Tuesday, September 3, 2013

ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்... நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...!



தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்...

தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.
கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.

தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.

தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.

'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம் பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

எருமை எதையும் கழிக்காது!

நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.

ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

ஒரே ஈத்துல எடுத்துடலாம்!

'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.

செலவில்லாமல் உணவு!

பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.

No comments:

Post a Comment