Wednesday, August 27, 2014

ஆற்று நீர் இன்று கழிவு நீர் !


                        ஆற்று நீர்

கடந்த இருபது ஆண்டுகாலமாக தினம் தினம் யாருக்கும் தெரியாமல் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து நிற்கிறது ஆற்று நீர் பிரச்சினை. முன்பொரு காலத்தில் சலசலத்து ஓடுகின்ற ஆற்று நீரை என் முன்னோர்கள் அள்ளிப் பருகி தாகத்தை தனித்து வந்திருக்கிறார்கள். எங்கே இப்போது யாராவது ஒருவரையாவது தாகம் தீர ஆற்று நீரை அள்ளிக் குடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஒருவரும் முன் வரமாட்டார்கள் ஆற்று நீரில் காலை வைப்பதற்க்கு.

காவிரி, கங்கை, நர்மதை, தபதி, பிரம்மபுத்திரா, இன்னும் சில நதிகள், ஆறுகள், இவற்றின் ஓரமாக இருக்கும் நகரங்களின் குடியிருப்போர்களின் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் ஆற்றோரத்தில் அரசாங்கத்தால் கட்டி தரப்பட்டுள்ள கழிப்பிட வசதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் இந்த புண்ணிய நதிகளிலே கலக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த புண்ணிய நதிகளிலே ஓடிக்கொண்டிருக்கும் நீரை தான் தொலைதூரத்தில் வசிக்கும் நகரவாசிகளும், கிராமத்துவாசிகளும் தாகத்துக்காக குளோரின் கலக்கப்பட்ட தண்ணீரை அன்றாடம் குடித்து வருகின்றனர்.

ஆற்று நீரில் நுண்ணுயிரிகள் கோடிக்கணக்கில் உண்டு. அந்த நுண்ணுயிரிகள் கழிவுகளை சமன் செய்துவிடும் என்பது உண்மை தான். ஆனால் அதை சமன் செய்ய கால அளவு உள்ளது. அதற்கு இடம் கொடுக்காமல், தினமும் தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகள், கோழி இறைச்சியின் கழிவுகளை அப்படியே ஆற்றில் மூட்டை கட்டி தூக்கி போடுவது, அரசாங்க கழிப்பறைகளின் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாமல் ஆற்றில் கலப்பது போன்ற நிகழ்ச்சிகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. முடிந்தால் அதில் ஒரு கோப்பைத் தண்ணீரை சோதனை செய்து பாருங்கள் எவ்வளவு அசுத்தங்கள் இருக்கும் என்று வெட்ட வெளிச்சமாக தெரியும். 

ஆனால் நம் தாத்தா பாட்டி காலத்தில் ஆற்று நீரில் இடுப்பளவு ஆழத்தில் கூட மணல் துகள்களானது சூரிய ஒளியில் வெள்ளித் துகள்கள் போல மின்னிய காலகட்டங்கள் உண்டு. ஆனால் நாம் அவற்றை இழந்து விட்டோம். இன்று ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டோடும் சமயத்தில் கூட அப்படிப்பட்ட நல்ல தண்ணீரை பார்க்க முடிவதில்லை. செந்நிறத்தில் ஓட வேண்டிய நீர் பச்சை நிறத்தில் ஓடுகின்றது. காரணம் வழியில் உள்ள தொழிற்ச்சாலைகள் ஆற்றில் கரைபுரண்டோடும் சமையத்தில்தான் தன் கழிவுகளை கலந்துவிடுன்கின்றது. ஆற்றில் நீர் அதிகமாக ஓடுவதால் இந்த விசயம் கவனிக்கப்படுவதில்லை.


  • அந்த காலகட்டங்களில் தொழிற்ச்சாலைகள் இல்லை, ஆற்று நீரில் வேதிப்பொருட்கள் உள்ள கழிவு நீரை கலப்பதற்க்கு.
  • சுகாதாரத்தின் பெயரில் ஆற்று ஓரங்களில் கழிப்பிட வசதிகளை அமைத்து கழிவு நீரை ஆற்றில் கலக்கப்படவில்லை.
  • மேலும் அந்த காலகட்டங்களில் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை வீட்டின் பின்புறம் உள்ள செடிகளுக்கு அனுப்பி சுகாதாரம் பாதுகாக்கப்பட்டது.
  • ஆனால் கூட்டுக்குடியிருப்பு என்று இந்த நாகரீக காலத்தில் கழிவு வாய்க்கால்கள் பெரிதளவில் அமைத்து கொசு, ஈக்கள் போன்ற நோய் பரப்பும் கிருமிகளுக்கு துணையாய் இந்த நாகரீக சுகாதாரம் துணை நிற்பதோடு அல்லாமல் இதை ஆற்றில் கலந்து ஆற்று நீரையும் மாசடையச் செய்கின்றது.
என்றாவது ஒருநாள் ஆற்று நீர் சாக்கடை நீரைப் போல மாறும் வரை திரள மாட்டார்கள் இந்த நவீன மக்கள்கள். காரணம் உண்டு இதற்க்கு! காலையில் எழுந்து அவசர அவசரமாய் குளித்து, சாப்பிட்டும் சாப்பிடாமல் புறப்பட்டு வேகமாய் சென்றுக்கொண்டிருக்கிறார்கள் தொழிற்ச்சாலைகளுக்கு. இவர்கள் வேலைக்கு செல்வதற்குள், இவர்களது கழிவு நீர் ஆற்று நீருடனோ அல்லது அருகாமையில் உள்ள ஓடைகளிலோ கலந்து விடுகின்றது. சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்த ஒற்றுமை இன்றைய மக்களுக்கு இல்லை!

தினந்தோறும் இதே கதைதான் இந்த நவீன மக்களின் வாழ்க்கையில் நடந்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் போராட்டம் செய்து அரசுக்கு சுட்டி காட்டும் நிலமையில் இந்த அரசு செயல்பட கூடாது என்பது என் விருப்பம். மாற்ற முடியாதது எதுவுமே இல்லை. திட்டங்கள் நவீனமாக இருக்க வேண்டும். செலவுகள் குறைக்கப்பட வேண்டும். திட்டங்களை ஒப்பந்தகாரர்கள் கைகளில் ஒப்படைப்பது என்பதை விட, அரசாங்க பொறியியலாளரிடம் ஒப்படத்து அரசே நேரடியாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 

  • எப்படி மாறவேண்டும் இந்த சமூகம்?
  • எப்படி மாற்றப்படவேண்டும் இந்த சமூகம்?
  • யாரால் மாற்றப்படவேண்டும் இந்த சமூகம்?
          

No comments:

Post a Comment