நில்...கவனி... செய்!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
நிலத்திலும்,
தங்கத்திலும், வீட்டிலும், ஃபிக்ஸட் டெப்பாசிட் களிலும் மட்டுமே முதலீடு
செய்துவந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இன்றும் ஒரு
புதிய முதலீடாகவே உள்ளது. பங்குச் சந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதால்,
இனிவரும் ஆண்டுகளிலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்
டாளர்களின் கவனம் மியூச்சுவல் ஃபண்டுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தத்
தருணத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
என்னென்ன என்பதைக் காண்போம்.
முதலீட்டுக் காலம்!
மியூச்சுவல் ஃபண்டுகளில் பொதுவாக இரண்டுவகை உள்ளன.
ஒன்று, கடன் பத்திரம் சார்ந்த முதலீடு திட்டங்கள். மற்றொன்று, பங்கு
சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள். இவை இரண்டும் கலந்தவை கலப்பினத்
திட்டங்கள் (hybrid) என்று அழைக்கப்படுகின்றன.
உங்கள் முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பதைக்
கணக்கிட்டுக் கொள்ளுங்கள். குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தேவைப்படாத
பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு
செய்யுங்கள். ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், குறுகிய
காலங்களில் ஏற்ற இறக்கம் இருப்பது சகஜம். ஆகவே, சில மாதங் களுக்குள்
தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலேயே
முதலீடு செய்யுங்கள். அதேபோல, ஓரிரு வருடங் களுக்குள் தேவைப்படும் பணத்தைப்
பிற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மியூச்சுவல் ஃபண்ட்
முதலீட்டுக்்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டுக் கால அளவை குறிப்பாகக்
கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல்
ஃபண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தேவை மற்றும் வயது!
உங்கள் வயது என்ன, நீங்கள் இந்த முதலீட்டிலிருந்து
வரும் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவரா, எந்தத் தேவைக்காக நீங்கள்
ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள், நீங்கள் முதலீடு
செய்யப்போகும்முன் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அடுத்த ஆறு
மாதத்தில் நடக்கவிருக்கும் உங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்துக்காக
வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய உள்ளீர்கள் எனில், அதற்கேற்றாற் போல்
ரிஸ்க் இல்லாத ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் 25 வருடம்
கழித்து வரப்போகும் உங்கள் ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்
எனில், அதற்கேற்றாற்போல் அதிக ரிஸ்க் உள்ள, அதேசமயத்தில் அதிக லாபத்தைத் தரக்கூடிய பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
அதேபோல்தான் உங்களின் வயதும் ஒரு முக்கிய அங்கமாக
ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் இளம்
வயதினர் எனில், தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே,
உங்களிடம் தொடர்ந்து கேஷ் ஃப்ளோவும் இருக்கும். உங்கள் தேவையும் பல
ஆண்டுகள் கழித்துதான் இருக்கும். ஆகவே, நீங்கள் ஹைரிஸ்க் உடைய பங்கு
சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசனாக இருந்து, உங்கள் அன்றாட
வாழ்வுக்குத் தேவையான பணத்தை நீங்கள் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது
மிகவும் குறைவான ரிஸ்க் உடைய ஃபண்டுகளில்தான் முதலீடு செய்ய வேண்டும்.
ஆகவே, உங்கள் தேவை மற்றும் வயதை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு
செய்யும்முன் கவனியுங்கள்.
எந்த ஆப்ஷன்?
ஃபண்டுகளில் இன்று பலவிதமான ஆப்ஷன்கள் உள்ளன.
உதாரணத்துக்கு குரோத், டிவிடெண்ட் பேஅவுட், டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட்,
போனஸ், மாதாந்திர டிவிடெண்ட், ட்ரிக்கர் (ஜிக்ஷீவீரீரீமீக்ஷீ) என பல
ஆப்ஷன்கள் இன்று முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. நீங்கள்
சீனியர் சிட்டிசனாக இருந்து கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவராக இருந்தால்,
டிவிடெண்ட்டை கையில் வாங்கிக் கொள்ளுங்கள். இது டிவிடெண்ட் பேஅவுட் ஆப்ஷன்
என்று அழைக்கப் படுகிறது.
