Monday, August 11, 2014

சிறப்புச்சார்பியல் கோட்பாடு பகுதி - 2

முதலாம் கருதுகோள்:


இது சற்று எளிமையான ஒன்றுதான்.

இயற்பியல் விதிகள் அனைத்துக் குறியீட்டுச் சட்டங்களிலும் மெய்யே.

அதாவது தரையில் நின்றுகொண்டு நீங்கள் ஒரு செங்கலின் நீளத்தை நீங்கள் அளந்தாலும், ஒரு தொடர்வண்டியில் பயணித்துக்கொண்டு அளந்தாலும் அது உங்களுக்கு ஒரே அளவைத்தான் கொடுக்கும்.

ஆனால், நீங்கள் தரையில் நின்றுகொண்டு தொடர்வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் செங்கல்லை அளக்க முற்பட்டால் அது வேறு அளவினைத்தரும். குழப்புகின்றதா, சரி, இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

ஒரு தொடர்வண்டி 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் ஓட்டுனரின் அருகில் இருக்கின்றீர்கள். தொடர்வண்டி ஓட்டுனர் ஒரு துப்பாக்கி வைத்துள்ளார். அந்தத்துப்பாக்கிக்குண்டின் வேகம் நொடிக்கு 5 கிலோமீட்டர் வேகம். இப்பொழுது ஓட்டுனர் தொடர்வண்டி செல்லும் திசையில் துப்பாக்கியால் சுடுகின்றார். துப்பாக்கிக் குண்டின் வேகம் என்னவென்று உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நொடிக்கு 5 கிலோமீட்டர் என்றுதானே?

சரி, இப்பொழுது நீங்கள் தரையில் நிற்கின்றீர்கள். இப்பொழுது அதேவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் தொடர்வண்டியில், அதே ஓட்டுனர்,அதே துப்பாக்கியால் சுடுகின்றார். இப்பொழுது அந்தத் துப்பாக்கிக் குண்டின் வேகம் என்னவென்று உங்களைக் கேட்டால் உங்கள் பதில், 50+5=55 அதாவது நொடிக்கு 55கிலோமீட்டர் என்றுதானே சொல்வீர்கள்?

ஆக, இயற்பியல் விதிகள் நிலையானவைதான், அந்தந்த குறியீட்டுச்சட்டத்தில். வேறொரு குறியீட்டுச்சட்டத்தில் இருந்து மற்றொரு குறியீட்டுச்சட்டத்தின் விதிகளை அளவிட்டால் அது வேறுபடும்.

இரண்டாம் கருதுகோள்:

அனைத்துக்குறியீட்டுச் சட்டங்களிலும் ஒளியின் வேகம் நிலையானது.

இதுதான் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டின் இரண்டாவது கருதுகோள். முதலாவது கருதுகோளில் சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். இப்பொழுது துப்பாக்கிக்குப் பதில் தொடர்வண்டியின் முகப்பு விளக்கு.

நீங்கள் ஓட்டுனரின் அருகே உள்ளீர்கள். ஓட்டுனர் முகப்பு விளக்கினை எரிய விடுகின்றார். இப்பொழுது ஒளியின் வேகம் என்ன? சற்றேறக்குறைய மதிப்பாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் எனக் கொண்டு அதைத்தானே சொல்வீர்கள். சரி, இப்பொழுது நீங்கள் தரையில் நிற்கின்றீர்கள். ஓட்டுனர், ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியின் முகப்பு விளக்கினை எரிய விடுகின்றார்.

இப்பொழுது உங்கள் எதிர்பார்ப்பின் படி, 3,00,000+50 = 3,00,050 அதாவது நொடிக்கு 3 இலட்சத்து 50 கிலோமீட்டர்கள் என்றுதானே சொல்வீர்கள். ஆனால் அதுதான் இல்லை. இங்கும் ஒளியின் வேகம் அதே நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள்தான் இருக்கும். முரண்பாடாகத் தெரிந்தாலும், அதுதான் உண்மை. வேகம் என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் கடக்கப்படும் தொலைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொருண்மை உள்ள ஒரு பொருளானது தன் வேகத்தினை, முடுக்கத்தின் மூலமாக அதிகரித்துக்கொள்ளவோ, தடை மற்றும் உராய்வின் மூலம் குறைத்துக்கொள்ளவோ முடியும். ஆனால், ஒளி ஒரு மின்காந்த அலை. அப்படியெல்லாம் செய்துகொள்ளாது. ஆக, ஒளியின் வேகம் தற்போதைய கணக்கின்படி நிலையான ஒன்று. (ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குள் பாயும்பொழுது வேறுபாடுகள் ஏற்படும். அதில் மாற்றமில்லை.)

சரி, இக்கோட்பாட்டினால் ஏற்படும் சில நிகழ்வுகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

No comments:

Post a Comment