Thursday, October 9, 2014

TIME MACHINEல் நீங்களும் வாங்க என்கூட


 

ஒரு சின்ன TRIP போகலாமா TIME MACHINEல் நீங்களும் வாங்க என்கூட ஒவ்வொரு ஊருடைய பெயரும் காலப்போக்கில் ஏகப்பட்ட மாற்றங்களை சந்திக்கும், எனக்கு தெரிந்து உலகத்தில் இத்தனை ஆண்டுகளாய் பெயர் மாற்றம் இல்லாமல் இருக்கும் ஊர் இதுதான். கிமு 3ம் நூற்றாண்டு எழுதப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் கல்வெட்டு இன்றும் இருக்கிறது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்து பிறந்து இப்போது 2014+ ஆண்டுகள் ஆகிவிட்டது. சரி வாங்க போகலாம் மதுரைக்கு.

சரித்திரத்தை காலத்திரையை தாண்டி பார்ப்பது எப்போதுமே அற்புதமான ஒன்று. வாங்க நான் ஜனனி உங்களுக்கு காட்டுகிறேன் அந்த காலத்திற்கு அப்பாற்பட்ட அந்நகரின் உயிர்த்துடிப்பை.

இப்போது நாம் இருப்பது சங்ககால பாண்டிய நாட்டின் தலைநகர் எல்லையில். அதோ குதிரைகளில் பாண்டிய நாட்டு வீரர்களின் ஒருபிரிவு, முன்வீரனின் கையில் இருக்கும் நெடிய ஈட்டியின் உச்சியில் மீன் கொடி பறக்கிறது. முறுக்கிய மீசைகொண்ட வலியதோள் படைத்த வீரர்களின் இடையில், போர்வாளும் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பூமராங்கை ஒத்த வளைதடியும் , கையில் மிக நெடிய வேல்கம்பும் இருக்கிறது. அந்தக் குதிரைகள் அரேபிய தீபகற்பத்தில் இருந்து வந்தவை. இவர்களை மீறி நாம் மதுரைக்குள் நுழைவது இயலாத காரியம், வாருங்கள் அவர்களின் அனுமதி பெற்று நுழைவோம்.

அதோ அடர்த்தியான வனத்தையும் தாண்டி இங்கிருந்தே அந்த வானுயர்ந்த கோபுரங்களை பார்க்க முடிகிறது. சுழித்தோடும் வைகை நதி, அதில் மீன்பிடிக்கும் சிலர், சமணத் துறவிகள், வெற்றிலை வியாபாரம் செய்யும் பெண்கள், எளிய மனிதர்கள், சிறுவர்கள், பாம்படம் அணிந்த பெண்கள். மதுரை நகரின் கடந்தகாலத்தை பார்ப்பது நெகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.

அதோ இப்பெருநகரை பகைவரிடம் இருந்து காக்கும் மிக ஆழமான, முழுவதும் நீர் நிரம்பிய அகழியும், அதைக்கடந்து மிக மிக நெடிதுயர்ந்த, பாம்பைப்போல வளைந்து செல்லும் நீளமான சுற்றுக்கோட்டை மதில் சுவர். உச்சியில் பாண்டிய வில் படைவீரர்களின் நடமாட்டத்துடன் தெரிகிறது. மதிலின் ஆங்காங்கே எதிரிகளின் முற்றுகையை ஊடுருவலை முறியடித்து அழிக்கும் யவனப் பொறிகளும் (பண்டைய கிரேக்கர்கள் வடிவமைத்த எந்திரங்கள்) அமைந்துள்ளன. சரி அதோ கோட்டை மதிலின் வாயில், நாம் உள்ளே செல்வோம். அடேயப்பா வாய்பிளந்து நிற்கும் அசுரனைப்போல எவ்வளவு பெரிய வாயில் இது! போரில் வென்று பாண்டியப் பெரும்படை மதுரை நகர் திரும்பும்போது, முன்னணியில் வரும் மலைபோன்ற யானைமீது அமர்ந்த பாண்டியவீரன் கையில் மிக உயர்ந்த வெற்றிக்கொடியை ஏந்திச்செல்லும் அளவுக்கு, குன்றைக் குடைந்தாற்போன்ற வாயில் இது.

இதோ நகரில் நுழைந்துவிட்டோம், நமது முன்னோர்களின் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்கு பறைசாற்றும் அடையாளமாகத் திகழும் நடுவில் அமையப்பட்ட கோவிலும் அதைச்சுற்றி ஒழுங்குற அமைந்த தெருக்களும் கண்ணில் விரிகின்றன.

சிவன், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி என கடவுளர்கள் பலருக்கும் கோவில்கள் தென்படுகின்றன. நெடிதுயர்ந்த நாற்கோபுரங்கங்கள், அரண்மனை மாடங்கள், தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ் சாலைகள், நாளங்காடி, அல்லங்காடி அனைத்தும் நான் உயிரோட்டத்துடன் பார்க்கிறேன். மாநகர் மதுரை எப்போதும் மணக்கோலம் பூண்டது போன்ற தோற்றத்துடன் திகழ்வதாக இளங்கோவடிகள் "மணமதுரை" என்று (சிலம்பு 24:5) குறிப்பிட்டது இப்போது விளங்குகிறது எனக்கு.

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் தனது நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் தான் "கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்" என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தனிஸின் வருகைக்குப்பிறகு, ஏராளமான ரோமானியர்களும் கிரேக்கர்களும் பாண்டியர்களுடன் வணிகத்தொடர்பு வைத்திருக்கிறார்கள். எகிப்திய அரசி, பேரழகி கிளியோபாட்ராவுக்கு பாண்டிய நாட்டில் இருந்து முத்து, மயில்தோகை, அகில், சந்தனம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியானதாக கிரேக்க நாட்டின் பண்டைய இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன.

ஒரு பழந்தமிழ் நகரத்தை என்னோடு வந்து கண்டுகளித்த உங்களுக்கு நன்றி நண்பர்களே

No comments:

Post a Comment