அதேசமயத்தில் நீங்கள் இளம் வயதினராக இருந்தால் அல்லது
கேஷ் ஃப்ளோ தேவைபடாதவராக இருந்தால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது குரோத்
ஆப்ஷன்தான். வரிச் சலுகைகளை எதிர்பார்ப்பவர்கள் போனஸ் ஆப்ஷனுக்குச்
செல்வார்கள். அதேபோல் கடன் திட்டங்களில் குரோத் ஆப்ஷனில் சென்று, மூன்று
வருடத்துக்குமேல் ரிடெம்ப்ஷன் செய்தால் கிடைக்கும் லாபத்துக்கு மிகக்
குறைவான வருமான வரிதான் கட்ட வேண்டி வரும். ஆகவே, எந்த ஆப்ஷன் என்பதைக்
கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
வருமான வரியைக் கவனியுங்கள்!
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, நீங்கள்
தேர்வு செய்யும் ஃபண்ட் வகையைப் பொறுத்து, உங்களின் வருமான வரி மாறுபடும்.
உதாரணத்துக்கு பங்கு சார்ந்த ஃபண்டு களில் முதலீடு செய்து, ஒரு வருடம்
உங்களால் காத்திருக்க முடியும் எனில், வரும் லாபத்துக்கு நீங்கள் ஒரு
பைசாகூட வரி கட்ட வேண்டாம். ஆனால், கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு
செய்யும் போது வரும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும்.
கலப்பினத் திட்டங்கள் அவை வைத்திருக்கும் பங்கு சார்ந்த
முதலீட்டு அளவைப் பொறுத்து, கடன் சார்ந்த திட்டங்களாக அல்லது பங்கு
சார்ந்த திட்டங்களாகப் பாவிக்கப்படும். அதேபோல், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் கடன்
சார்ந்த திட்டங்களின் அடியில் வரும். உங்களுக்குப் பணம் உடனடியாக
தேவையில்லை; மேலும், அந்த முதலீட்டை நம்பி உங்களின் தினசரி வாழ்க்கை இல்லை
எனில், இந்தியாவில் இன்றைய தினத்தில் சிறந்த முதலீடு பங்கு சார்ந்த
மியூச்சுவல் ஃபண்டுகள் தான். ஆகவே, உங்களின் தேவை மற்றும் வருமான வரிச்
சலுகைகள் பற்றி அறிந்து ஃபண்ட் வகையைத் தேர்வு செய்யவும்.
ஃபண்டுகளை எவ்வாறு தேர்வு செய்வது?
நீங்கள் ஓர் ஆலோசகர் மூலம் ஃபண்டைத் தேர்வு
செய்யும்போது, ஃபண்டுகளை உங்களுக்காக அவர் தேர்வு செய்வார். ஆனால், நீங்களே
தேர்வு செய்யும்போது, சில அடிப்படை விஷயங்களைக் கவனிப்பது சிறந்தது.
அவையாவன:
1. குறைந்தது 5 வருடங்களாவது செயல்பாட்டில் இருந்துள்ள
ஃபண்ட் நிறுவனம்/ திட்டம்.
2. குறைந்தபட்சம் ரூ.300 கோடி சொத்துக்களை
நிர்வகித்து வரும் திட்டங்கள்.
3. தொடர்ந்து அதன் வகை சார்ந்த சந்தை
குறியீட்டைவிட அதிக வருமானத்தைத் தரும் திட்டங்கள்.
4. நல்ல ஃபண்ட்
மேனேஜர்களைக் கொண்டுள்ள திட்டங்கள்.
இதுபோல் இன்னும் சில ஃபில்ட்டர்களை நீங்கள் சேர்த்துக்
கொள்ளலாம். மேலும், ஓரிரு ஏற்ற இறக்கங்களைக் கண்ட ஃபண்டுகளைத் தேர்வு
செய்வது நல்லது. இதுபோல் தேர்வு செய்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு
செய்து வருவது நல்லது.
