செல்லப்பிராணி
என்றாலே 'சட்’டென நினைவுக்கு வருவது, நாய்தான். ரகம் ரகமாக வெளிநாட்டு
நாய்கள் அழகுக்காக வளர்க்கப்பட்டாலும், எப்போதுமே நம்நாட்டு
ரக நாய்களுக்கு தனி மவுசு உண்டு. காரணம், அவற்றை செல்லப்பிராணிகளாக
வளர்ப்பதோடு, கொஞ்சம் பழக்கினால், வேட்டை, காவல் போன்ற பணிகளிலும்
ஈடுபடுத்த முடியும். குறிப்பாக, தமிழ்நாட்டில், சிப்பிப்பாறை, ராஜபாளையம்,
கோம்பை, கன்னி போன்ற நாட்டு ரக நாய்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டு ரக நாய்களை வளர்த்து லாபம்
ஈட்டி வருகிறார், ஜான் ஆர்தர்.
திருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள மாறாந்தை எனும்
ஊரில் 'டேவிட் ஃபார்ம்’ என்ற பெயரில் நாட்டு நாய்கள் பண்ணையை
வைத்திருக்கிறார் ஜான் ஆர்தர். இந்தப் பண்ணையில் மேலாளராக இருப்பவர்
அந்தோணி ஷெட்டி. ஒரு மாலைவேளையில், பண்ணையில் நாய்களோடு கொஞ்சி விளையாடிக்
கொண்டிருந்த அந்தோணி ஷெட்டியைச் சந்தித்தோம். ''நாட்டு நாய்கள், நம்ம
மண்ணோட சொத்து. அதை அழிஞ்சி போகாம பாதுகாக்கத்தான், இந்த பண்ணையை ஜான்
ஆர்தர் தொடங்கினாரு. அவர், நினைச்சது போலவே, பண்ணைய சிறப்பா நடத்திக்கிட்டு
வர்றோம்...'' என்று அறிமுகம் சொன்ன அந்தோணி ஷெட்டி விரிவாகப் பேசத்
தொடங்கினார்.
''சின்னவயசுலயே எனக்குப் பிராணிகள் வளர்ப்புல ஆர்வம்
அதிகம். மிட்டாய் வாங்க கொடுக்குற காசை சேர்த்து வெச்சு, கோழிக்குஞ்சு
வாங்கிட்டு வந்துடுவேன். குறிப்பா, நாய்கள் மேல ரொம்ப பிரியம். நாட்டு
நாய்ல இருந்து, பல ரக நாய்களையும் வாங்கி வளர்த்திருக்கேன். கோவாவுல
தனியார் கப்பல் கம்பெனியில சூப்பர்வைசரா இருந்தேன். அங்க இருந்து
போபாலுக்கு மாத்தினாங்க. 'வேலை பார்த்தது போதும் ஊரைப் பார்க்க
வந்துடுங்க’னு வீட்டுல சொன்னதால, திருநெல்வேலிக்கே திரும்பி, எஸ்.டி.டி
பூத், ஜெராக்ஸ் கடை வெச்சேன். கூடவே நாய் வளர்ப்பையும் தொடர ஆரம்பிச்சேன்.
ஒரு நண்பர் மூலமா நாட்டு ரக நாய்கள் பத்தியும்,
அதுங்கள்லாம் அழியற நிலையில இருக்கறதையும் கேள்விப்பட்டேன். இதையெல்லாம்
பாதுகாக்கிற வகையில, 'தமிழ்நாட்டுப் பாரம்பரிய ரகங்களை மட்டும்தான்
வளர்க்கணும்'னு முடிவு பண்ணினேன். பள்ளி, கல்லூரி நண்பர்களைவிட... நாய்கள்
வளர்ப்பு மூலமா கிடைச்ச நண்பர்கள்தான் அதிகம். அப்படி அறிமுகமானவர்தான்,
இந்தப் பண்ணையோட உரிமையாளர் ஜான் ஆர்தர். அவருக்கும் நாய் வளர்ப்புல ரொம்ப
ஈடுபாடு. எனக்கு நாட்டு ரக நாய்கள் மேல இருந்த ஈடுபாட்டை பாத்துட்டு,
இந்தப் பண்ணையிலேயே இடம் கொடுத்து நாய்களை வளர்க்கச் சொல்லிட்டார். தன்னோட
பண்ணைக்கு என்னை மேலாளராவும் ஆக்கிட்டார். இப்போவரைக்கும் நாய்
வளர்ப்புக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் அவர்தான் செஞ்சுக்கிட்டு
இருக்கார். இப்போ, 9 சிப்பிப்பாறை (5 பெண் 4 ஆண்), 4 கன்னி (3 பெண் 1 ஆண்)
மற்றும் 3 கேரவன் பெண் நாய்கள் (மகாராஷ்டிர இனம்) என மொத்தம் 16 நாய்கள்
இருக்கு'' என்ற அந்தோணி ஷெட்டி, தனது வளர்ப்பு முறைகள் பற்றிச் சொன்னதைப்
பாடமாகத் தொகுத்துள்ளோம்.
காலை பால்... மாலை உணவு!
'தினமும் காலையில் 8 மணிக்கு ஒவ்வொரு நாய்க்கும் அரை
லிட்டர் பாலை (அரை லிட்டர் பாலுக்கு 100 மில்லி தண்ணீர் கலந்து) காய்ச்சி,
ஆறவைத்து கொடுக்கவேண்டும். தண்ணீர் கலக்காவிட்டால், வயிற்றுப்போக்கு வரும்.
