வியாழனுக்கு 63 துணைக்கோள்கள் உள்ளன.அவற்றுள் ஒன்று யூரபா (Europa ) நிலவின் அளவை விடச் சற்றுப் பெரிதான இந்த கிரகத்தில் சூரியக் குடும்பத்தில் உள்ள மாபெரும் அற்புதம் ஒன்று காணப்படுகிறது...அதான் தண்ணீர். அதுவும் சாமானியமாக இல்லை. யூரபாவில் மிகப்பெரும் கடல் அளவில் திரவம் உள்ளது.
இந்தச் செய்தி அறிவியல் உலகில் மாபெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. யூரபாவில் -300 டிகிரி குளிர் நிலவுவதால் அங்கே திரவநிலையில் தண்ணீர் இருக்கும் என்பதை அறிவியலாரால் கற்பனையில்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்; ஆனால் பேரதிசயமாக யூரபாவில் - 300 டிகிரி திரவநிலையில் நீர் உள்ளது. காரணம் ஜியோதெர்மல் எனெர்ஜி ( geothermal energy) ...குழம்பவேண்டாம்.
பூமியில் உள்ள கடலில் அலைகள் உருவாக நிலவின் ஈர்ப்பு விசையே காரணம் என அறிவோம். பூமியை விடப் பலமடங்கு சிறிய நிலவு பூமியைக் கவர்ந்து இழுக்க முயன்று பூமியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூமியை விடப் பல மடங்கு பெரிய ஜுபிடர் கிரகம் நிலவை ஒத்த யூரபாவில் எத்தனை குழப்பத்தை ஏற்படுத்தும் என எண்ணிப் பாருங்கள்... ஜுபிடரின் ஈர்ப்பு விசை யூரபாவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி ஜூபிடரின் ஈர்ப்பு விசையும், யூரபாவின் ஈர்ப்பு விசையும் பொருதும்போது மிக உயர்நிலை வெப்பம் யுரபாவின் அடியாழத்தில் உருவாகிறது. அந்த வெப்பம் யுரபாவின் சமுத்திரத்தைச் சூடாக்கி திரவ நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் மேற்புறத்தில் -300 டிகிரி F குளிர் நிலவுவதால் சமுத்திரத்தின் மேற்புறம் பனியாக உறைந்து காணப்படுகிறது.
ஆக யூரபாவில் வெப்பம் உண்டு, சமுத்திரம் உண்டு....உயிரை உருவாக்கும் மூலக்கூறுகளைக் (Molecules) கொண்டுவந்து சேர்க்கும் விண்கல் (வால் நக்ஷத்ரம்) தாக்குதலும் உண்டு.
பூமியில் உருவான முதல் உயிரினம் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தது என்றொரு கோட்பாடும் உண்டு. ஆம்..நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் கடல் இருந்தது, ஆறுகள் ஓடின.
அப்போது செவ்வாயைத் தாக்கிய விண்கல் ஒன்று அதனுள் பேரதிர்வை ஏற்படுத்தியதாகவும், அப்போது செவ்வாயில் இருந்த கற்கள் விண்வெளியில் தூக்கி எறியப் பட்டதாகவும், அதில் ஒரு கல் பூமியில் வந்து விழுந்ததாகவும், அந்தக் கல்லில் ஒரு சிறு உயிரி ஒட்டிகொண்டு வந்து பூமியில் பல்கிப் பெருகியதாகவும் ஒரு கோட்பாடு உண்டு. இது உண்மை எனில் நாம் அனைவரும் ஏலியன்களே.
யூரபாவிலும் இதேபோல் விண்கல் தாக்குதல்கள் உண்டு என்பதால் யூரபாவின் சமுத்திரத்தில் ஏலியன் உயிர்கள் இருக்கலாம் என்ற கருத்தாக்கம் அறிவியல் உலகில் உருவாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சூரிய ஒளிபடாமல் பனிக்கட்டிகள் சமுத்திரத்தை முழுவதும் மூடியிருப்பதால் உயிரினம் அங்கே வாழும் சூழல் இருக்காது என முன்பு அறிவியலார் நம்பினர். அன்றைய காலகட்டத்தில் சூரிய ஒளி இல்லாமல் உயிர்கள் வாழஇயலாது எனக் கருதப்பட்டது; ஆனால் பூமியில் பசிபிக் சமுத்திரத்தின் அடியாழத்தை ஆராய்ந்த உயிரியலார் (biologists) அங்கே சூரிய ஒளியே இல்லாத பிரதேசத்திலும் ஜியோதெர்மல் எனெர்ஜி (geothermal energy) மூலம் உயிர்கள் வாழ்வதைக் கண்டு பிடித்தனர். இது விண்வெளி ஆய்விலும் பரபரப்பைக் கிளப்பியது.
