மலைத்தோட்ட
விவசாயிகளின் முக்கியப் பிரச்னையே வனவிலங்குகளும், இயற்கைச்
சீற்றங்களும்தான். இதன் காரணமாக எதையும் உருப்படியாக விளைவிக்க
முடியாமல் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு தற்போது நன்கு கைகொடுத்து
உதவி வருகிறது பசுமைக்குடில் விவசாயம்.
அதையும் இதையும் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்த
பலரும் தற்போது பன்னிரண்டு சென்ட் அளவுக்கு பசுமைக்குடில் அமைத்து
ஜெர்பரா, கார்னேஷன், ரோஜா போன்ற கொய் மலர்களையும்...
கேப்ஸிகம் என்னும் குடைமிளகாயையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் பலவிதமான செயற்கை உரங்களைப்
பயன்படுத்தித்தான் பசுமைக்குடிலுக்குள் பயிர்செய்து வருகின்றனர்.
ஆனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் பகுதியில் முதல்முறையாக
பசுமைக்குடிலுக்குள் இயற்கை விவசாயத்தைப் புகுத்தி கொய்மலர்களையும்,
குடைமிளகாயையும் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார்
ஜெயக்குமார்.
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மலை
மீது குறுக்கிடுகிறது ஊத்து. இந்த சிறு கிராமத்திலிருந்து வலதுபுறம்
பிரிந்து செல்லும் சாலையில் நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது
பண்ணைக்காடு. கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூன்றாயிரத்து
எண்ணூறு அடி உயரத்திலிருக்கும் கிராமம். இங்கும், இதையடுத்திருக்கும்
வடகரைப்பாறையிலும் பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயம் செய்து
வருகிறார் ஜெயக்குமார் (அலைபேசி: 94436-77673).
அவரைத் தேடிபோனபோது, ''பசுமைக்குடில் மட்டும்தான் நவீனம்.
உள்ளுக்குள் நடக்கிற விவசாயமெல்லாம் பாரம்பரியம்தான்'' என்று
பளீர் சிரிப்புடன் வரவேற்றவர், கடகடவென பேச ஆரம்பித்தார்.
''பண்ணைக்காடுதான் எங்க சொந்த ஊர். என்னோட அப்பா
ஆசிரியரா இருந்தார். நான் டி.-பார்ம் படிச்சி முடிச்சிட்டு,
உள்ளுரிலேயே மருந்துக் கடை நடத்திக்கிட்டிருக்கேன். எங்களுக்கு
இருந்த பூர்வீக நிலத்துல ரொம்ப வருஷமா காபிதான் போட்
டிருந்தோம். ஆனா, அதுல பெரிய அளவு வருமானம் இல்லாததால
நான் விவசாயத்துல ஆர்வம் காட்டாம இருந்தேன். பாகப்பிரிவினையில்
எனக்கு கொஞ்சம் தோட்டம் பிரிச்சு கொடுத்தாங்க. அதுக்கப்புறம்,
விவசாயம் பண்ணலாம்னு எனக்கு ஆசை வந்து, அதைப்பத்தி யோசிக்க
ஆரம்பிச்சேன்.
அந்தச்சமயத்துல
மலைப்பிரதேசத்துல கார்னேஷன் பூ சாகுபடிதான் பிரபலமாகிட்டு
இருந்துச்சு. அதுபத்தின தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன்.