மாலை 3 மணிக்கு 300 கிராம் சாதம், 300 கிராம் கோழிக்கறி. கொதிக்கும்
உலையில் அரிசி போடும்போதே, கோழி இறைச்சியையும் சேர்த்துப் போட்டு
சமைக்கலாம். சாதத்தில் உப்பு சேர்த்தால், தோல் நோய் வரும். எலும்பு கலந்த
கறியாக இருந்தால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்கும். காலை, மாலை
மற்றும் இரவு மூன்று வேளையும் சுத்தமான தண்ணீரைக் குடிக்கக் கொடுக்க
வேண்டும்.
நோய்கள் கவனம்!
இந்த ரக நாய்களை 'பார்வோ’, 'டிஸ்டம்பர்’ என்கிற
இரண்டுவிதமான நோய்கள் அதிகமாகத் தாக்கும். கண்ணில் பீளை வடியும், உடல் சூடு
அதிகரிக்கும். சுறுசுறுப் பில்லாமல், சாப்பிடாமல் சோம்பலாகவே படுத்துக்
கிடக்கும். உள்ளங்கால் சொரசொரப் பாக இருக்கும். இப்படி இருந்தால் அது,
'பார்வோ’ நோயின் அறிகுறி. உடனே கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, ஊசி போட
வேண்டும். நாய் நிற்கும்போது தலையைத் தூக்கிப் பார்க்காமல், தொங்க போட்ட
நிலையில் தலை ஆடிக் கொண்டே இருந்தால், டிஸ்டம்பர் நோய்க்கான அறிகுறி. லேசாக
தலை ஆடும்போதே அதற்குரிய ஊசியைப் போட வேண்டும். இல்லாவிட்டால், உயிரிழப்பு
ஏற்படக்கூடும். உண்ணிகள் வராமல் இருக்க, நாய்க் குடிலைச் சுற்றி தடுப்பு
மருந்தைத் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு நாய்க்கும் ஆண்டுக்கு ஒரு தடவை ரேபிஸ்
தடுப்பூசி கண்டிப்பாகப் போடவேண்டும். நாய்களை வாரத்துக்கு ஒரு முறைதான்
குளிப்பாட்ட வேண்டும்.
60 நாள் குட்டிகள் விற்பனை!
நாய்கள்,
6 மாதங்களுக்கு ஒரு முறை பருவத்துக்கு வரும். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை
மட்டும் ஆண் நாயோடு சேர்த்து, இனப்பெருக்கம் செய்தால், தரமான குட்டிகள்
கிடைக்கும். ஆண் நாயோடு சேர்ந்த நாளிலேயே, பெண் நாயை தனியாகப் பிரித்து
அடைக்க வேண்டும். 63 நாளில் குட்டிப் போடும். சராசரியாக ஒரு நாய்
வருடத்திற்கு 6 முதல் 8 குட்டிகள் வரை போடும். 11 நாளில் இருந்து 13
நாட்களுக்குள் குட்டிகள் கண் திறக்கும். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைதான்
பால் சுரக்கும். குறைவாக குட்டி போட்டிருந்தால், கொஞ்சம் கூடுதல் நாட்கள்
பால் சுரக்கும். தாயிடம் பால் சுரப்பு நின்றுவிட்டால், மாட்டுப்பாலை
வாங்கி, காய்ச்சி ஆற வைத்து, 100 மில்லி பாலுக்கு ஒரு ஸ்பூன் என்கிற
விகிதத்தில் கேழ்வரகு மாவு கலந்தும் நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை
குட்டிகளுக்குக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 45-ம் நாளிலும், 60-ம்
நாளிலும் தடுப்பூசி போட வேண்டும். 60 நாளைக்கு மேல் குட்டிகளை விற்பனை
செய்யலாம்.'
ஆண்டுக்கு 2 லட்சம்!
நிறைவாக விற்பனை வாய்ப்புப் பற்றிப் பேசிய அந்தோணி
ஷெட்டி, ''பண்ணையில இருக்குற 11 பெட்டைகள் மூலமா வருஷத்துக்கு சராசரியா 30
குட்டிகள். கிடைக்குது. சராசரியா ஒரு குட்டி 8 ஆயிரம் ரூபாய்க்கு விலை
போகுது. அதே சமயம், ஒரு வருஷம் வைச்சிருந்து வித்தா குட்டி ஒண்ணு ரூ. 50
ஆயிரத்துக்கு கூட விலை போகும். எப்படி பார்த்தாலும், வருஷத்துக்கு 4 லட்ச
ரூபாய் கிடைக்கும். இதுல, உணவு, மருந்து, பராமரிப்புனு 2 லட்ச ரூபாய்
செலவு போக, 2 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. இந்தப் பண்ணையை லாப நோக்கத்துல
நடத்தல. நம்ம நாய்கள் இனத்தைக் காப்பாத்ததான் பண்ணையை வைச்சிருக்கோம்.
இதையே, தொழில்முறையா நாட்டு நாய் பண்ணையை நடத்துனா, இன்னும் பல மடங்கு
லாபம் கிடைக்கும்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.
நாய்களுக்கு மரியாதை!
உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய் இனங்கள் உள்ளன.
ஆனால், 350 வகை நாய் இனங்களுக்குத்தான் அங்கீகாரம் உள்ளது. அதில் ஆறு வகை
இந்திய நாய்கள். இந்த ஆறில் கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை மற்றும்
ராஜபாளையம் நாய்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற
இடத்தில் உள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும், தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து, ராஜபாளையம் மற்றும்
சிப்பிப்பாறை ஆகிய இன நாய்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றன.
இந்தவகை பாரம்பரிய ரக நாய்களை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு நினைவு
தபால்தலை வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு,
அந்தோணி ஷெட்டி,
செல்போன்: 93459-56565
அந்தோணி ஷெட்டி,
செல்போன்: 93459-56565
No comments:
Post a Comment