் பலி பீடத்தருகே கீழே விழுந்து வணங்கி நம் ஆணவத்தை அங்கே விட்டு விட்டு ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என்று வார்த்தை ஜாலம் காட்டி விட்டார்கள். வேதாத்ரியத்தில் மகராசனம் பகுதியில் இந்த நமஸ்காரம் இடம் பெற்றுள்ளது. இந்த நமஸ்காரத்தை முறைப்படி செய்வதால் நம் கழுத்தெலும்பு மற்றும் முதுகுத் தண்டு வலுவடைவதால் தியானம் செய்யும் போது நாம் அதிக நேரம் நிமிர்ந்து உட்கார முடியும் என்பதே அந்த நமஸ்காரத்திற்கான உண்மையான காரணம்.
ஜோதிர் லிங்கங்கள் என்ற வீடியோக்களை வலைத்தளத்தில் தரவிறக்கம் செய்து பார்த்துக் கொண்டிருந்த போது பக்தர் ஒருவர் இந்த நமஸ்காரம் செய்வதைப் பார்த்த போது எனக்கு இந்த உண்மை புரிய வந்தது. இது நம் வேதாத்ரியத்தில் தரப்படும் உடற்பயிற்சியல்லாவா ? என்று ஆச்சர்யப்பட்டு, அதைக் குறித்து தேடிய போது இந்த உண்மை புலனாகியது. ஆஸ் என்றால் அசைவற்று ஒரு நிலையில் இருப்பது என்று பொருள். யோகாசனம் என்றால் யோகத்தில் ஈடுபடுபவர்கள் உடல் எந்த வித உபாதைகளும் இல்லாமல் கற்சிலை போல் ஆடாமல் இருக்க வேண்டி செய்யப்படும் பயிற்சியாகும். அப்படி இருந்தால் மட்டுமே மனம் ஒரு நிலையில் குவியும்.
தியானம் செய்பவர்களுடைய முதுகெலும்பு, கழுத்து, தலை மூன்றும் நேர் கோட்டில் இருக்க வேண்டும். அப்படி உட்கார்ந்தால் மட்டுமே இரத்தம் மூளைக்கு சீராகப் பாயும். சிலர் உட்காரும் போது நிமிர்ந்து உட்காருவார்கள். ஆனால், கொஞ்ச நேரத்தில் அவர்களை அறியாமலேயே கூனிக் குறுகி விடுவார்கள். அப்படி கூன் விழுந்தது போல் அமர்ந்தால் மூளைக்குப் போகும் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. தடைப்படும். இதனால் மனம் ஒருமைப்பட சிரமப்பட வேண்டிய நிலை உருவாகும். மேலும் மார்பு நிமிர்ந்து இல்லாததால் மூச்சு அடங்காது. இதனால் பிராண வாயு பற்றாக் குறை ஏற்பட்டு மனம் அலைபாயத் துவங்கும். உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்பவர்கள் மட்டுமே நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார முடியும். கூனிக் குறுகி உட்கார்ந்து எத்தனை ஆண்டுகள் தியானம் செய்தாலும் மனம் குவியாது. குண்டலினி யோகத்தில் விழிப்பு ஏற்படாது.
அது போல கண்களும் தியானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்கள் அசைந்தால் பிராணன் அசையும். அதற்காகத் தான் தியானத்தின் போது புருவ நடுவையோ, மூக்கு நுனியையோ பார்த்தபடி அமரச் சொல்கிறார்கள். அப்படி கண்களை அசைக்காமல் அமர்ந்தால்தான் மனம் எளிதில் வசப்படும். சுவாசமும் கட்டுப்படும். ஆக்கினையில் ஆற்றல் பெருகும். மூக்கு நுனியை பார்த்தபடி கண்கள் அசையாமல் இருந்தால் சுவாச எண்ணிக்கை குறைந்து மனோ சக்தி பெருகும். சின் முத்திரை வைத்து அமர்வதாலும் பல நன்மைகள் விளையும். கை ஓரங்களில் ஓடும் இதயத் துடிப்பைக் குறைக்கும் நரம்புகள் முழங்கால்களில் அழுத்தப்படுவதால் இதயம் மற்றும் நுரையீரலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, மூச்சின் வேகமும் குறைந்து மனம் அமைதி அடையும். மேலும் இடது கை கட்டை விரல் மூளையின் வலது பாகத்தோடும், வலது கை கட்டை விரல் மூளையின் இடது பாகத்தோடும் தொடர்புடையதாகும். சின் முத்திரையில் ஆள்காட்டி விரலால் இரு கட்டை விரல்களும் நன்கு அழுத்தம் பெறுவதால், மூளையின் எல்லாப் பகுதிகளிலும் மின் காந்தத் தூண்டல் ஏற்படுகிறது. இதனால் உடலின் இருபக்க இயக்கங்களும் சமப்படுத்தப்பட்டு உடல் எந்த உபாதிகளும் இல்லாமல் விளங்கும். எனவே மனம் எளிதில் ஒருநிலைப்படும்.
தியான ஆசனங்களில் பத்மாசனம், வஜ்ராசனம், சித்தாசனம் ஆகிய மூன்று ஆசனங்களே பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகின்றன. அதிலும் வஜ்ராசனத்தை அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனையின் போது கடைபிடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஆசனத்தினால் வஜ்ரநாடி அழுத்தம் பெருவதால் இது தியானத்திற்கும், பிரார்த்தனைக்கும் ஏற்ற ஆசனமாகும். இதனால் இடுப்பு முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் வலுவடைகின்றன. இந்த ஆசனம் வஜ்ராயுதம் போன்ற வலிமையை உடலுக்குத் தருவதால் இதற்கு வஜ்ராசனம் என்று பெயர். இந்த ஆசனத்தினால் காம உணர்வு கட்டுப்படும். இதனால் விந்து சக்தி ஓஜஸாக மாறி உடலையும் மனதையும் வலிமைப்படுத்துகிறது. பத்மாசனத்தில் அமர்ந்த யோகியைக் கவனித்துப் பாருங்கள் , முக்கோண வடிவம் தோன்றும். இந்த முக்கோண வடிவமானது உடலில் மின்காந்த சக்தியை தேக்கி வைப்பதோடு விரையத்தையும் தடுக்கும்.
தன்தரையில் அமரக் கூடாது. கோரைப் பாய், பிளாஸ்டிக் பாயை விரிப்பாகப் பயன்படுத்தகப் கூடாது. தர்ப்பைப் பாய் மிகவும் உகந்ததாகும். இப்படி, எப்படி உட்கார்வது, எங்கே உட்காருவது, எதன் மீது உட்காருவது, எந்த நேரத்தில் உட்காருவது என்றெல்லாம் பலவிதமான விதிகளை ரிஷிகளும், சித்தர்களும் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அவற்றை ஓரளவேனும் கடைபிடித்தால் மட்டுமே மேன்மையடைய முடியும் என்பது உறுதி.
No comments:
Post a Comment