டாக்ஸ் சேவர் ஃபண்டுகள்!
உங்களுக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரியில் சலுகை
பெற வேண்டுமெனில் மட்டுமே டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.
வரிச் சலுகை தேவையில்லை என்றால், ஓப்பன் எண்டட் ஃபண்டுகளிலேயே முதலீடு
செய்யுங்கள். ஏனென்றால், டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் 3 வருட லாக்இன் உள்ளது.
ஓப்பன் எண்டட் திட்டங்களில் லாக்இன் கிடையாது. பொதுவாக, ஓர் ஆண்டுக்குள்
இதிலிருந்து வெளியேறினால் 1% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.
தேவை இருந்தால் மட்டுமே டாக்ஸ் சேவர் ஃபண்டுகளை நாடுங்கள்.
வெளியேற்றுக் கட்டணம்!
ஃபண்டுகளில் முதலீடு செய்யும்முன் வெளியேற்றுக்
கட்டணத்தையும் கவனியுங்கள். லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம்
திட்டங்களில் பொதுவாக வெளியேற்றுக் கட்டணம் ஏதும் இல்லை. எப்போது
வேண்டுமானாலும் வெளியேறலாம். பொதுவாக, பங்கு சார்ந்த ஓப்பன் எண்டட்
திட்டங்களில், ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 1% வெளியேற்றுக் கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது. சில திட்டங்கள் குறுகிய காலத்தில் வெளியேறுபவர்களுக்கு
அதிகமாகவும் (6 மாதத்துக்குள் 2%), ஒரு வருடம் கழித்து
வெளியேறுபவர்களுக்கு 1% எனவும் வைத்துள்ளன. சில திட்டங்கள் காலத்தை
அதிகப்படுத்தியும் உள்ளன. அதேபோல் கடன் சார்ந்த திட்டங்களும் வெவ்வேறு
விதமான வெளியேற்றுக் கட்டணத்தை வைத்துள்ளன. நீங்கள் முதலீடு செய்யப் போகும்
திட்டம் எந்த விதமான கட்டணத்தை வைத்துள்ளது என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள்.
ரிஸ்க்!
ஃபண்டுகளின் ரிஸ்க் அளவைக் கவனியுங்கள். பங்கு சார்ந்த
திட்டங்கள் அதிகமான ரிஸ்க் உடையவை. அதிலும் ஸ்மால் கேப் மற்றும் துறை
சார்ந்த திட்டங்கள் இன்னும் அதிக ரிஸ்க் உடையவை. அதேபோல் கடன் சார்ந்த
திட்டங்களில் கில்ட் ஃபண்டுகள் அதிக ரிஸ்க் உடையவை.
இன்கம் ஃபண்டுகள் அதைவிடச் சற்று ரிஸ்க்
குறைவானவை. நீண்ட நாட்கள் ஒரு ஃபண்டை நீங்கள் வைத்திருக்கும்போது அதன்
ரிஸ்க் அளவு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. ஆகவே, நீங்கள் முதலீடு
செய்யப்போகும் முன், அந்த ஃபண்டின் ரிஸ்க் அளவைப் பற்றித் தெரிந்து
கொள்ளுங்கள்.
ஃபண்டின் செலவு விகிதம்!
இந்த செலவு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், ஃபண்டின்
செலவு விகிதத்தின் (Expense Ratio) மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.
குறைந்த செலவு விகிதம் இருப்பது முதலீட்டாளர் களுக்கு நல்லது. இதுபோல் பல
விஷயங்களை நீங்கள் கவனித்து முதலீடு செய்யும்போது உங்களின் முதலீடு
சிறப்பாகச் செயல்படும். மேலும், நீங்கள் ஆழம் தெரிந்து காலை விடுகிறபோது,
ஏமாற்றமும் குறைவாக இருக்கும்.
இதுநாள் வரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாதவர்கள், இனியாவது முதலீட்டை செய்யத் தொடங்குங்கள்!
No comments:
Post a Comment