பூமியின் அண்டார்க்டிகாவிலும் உயிரிகள் உள்ளன....
சூரிய ஒளியே படாத இடத்தில் திரவநிலை சமுத்திரத்தில் பூமியில் ஜியோதெர்மல் எனெர்ஜி மூலம் உயிர்கள் பல்கிப்பெருக முடியும் என்றால் யுரோபாவிலும் பனிக்கட்டிக்கு அடியே திரவநிலை சமுத்திரத்தில் ஏன் உயிர்கள் வாழக்கூடாது ? உயிரினம் உருவாக, வாழ,பல்கிப்பெருகத் தேவைப்படும் எல்லாச் சூழல்களும் யூரபாவில் நிலவுகின்றன. உயிரினம் என்றால் ஏதேனும் கடல் கன்னி, திமிங்கிலம், நாலு கால் மனிதன் எனக் கற்பனை செய்ய வேண்டாம். ஒரே ஒரு மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ், பாசி, செடி என எதுவாக இருந்தாலும் அதுவும் உயிர்தான். பூமிக்கு வெளியே ஏதோவொரு கோளில் ஒரே ஒரு சிற்றுயிர் இருப்பது ஊர்ஜிதமானாலும் அது நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்ததற்கொப்பான அரிதான கண்டுபிடிப்பு.
இரு இடங்களில் உயிர்கள் இருந்தால் பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் மலிந்திருக்கும் என நிரூபணமாகும். பூமியில் உயிர் தோன்றியது விபத்து அன்று; அந்தச் சூழல் நிலவும் எந்த கிரகத்திலும் உயிர்கள் உண்டு என நிரூபணமானால் அப்புறம் பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் இருக்கும் என்பது உறுதி ஆகும். பிரபஞ்சத்தில் கணக்கு வழக்கற்ற எண்ணிக்கையில் அண்டங்கள் (galaxies) உள்ளன. ஒவ்வொரு காலக்சியிலும் ஆயிரம் கோடிக் கோள்கள். ஆக எண்ணற்ற ஏலியன் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பு உண்டு; ஆனால் இதை நிரூபிக்க நமக்குத் தேவைப்படுவது ஒரே ஒரு ஏலியன் (Alien) உயிரினம். அது யூரபாவில் உண்டா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?
யூரபாவுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்புவது. அது யுரபாவின் மேற்பரப்பில் இறங்கி அங்கே ஒரு சுரங்கம் வெட்டும். அதனுள் நீரில் நீந்தக்கூடிய ரோபோ ஒன்று காமராவுடன் இறங்கி நீந்தியபடி விடியோ எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும். அந்த வீடியோவில் ஏலியன் உயிரினம் ஒன்றே ஒன்று தட்டுப்பட்டாலும் அது அறிவியலில் வரலாற்றுத் திருப்புமுனையாக அமையும்.
ஆகா அருமையான திட்டமா இருக்கு. யூரபாவுக்கு ராக்கெட் எப்பக் கிளம்புகிறது என்று கேட்கிறீர்களா ???
இப்போதைக்குக் கிளம்புவதாக இல்லை.காரணம் இப்படி எளிதான திட்டம் கையில் இருந்தாலும் அதை நிறைவேற்றும் நுட்பம் நம்மிடம் இன்னும் இல்லை. முப்பது கோடி மைலுக்கு அப்பால் உள்ள கோளுக்கு ஒரு ராக்கட்டை அனுப்பி, அங்கே மைனஸ் 300 டிகிரி F குளிரில் பாறையாக உறைந்து கிடக்கும் பனியில் பல மைல் ஆழத்துக்குக் குழிதோண்டி, ரோபோவை கடலுள் இறக்கி,,, புகைப்படம் எடுத்து....
இதைச் செய்யும் நுட்பம் நம்மிடம் இன்று இல்லை.
ஆனால் இன்னும் 20, 30 ஆண்டுகளில் அந்த டெக்னாலஜி நம்மிடம் கிடைக்கலாம். இப்போதுதான் அண்டார்டிகா பனிப்பரப்பைத் துளைத்துச் சுரங்கம் தோண்டி உள்ளே இருக்கும் சமுத்திரத்தை ஆராயும் முயற்சியில் அறிவியலார்
வெற்றியடைந்துள்ளனர்
No comments:
Post a Comment