அப்ப ஜெர்பரா பூ பத்தி எனக்கு தெரிய வந்துச்சு. ஆனா, அதை
யாருமே எங்க பகுதியில் முயற்சி செய்யல. நான் பசுமைக்குடில்
அமைச்சு அதை பயிர் பண்ண ஆரம்பிச்சேன். இங்க ஜெர்பரா பயிரிட்ட
முதல் ஆள் நான்தான். ஜெர்பரா சாகுபடி பயிற்சியாளர்கள் சொல்லிதந்த
மாதிரி ரசாயன உரங்களைத்தான் முதல்ல பயன்படுத்தினேன். அது
எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சி. பசுமைக்குடில் மூடியே இருக்கறதால,
உள்ள நுழைஞ்சதும் ரசாயன வாசம் மூக்கைத் துளைக்கும். வாரத்துக்கு
முணு முறை மருந்தடிப்போம். மூக்குல துணியைச் சுத்திக் கிட்டுதான்
உள்ள வருவோம். சின்னப் புள்ளைங் களை குடிலுக்குள்ள கூட்டிக்கிட்டு
வரவேமாட் டோம். போகப்போக மருந்து வாசம் எங்களுக்குப்
பழகிட்டாலும், ஒரு பக்கம் உறுத்தலாவே இருந்துச்சு.
இதைப்பத்தியே
யோசிச்சிக்கிட்டிருந்த சமயத்துல தான், இயற்கை விவசாயம் மேல
எனக்கு ஆர்வம் வந்து... நம்மாழ்வாரோட புத்தகங்களைப் படிக்க
ஆரம்பிச்சேன். பஞ்சகவ்யா, புண்ணாக்கு இதை யெல்லாம் வாங்கி,
ஜெர்பராவுக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். பஞ்சகவ்யா, அமிர்தகரைசல்
இதை யெல்லாம் நானே தயாரிக்கவும் கத்துக்கிட்டேன். இயற்கை
உரங்களைத் தயாரிக்கறதுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான்
இருந்துச்சு. ஆனா, அதோட பலனை நினைச்சதும் கஷ்டமெல்லாம்
பறந்துடுச்சி. இப்ப இயற்கை உரங்கள் தயாரிக் கறதுக்காகவே
வடகரைப்பாறையில ஒரு தோட்டம் வாங்கி, அதுல நாலு மாடுகளையும்
வாங்கி விட்டிருக்கேன். அங்கயே கொட்டகை போட்டு இயற்கை
உரங்களைத் தயாரிக்கிறேன். முதல் நாலஞ்சு மாசம் பெரிய அளவுல
விளைச்சல் இல்லை. ஆனா, அடுத் தடுத்த மாசங்கள்ல வழக்கத்தைவிட
அதிக விளைச்சல். இயற்கையில இப்படி வெற்றியடைஞ்சதும், வடகரைப்
பாறையில் புதுசா மூணு பசுமைக்குடில் போட்டு முழுக்க இயற்கை
முறையில ஜெர்பரா, கார்னேஷன் இதையெல்லாம் போட்டேன்.
இப்ப முழுக்க எல்லாத்தையும் இயற்கைக்கு மாத்திட்டேன்.
எல்லாரும் பசுமைக்குடில் போட்டு குடைமிளகாய் சாகுபடி செய்றாங்க.
உணவுப்பயிரான அதுக்கு பெரும்பாலும் ரசாயன உரங்கள்தான் போடுறாங்க.
அதையும் ஏன் இயற்கையில நாம முயற்சி செய்து பார்க்கக் கூடாதுனு
தோணுச்சி. உடனே அதுக்காக ஒரு பசுமைக்குடில் அமைச்சி, குடைமிளகாயை
பயிரிட்டேன். முழுக்க இயற்கை உரத்தைப் போட்டேன். இப்ப
அது நல்லா விளைஞ்சிருக்கு. இன்னும் பத்து பதினைந்து நாள்ல அறுவடை
செய்ய ஆரம்பிச் சுடுவேன்.
