Wednesday, October 8, 2014

ஒருவர் உடல்தானம் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?




ஒருவர் இறந்தபின் தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பாடத்திற்கு பயன்படட்டுமே என்று நினைத்தால் இந்த பகுதி அவர்களுக்கானதுதான். மருத்துவக் கல்லூரிக்கு அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடக்கும் இறந்த உடல்களே அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதவிர சிலர் உடல்தானம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு உடல் உறுப்பு தானமே அதிகளவில் நிகழவேண்டியிருக்கிறது. ஏனெனில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மெழுகில் செய்யப்பட்ட மனித உடலை வைத்துப் பாடம் நடத்தும் முறை வந்துவிட்டது. இது பெரும்பாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்தான் நடைமுறையில் இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையிலிருந்து உடல்கள் கிடைத்து வருகின்றன. எது எப்படியோ ஒருவர் உடல்தானம் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? போன்ற விவரங்களை இங்கே பார்ப்போம்.
எங்கே விண்ணப்பிப்பது?
* அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் இதற்கான விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அரசு மருத்துவக் கல்லூரி டீனையோ(Deen) அல்லது உடற்கூறியல் துறைத் தலைவரையோ (Anatomy HOD) அணுகி விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும்.
* விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படத்தை ஒட்டி பெயர், முகவரி, அடையாளங்கள், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இரண்டு பேர் சாட்சி கையெழுத்திட வேண்டும்.
* விண்ணப்பத்தில் ’நான் எனது இறப்புக்குப் பிறகு உடலை தானம் செய்ய விரும்புகிறேன்’ என்று எழுதி கையெழுத்திட வேண்டும். அத்துடன் மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் சம்மதம் வேண்டும். கணவன் என்றால் மனைவி, மனைவி என்றால் கணவன், அதற்கடுத்த நிலையில் மகனோ, மகளோ, அதற்கும் அடுத்த நிலையில் அண்ணன் உறவுகள் இப்படி அந்த விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் உறவுகளில் முன்னுரிமை தரக்கூடிய உறவொன்றை தேர்வு செய்யலாம்.
* இதற்கான ரசீது ஒன்று கொடுப்பார்கள். அதனைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
உடலை எப்படி ஒப்படைப்பது?
உடல் தானம் செய்த நபர் இயற்கையாக மரணமடைந்தால் மட்டுமே மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும். எனவே தானம் செய்தவர் இயற்கையாக மரணம் அடைந்தார் என்ற சான்றிதழ் பெறவேண்டும். அல்லது மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவித்தால் அவர்களே வந்து உடலைப் பெற்றுச் செல்வார்கள். அல்லது நாமாகவும் விண்ணப்ப நகலுடன் இறந்த உடலையும் மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கலாம். வேலை நாட்களாக இருந்தால் மருத்துவக் கல்லூரியிலும், விடுமுறை நாட்களாக இருந்தால் அரசு மருத்துவமனையிலும் ஒப்படைக்கலாம்.
யாரெல்லம் உடல்தானம் செய்ய முடியாது?
v உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பே கிடையாது. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும், ஹெபாடைட்டிஸ் பி – இரண்டாம் நிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உடல்தானம் செய்ய முடியாது.
v உடல்தானம் செய்யாதாவர் இறந்தால் அந்த உடலை அவரது உறவினர்கள் தானம் செய்ய முடியாது.
உடல் தானம் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு
• தானம் செய்ய ஒப்புக்கொண்ட நபர் இறந்த பின் அரசு மருத்துவமனையிலோ, மருத்துவக் கல்லூரியிலே ஒப்படைக்கப்படுவார்.
• உடல் கிடைத்ததும் மொட்டை அடித்து புருவ முடிகளை நீக்கி விடுவார்கள். இதனால் யார் என்ற அடையாளம் மறைக்கப்பட்டுவிடும்.
• பின்னர் உடலிலுள்ள இரத்தத்தை வெளியேற்றி செயற்கை இரத்தம் ஏற்றி பத்து நாட்கள் அல்லது அதற்கும் மேல் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். இதனால் ஒருவரின் அடையாளம் முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும்.
• உடல் தானம் செய்ய விரும்புவோர் தமது உடலை மற்றவர்கள் பார்ப்பார்களே என்று கூச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
• ஆனால் இப்போதைய மருத்துவத் துறையின் தேவை உடல் உறுப்பு தானமே. உடல் உறுப்பு தானமும், உடல் தானமும் ஒன்றல்ல.


இவள் பாரதி
நன்றி – புதிய தலைமுறை

No comments:

Post a Comment