காதல்! இது ஆணுக்கு சொந்தமா? இல்லை பெண்ணுக்கு
சொந்தமா? முதலில் ஆண் உணர்வானா? இல்லை
பெண் உணர்வாளா? பெண்ணுக்குத்தான் உணர்வுகள் அதிகம் என்பதால், இந்த காதல் ஒருவேளை பெண்ணுக்கு சொந்தமானதோ? அல்லது
ஆணானவன் கற்பனையால் கவிதைகளை உருவாக்கி அன்பு மழை பொழிவதால்,
இந்த காதல் ஆணுக்கு சொந்தமானதாக இருக்குமோ?
ஆண்களுக்கு வேலைப்பளு அதிகம் என்பதால் இந்த காதலை
பெண்களிடம் ஒப்படைத்து விடலாமா? காதல் ஒரு கண்ணாடி இதையத்தைப் போல என்று
கவிஞர்கள் கூறுவார்கள்! ஆகவே பெண்கள் எந்த நேரத்தில் காதலை கையாளுவது என்று
தெரியாமல், கண்ணாடி இதயத்தை உடைத்து விட்டால்? அதனால் ஆண்களிடமே காதலை ஒப்படைத்து விடலாமா?
·
காதலை எப்படி உணருவது?
·
காதலை எப்படி கையாளுவது?
·
காதலை எப்படி பரிமாறிக்கொள்வது?
காதலை எப்படி உணருவது?
காதலை கட்டாயம் எல்லோரும் உணர வேண்டும். அப்பொழுதுதான் மனித
வாழ்க்கையில் அன்பு நிலைத்திருக்கும்! முதலில் நாம் ஆண் மற்றும் பெண் வாழ்க்கையில்
எவ்வாறு காதல் உணர்வு இயற்கையால் உருவாக்கப்படுகிறது என்பதை எழுத்துலகு அரசனான
திரு.கல்கியின் கற்பனை உலகில் சென்று பார்ப்போமா!
கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்து
வந்தான். மழைக்கும் காற்றுக்கும் அவனுக்கு மலைகுகை அடைக்கலம் தந்தது.
வனவிருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனிகளை உணவாக அளித்தன! அவன் அதை உண்டு
கம்பீரமாக வளர்ந்து நின்றான். காட்டு மிருகங்கள் அவனை கண்டு நடுநடுங்கின. வானத்து
பறவைகளைப் போல் அவன் சுயேட்சையாக ஒருகுறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான்.
ஆயினும் அவனுடைய உள்ளத்தில் ஒருவகையான தாபமும்,
ஏதோ ஒரு குறையும், இனம் தெரியாத ஒரு ஏக்கமும் இடைவிடாமல்
குடிகொண்டு வந்தது. ஏதோ ஒரு காந்தசக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்து
வந்தது!
ஏதோ ஒரு அரிய பொருளை, இதுவரை பார்த்தும் அநுபவித்தும் அறியாத இன்பத்தை, அவனுடைய இதயம் தேடிக்கொண்டிருந்தது. பகலில் அதைப்பற்றி கனவு கண்டான்.
“எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புத பொருளை,
கற்பக கனியை, என்னை கவர்ந்திழுக்கும் காந்தத்தை எங்கே
காண்பேன்?” என்று அவன் இதயம் ஏங்கி தவித்துக் கொண்டிருந்தது.
ஆதி மனிதனை படைத்த அதே இறைவன் ஒரு அழகிய பெண்ணையும்
படைத்தான். மலையின் மற்றொரு பக்கத்து சாரலில் அவள் வசித்து வந்தாள். அவள்
வசிக்கும் அந்த இடத்தில் வசீகரமான பூந்தோட்டமும், அவள் பசிக்கு கை
எட்டும் தூரத்தில் கனிவகை மரங்களும், அழகிய மயில்,குயில்,முயல்,கிளிகள் போன்றவை
உள்ள அற்புதமான இடத்தில் வசித்து வந்தாள். அழகே உருவான அவளது உடல் ஒரு அழகிய
சிற்பமாய் காட்சியளித்தது!
வெளிப்படையாக பார்த்தால் அவளுக்கு ஒரு குறையும் இல்லை, ஆனால்
அவள் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜீவாலை விட்டு அவளை எரித்துக்கொண்டிருந்தது.
ஏதோ ஒரு சக்தி அவளை ஈர்த்துக்கொண்டிருந்தது! அச்சக்தி அவளை எங்கிருந்து இழுக்கிறது? எந்த திசையை நோக்கி இழுக்கிறது? என்பது ஒன்றும்
தெரியவில்லை.
அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு பெரிய மலை ஒன்று
ஓங்கி நின்று ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
வெயிற்காலத்தில் ஒருநாள் இயற்கை நியதியின் காரணமாக காட்டில்
தீ மூண்டது. நாலா புறமும் பரவத் தொடங்கியது! மலையை சுற்றிலும் நெருப்பு அதிவேகமாக
பரவி வந்தது. அந்த ஆணும், பெண்ணும் காட்டுக்குள் புகுந்தால்
ஆபத்துக்குள்ளாவோம் என்றுணர்ந்து மலைமேல் ஏறினார்கள். அந்த காட்டு தீயானது பரவி
அவர்களை மலை முகட்டில் சந்திக்க வைத்தது. அந்த நேரத்தில் பெய்த மழை தீயை
அணைத்ததோடில்லாமல் அவர்களுடைய உடலையும் நனைத்து வசீகரப்படுதியது!
மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். தன் நிலை மறக்கும் படியாக நின்றார்கள்.
எதற்காக மலை உச்சி ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு
மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு
சந்திப்பிற்க்காக என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள்.
தங்களை கவர்ந்திழுத்த இனந்தெரியாத சக்தி இதுதான் என்பதையும்
உணர்ந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு
நிரப்பிக்கொள்ள முடியும் என்பதை அறிந்தார்கள்,
இவ்விதம் ஒன்று சேர்ந்தவர்களை இனி பிரிக்க கூடிய சக்தி
உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்!!!
இவ்வாறு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனையால் ஆணும் பெண்ணும்
காதல்பால் ஈர்க்கப்படுவதை அழகிய கதை வடிவில் எளிதாக விளக்கியுள்ளார். எனவே ஒரு ஆணை
கடந்து செல்லும் ஆயிரம் ஆயிரம் அழகிய பெண்களிடம் ஏற்படாத ஒரு வசீகரம்,
ஒரு சாதாரண பெண்ணிடம் உண்டு என்றால், அதுவே அவளுடைய
தூய்மையான அன்பும், இரக்க குணமும்,
பண்பாடும், நாகரிகமும், பொறுமையும்
தான் ஒரு ஆண் வாலிபனை காதலில் விழவைக்கும் அற்புதமான விஷயங்கள். இங்கு தான் ஒரு
ஆண் காதலை உணருவான்.
ஆனால் பெண்ணிடமோ காதல் வேறு ஒரு கோணத்தில் நகருகின்றது. ஒரு
பெண்ணுக்கு பல ஆண்கள் போட்டியாக இருந்தாலும், ஒரு பெண் ஆணிடம் எதிர்ப்பார்பது, கம்பீரமான தோற்றத்தில் ஒரு மென்மையும், அவளை
ரசிக்கும் ஓரு கவிஞனாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும்
அளவுக்கு பொருள் படைத்தவனாகவும், தனிமையில் அவளை சிரிக்க
வைக்கும் அளவுக்கு அவனுடைய குறும்புத் தனத்தையும், அவளுடைய
சுதந்திரத்தில் தலையிடாதவனாகவும் இருந்தால், அவனே அவளுக்கு
தலைவன் என்பதில் ஐயமில்லை. இந்த எதிர்ப்பார்புகள் பூர்த்தியாகும் பொழுது ஒரு பெண்
காதலை உணருவாள்.
சரி காதலை எப்படி
கையாளுவது?
ஒரு ஆணுக்கு உண்டான காதல், அது பெண்ணிடத்தில்
இருக்கும். மேலும் ஒரு பெண்ணிடத்தில் உண்டான காதல், அது
ஆணிடம் மட்டுமே இருக்கும். இங்கு காதலை கையாளும் தந்திரம் ஆனது, அவர்களுடைய ஊடலுக்குள்ளே மட்டுமே ஒளிந்திருக்கின்றது.
“ஊடலுக்கு பின்னே தான் கூடல்” என்பது காதலின் சூத்திரம்.
ஆண் செய்யும் பல விஷயங்களை பெண் பொறுத்து போவதும், பெண் செய்யும் பல
விஷயங்களை ஆண் பொறுத்து போவதும், எல்லை கடந்து செல்லும்
காட்டாறு போலத்தான். பொறுத்து போனால் என்றாவது ஒருநாள் பூகம்பம்தான்! அதனால்
ஊடலில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
காதல் என்பது இளமையில், துள்ளலில் தொடங்கி
முதுமயில் தள்ளாடலில் முடிவடைகிறது. இதில் அனைவரும் காதலில் கலந்தால் தான்
வாழ்க்கையில் பல சுவைகளை ருசிக்க முடியும். வாழ்ந்து முடித்து மரணபடுக்கையில்
கிடப்பவர்களுக்கு இது மட்டும் தான் திருப்தியை கொடுக்கும்!
காதலால் காதலிக்கப்படுபவர்கள் காதலை உணர மட்டுமே வேண்டும்.
விமர்சனங்கள் அறவே கூடாது. அதாவது, ஒருவரையொருவர் குற்றம் சொல்லி குறை
கூறக்கூடாது.
தலைவி ஒரு அரை நாழிகை தனிமையை விரும்பினால்,
தலைவன் அவளை கேள்வி கேட்காமல், அவளின் உணர்வுகளை புரிந்துகொண்டு
அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அவளே தான் சோகங்களை கூறுவாள்.
பெண்ணின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவற்றை எதிர்பார்க்கும் ஆணின் அழகிய குணத்தில் அல்லவா காதல்
ஒளிந்திருக்கின்றது! பெண்களிடம் உள்ள இந்த நான்கு விசயங்களும் திருமணத்திற்க்கு
பின்னும் பெண்களால் பாதுகாக்கபட வேண்டிய விசயங்கள். பெண்களின் உடலானது அற்புதமான
ஒன்று. அதில் உள்ள அழகினை பார்த்து மயங்காத ஆண்களே கிடையாது.
அப்படிபட்ட அந்த உடல்
திருமணத்திற்க்கு பின்பு அடையும் பல மாற்றத்தால், சிலருக்கு
நளினம் இல்லாமல் போய்விடுகின்றது. இதன் காரணமாகத்தான் ஆண்,
பெண்ணின் மீது காட்டும் ஈர்ப்பை குறைத்து விடுகிறான்.
நளினம் என்ற ஒன்றை இழக்காமல் இருக்க அனைத்து பெண்களும்
தங்களுடைய உடலை பேணி பாதுகாத்து உடற்பயிற்ச்சியின் மூலமும் உணவு கட்டுபாட்டின்
மூலமும் கவிஞர்கள் வர்ணிப்பது போல முல்லை கோடி போன்று வைத்துக்கொள்ள வேண்டும். இதை
உணர்ந்து கொண்ட பெண்கள் எப்பொழுதுமே ஆண்களின் அன்புக்குரியவர்கள்தான்...
புருவங்களை உயர்த்தி பேசுவதும்,
கண்களை உருட்டி பார்ப்பதும், பெண்களுக்கு மட்டுமே உள்ள
சிறப்பம்சம். இதில் அவர்களுடைய பேச்சில் கலந்த சிரிப்போ அவர்களை ரசிக்கும்
அளவிற்க்கு உச்சகட்டம்! இதில் கண் மைக்கும் வேலையில்லை. உதட்டு சாயத்திற்க்கும்
வேலையில்லை...
பெண்களுக்கு புதுமைகள் எப்பொழுதுமே பிடிக்கும். எனவே ஆண்கள்
அடிக்கடி பிடித்த பொருட்களை வாங்கி குடுக்க வேண்டும்! பெண்கள் தன்னுடைய அழகின்
மீது அபார நம்பிக்கை உடையவர்கள். ஆகவே அவர்களை வர்ணிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!
நான்கு சுவர்களுக்கு உள்ளே அடைபட்டு இருக்கும் பெண்களுக்கு தன்னுடைய துணைவர்கள்
தான் உலகம். அவர்களை அடிக்கடி அவர்களுக்கு பிடித்த இடத்திற்க்கு அழைத்து
செல்லவேண்டும். வாழ்க்கை மிகவும் சுலபமானது. அதில் அதீத ஆசைகளுடன்
வாழ்பவர்களுக்கே துன்பங்கள் வருகின்றது! இயற்கையை ரசிப்பவன் வாழ்க்கையை சுலபமாக்கி
கொள்கிறான். அதில் அவனுடைய துணையுடன் இன்பமாக வாழ கற்றுக்கொள்கிறான்!
காதலை எப்படி பரிமாறுவது?
ஆணிடம் இல்லாத குணங்கள் பெண்ணிடம் தென்படுகின்றது. உதாரணமாக
உறவுகளில் உள்ள சொந்தங்களை ஆண் சரிவர கையாள தெரியாமல் உதறி விடுவான். ஆனால் பெண்ணோ,
உறவுகளை இழுத்துப் பிடித்து தக்க வைத்துக் கொள்வதில் பெண்ணே சிறந்தவள்.
ஆகையால் பெண்கள்தான் அன்பை பரிமாறும் விசயத்திலும்
முன்னிலையில் இருப்பார்கள். தலைவனுக்கு பிடித்த செயல் எதுவென்று தலைவனை
கேட்டறியாமல் செய்யும் செயலில் தான்
தலைவியின் காதல் தலைவனுக்கு பரிமாறுகின்றது. அந்த செயல்களானது அன்பு,
பாசம், ஏக்கம், இரக்கம், பிறர் முன்னிலையில் விட்டுக்கொடுத்தல்,ஆளுமைத்
தன்மை, எதிர்கால திட்டமிடல்,
பாதுகாப்பு போன்றவற்றில் உள்ளது.
அதே போல, தலைவியை மனம் முடித்த பின்பு அவள் என்றுமே
தலைவனுக்காகத்தான். அவள் எப்பொழுதுமே காத்திருப்பது தலைவன் ஒருவனுக்கு மட்டுமே!
இந்த வகையான அன்பானது தியானத்தை போல ஒன்று. அப்படிபட்ட தியானத்தை (அ) காதலை
மேற்கொள்ளும் அவளுக்கு, தலைவன் செய்யவேண்டியது பல.
தலைவன் செய்ய கூடிய செயல்கள் அனைத்தையுமே ரசிக்க கூடியவள்
தலைவி மட்டுமே! தலைவன் எப்பொழுதும் அன்பை அவளிடம் செலுத்தி அவள் ரசிக்கும்படி
நடந்து கொள்ளவேண்டும்.
இருவருமே தனிமையில் இருக்கும் பொழுது மட்டுமே அன்பை
பரிமாறிக்கொண்டால், இது ஒரு நாடகம் போல ஆகிவிடும். தலைவியை
மனம் முடித்த கணத்திலிருந்து, முதுமை காலம் வரை காதலை
பரிமாறிக்கொள்ள தனிமை மட்டுமே தேவையில்லை. எல்லோர் முன்னிலையிலும் அன்பை
செலுத்தலாம் அவளிடத்தில். இதனால் ஒன்றும் பெரிய நஷ்டம் வந்துவிடாது! அவள் இதையே
விரும்புவாள்.
ஒருவன் பிறக்கும்போதே அவனுக்காக,
அவனுக்கென்ற ஒருத்தியை விதி தேர்வு செய்துவிடுகின்றது.
அப்படிபட்ட அவள் தாய் தந்தையரின்
வளர்ப்பில் பண்பாட்டோடு வளர்க்கப்பட்டு தலைவனிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.
அப்படிபட்ட அவளை தலைவன் அழைத்துச் செல்லும் இடங்களெல்லாம்,
தலைவிக்கு பெரிய சந்தோசமாகவே இருக்கும். ஏனென்றால் தலைவன் தான் சிறிய வயதிலிருந்தே
பல இடங்களுக்கும் போய் வந்தவன். ஆனால் தலைவி அப்படியல்ல. தலைவனுடன் செல்லும்
இடங்களே அவளுக்கு சிறப்பு. இதில் அவளுக்கு ஆனந்தம் என்னவென்றால், தன் அன்புக்குரியவனுடன் சேர்ந்து செல்வதுதான்!
இன்னும் இதை போல பல விசயங்கள் இருக்கின்றது காதலை
பரிமாறிக்கொள்ள. இந்த காதல் பரிமாற்றத்தில், தலைவியானவள் தலைவனுக்கு கொடுக்கும்
பரிசுதான் குழந்தை!!
No comments:
Post a Comment