காய்கறிகளைப்
பொருத்தவரை ஏத்த இறக்கமாத் தான் விலை இருக்கும். அதுக்கு
தகுந்தபடிதான் வியாபாரிங்க வாங்குவாங்க. குடைமிளகாய்க்கும்
அப்படித்தான். ஆனா, என்னோட தோட்டத்தை வந்து பார்த்துட்டுப்
போன வியாபாரிங்க, இயற்கை உரத்துல விளைஞ்ச மிளகாயோட
தரத்தை வெச்சி, 'விலை குறைஞ்சாலும் கூடினாலும் வருஷம் முழுக்க
கிலோ ஐம்பது ரூபாய்னு விலை வெச்சி எடுத்துக்குறோம்'னு ஒப்பந்தம்
போட்டிருக்காங்க. இதுவே இயற்கைக்கு கிடைச்ச வெற்றிதான்''
என்று சந்தோஷக் கூச்சலிட்ட ஜெயக்குமார்,
''அடுத்ததா, 'பசுமை விகடன்'ல வரும் ‘ஜீரோ பட்ஜெட்’
விவசாய முறையை கொஞ்சம்கொஞ்சமா இதுல புகுத்தலாம்னு இருக்கேன்.
அப்படிச் செய்தா... இன்னும் இன்னும் லாபம் கிடைக்கும்'' என்று
உறுதியான குரலில் சொன்னார்.
தொடர்ந்து பேசியவர், ''இயற்கை முறையில பயிராகியிருக்கற
பூக்களும் நல்லா இருக்கறதால அதுக்கும் வருடம் முழுவதும் ஒப்பந்தம்
போட்டி ருக்காங்க. இன்னும் பெரிய அளவுல பசுமைக் குடில்கள்
போட்டு ஏற்றுமதி பண்ணலாம்னு திட்டம் வெச்சிருக்கேன். பூக்களைப்
பொருத்தவரை முன்னைக் காட்டிலும் இப்போ விளைச்சல் அதிகரிச்
சிருந்தாலும் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுட்டதால இப்போதைக்கு
பழைய விலைதான் கிடைக்குது. வர்ற 2008-ம் வருஷத்துல இருந்து
புது ஒப்பந்தம் போடணும். இயற்கை விவசாயம்கறதால அதிக
விலை கிடைக்கும்.
என்னோட
தோட்டத்து விளைபொருளுக்கு சந்தையில மதிப்பு கூடியிருக்கற அதேசமயம்,
உற்பத்திச் செலவும் குறைஞ்சிருக்கு. ரசாயன உரம் போடாததால
இடுபொருள் செலவு 40% குறைஞ்சிருக்கு. ஆக, ரெண்டு வகையில
லாபம். அதைவிட பெரிய லாபம்... ரசாயனம் இல்லாத காயை
உற்பத்தி பண்ணி நாலு பேருக்கு சாப்பிடக் கொடுக்கிறோம்கற
சந்தோஷமும்... சுற்றுச்சூழலைக் கெடுக்காத விவசாயம் செய்றோம்ங்கற
மனத்திருப் தியும்தான்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ஜெயக்குமார்,
''மலைப்பகுதியில அரை ஏக்கர் இடம் இருந்தாக்கூட போதும்.
யார் வேணும்னாலும் தைரியமா செலவே இல்லாம இயற்கை விவசாயத்துல
பூக்கள், குடை மிளகாய் உற்பத்தி பண்ணி நல்லா சம்பாதிக்கலாம்.
பசுமைக்குடில் மட்டும்தான் செலவு. அதுக்கும் அரசாங்க மானியம்,
கடனெல்லாம் கிடைக்குது. அதனால இளைஞர்களெல்லாம் தைரியமா
இந்த தொழில் பண்ணலாம். கூட்டா பல பேரு சேர்ந்தும் செய்யலாம்.
ஏற்றுமதி செய்தா இன்னும் அதிக லாபம் சம்பாதிக்கலாம்'' என்று
நம்பிக்கை பொங்கச் சொன்னார்.
|
This is a RARE DETAILS BLOG that focus on everything about Tamil language and Tamilans cultures,Amazing News,Scientific News, Tamil Medicines,Cooking Tips,World's Mystery,Rare History,Sex Education,Electronics Technology,Business,Etc.,
Wednesday, August 13, 2014
‘‘இளைஞர்களே, வாருங்கள்... இணையற்ற லாபம் பாருங்கள்!‘‘
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment