Monday, September 16, 2013

செலரி விவசாயம்



செலரி ஒரு நல்ல மூலிகைச் செடியாகும். பச்சை நிறச்சாறு அதிகம் கொண்டுள்ளது. வறண்ட பகுதியில் பாசனப்பயிராக இதைப் பயிரிடலாம்.

வட இந்தியாவில், குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் ஷஹரன்பூரிலும், ஹரியானாவில் பானிப்பட்டிலும், பஞ்சாபில் அமிர்தசரஸிலும் இது அதிகமாக விளைகிறது. செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அங்கு நாற்றங்கால் நடவு செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வயலில் நடவு மேற்கொள்ளப்படுகிறது. விதைகள் மூலமாகவே செலரி விதைக்கப்படுகிறது. பொதுவாக கையில் எடுத்து தெளிக்கும் முறையே வழக்கத்தில் உள்ளது. விதைகள் முளைக்க 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும். விதைப்புக்காலத்தில் மண்ணில் ஈரப்பசை அவசியமாகிறது. இதனால் நல்ல முளைப்புத் திறனைப் பெறலாம். தரமான விதைகளைப் பெறுவதற்கும், மண்ணால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் "பவிஸ்டின்', "தரிம்', "கேப்டன்' ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் செலரி விதைகளை நன்றாகக் கலந்து விதைக்க வேண்டும். ஒரு கிலா விதைக்கு 25 கிராம் என்ற அளவில் மேற்கூறிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றைக் கலக்கலாம். நடவு செய்கின்ற காலத்தைப் பொறுத்து 45 முதல் 60 வரை உள்ள நாட்கள் ஆன நாற்றுக்கள் நடவிற்கு ஏற்றது ஆகும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ. முதல் 40 செ.மீ. மற்றும் செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளியில் நாற்றுக்களை நடவு செய்து உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.
மண் பரிசோதனை செய்ததன் அடிப்படையில் தேவைப்படும் சத்துக்களையும், உரங்களையும் போட்டாலே போதுமானது. என்றபோதிலும், பொதுவாக ஒரு ஹெக்டேருக்கு 15 டன் ஆர்கானிக் உரம், நைட்ரஜன் 25 கிலோ, பொட்டாஷ் 40 கிலோ ஆகியவற்றை அடி உரமாகப் போட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு, 25 கிலோ நைட்ரஜனை இரண்டு தவணைகளில் இட வேண்டும். நைட்ரஜன் சார்ந்த உரங்களைப் போடும்போது மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஈரத்தை விரும்பும் பயிர் இது என்பதால், அடிக்கடி நீர்ப்பாசனம் செய்வது அவசிய மாகிறது.

செலரி செடியை நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு, பூஞ்சாணம், வேர்ப்புழு, பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவை முக்கியமானவை ஆகும். பூச்சிகளின் தாக்குதலைத் தடுப்பதற்கு "காரட் ரஸ்ட்ஃபிளை', "செலரி வோர்ம்', "செலரி லீப் மைனர்' போன்றவை முக்கியமானவையாகும். டைமெதேட், குயினால்பாஸ், போரேட் குருணை போன்றவை கட்டுப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

விதைகள் முற்றி அடர் பிரவுன் நிறத்திற்கு மாறியவுடன் முழு செடியையும் தரை அளவில் அறுத்து அறுவடை செய்யலாம். அதிகாலை வேளையில் அறுவடை செய்வது உகந்தது. ஒரு ஹெக்டேருக்கு 10 முதல் 15 குவிண்டால் விளைச்சல் பெறலாம்.

பச்சை நிறச்சாறு நிறைந்துள்ள செலரிச்சாறு காய்கறி மற்றும் சாலட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களுக்கு வாசனை தருவதற்கு செலரியின் உலர்ந்த விதைகள் பயன் படுத்தப்படுகின்றன. செலரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கீழ்வாதத்தைக் குணப்படுத்த வல்லது. (மூலம் (ஆங்கி லத்தில்) ஆஜ்மீர், விதை வாசனைப்பொருட்களின் தேசீய மையம்)

(பின்னுரை: ஒரு வகையான தோட்டக்கீரையாகிய செலரி ஸ்பைசஸ் என்ற நறுமணப் பண்டங்களுள் ஒன்றாகும். அஜ்மோதகம், அஜ்மோலா, ரெண்டம் ஆகிய சொற்களின் மூலமும் இது குறிப்பிடப்படுகிறது. அதிகமான அளவில் உற்பத்தியாகி, ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ஐயாயிரம் மெட்ரிக் டன் வரை இது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது)

No comments:

Post a Comment