அன்று... விளைச்சலைப் பெருக்க ரசாயன உப்பு யூரியாக்களைக்
கூட்டச் சொன்னார்கள். மண் மரணம் அடைந்து விட்டது. இன்று....
உப்பு யூரியாக்களை குறையுங்கள் என்கிறார்கள்.
அன்று... புழு, பூச்சிகளை அழிக்க, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி
அடியுங்கள் என்றார்கள் இன்று.. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, தண்ணீர்
கெட்டுப்போகிறது பூச்சிக்கொல்லிகளை குறையுங்கள் என்கிறார்கள்.
ஆனால், 'படிப்பறிவை விட, பட்டறிவே சிறந்தது' என கர்நாடக
மாநிலம் மைசூர்-மண்டியா விவசாயிகள் இன்று சாதித்துக் காட்டிக்கொண்டு
இருக்கின்றனர். வாருங்கள் பார்த்து வருவோம்.
பஞ்ச பூதங்கள் எத்தனையோ மர்மமுடிச் சுகளை தன்னகத்தே பதுக்கி வைத்துள்ளது. அதில் ஒன்றுதான் மகாராஷ்டிராவின் சுபாஷ் பாலேக்கர் கூறும் ‘0’ பட்ஜெட்... இயற்கை விவசாயம்.
மண்டியாவுக்கு போகும் முன் ஒரு சிறிய பிரேக்...
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பிறகு பற்றிய ‘தீ’, கர்நாடகத்தில்
நீறுபூத்த நெருப்பாகவே
இன்றும் கனன்று கொண்டு இருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா, கடந்த சில வாரங்களுக்கு முன் காவிரி பிரச்னைக்காக
சென்னையில் உண்ணா விரதம் உட்கார... அடங்கிக் கிடந்த போராட்ட
நெருப்பு, மறுபடியும் கர்நாடகாவில் கொஞ்சம் ஊதிவிடப்பட்டது.
பச்சைத் துண்டு நண்பர்கள் சிவப்புக் கொடி காட்டிவிட்டனர். அதனால்தான்
கடந்த இதழில் மைசூர்-மாண்டியா பகுதிக்குள் நம்மால் செல்லமுடியவில்லை.
'0 பட்ஜெட்' தொடருக்கும் இடைவெளி விழுந்து போனது. இப்போது
நிலைமை சகஜமாகிவிட்டதால் தைரியமாக உள்ளே நுழைகிறோம்...
மண்டியாவிலிருந்து 7 கி.மீ தொலைவில் இருக்கிறது ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி
மடம். காவிரியின் முதல் மடைப்பகுதி என்பதால் பூமி... எங்கும்
பசுமை போர்த்திக் கிடக்கிறது. பசுமைக்கு சூத்திரதாரி தோட்டக்கார
ராமண்ணா. இவர்தான் அந்த மடத்து தோட்டத்துக்கு பொறுப்பாளர்.
''வாங்க... வாங்க... என்ன சாப்பிடுறீங்க'' என்று பொங்கு
தமிழில் வரவேற்று அன்பினால் அசரடித்தார். வெயிலுக்கு இதமாக
மோர் கொடுத்து, குளிர வைத்து தோட்டத்துக்குக் கூட்டிச் சென்றார்.
இனி 'தோட்டக்கார ராமண்ணா' சொல்வதைக் கேட்போமா...
''இந்த மடத்துக்குச் சொந்தமாக பள்ளிக்கூடம் இருக்கிறது.
முதல் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை இங்கு 3,000 குழந்தைகள்
படிக்கிறார்கள். மடத்துக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலத்திலிருந்தே
காய்கறி, உணவு தானியங்கள் உற்பத்தி செய்து கொள்கிறோம்.
இங்கே கால்நடை பண்ணை இருப்பதால் சுத்தமான பாலும் கிடைத்துவிடுகிறது.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்றுதான்
எங்கள் விவசாயமும் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு, சுபாஷ்
பாலேக்கர் எங்கள் மடத்துக்கு வந்தார். அருகில் இருக்கும் பண்ணூரைச்
சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர்தான் அழைத்து வந்தார் (அடுத்து
கிருஷ்ணப்பா தோட்டத்தையும் பார்க்கப் போகிறோம்). அன்றிலிருந்து
பைசா செலவில்லாத '0 பட்ஜெட்' இயற்கை விவசாயத்துக்கு
நாங்கள் மாறிவிட்டோம். இப்போது நிம்மதியாக இருக்கிறோம்.
வெங்காயம், தக்காளி, வெந்தயம், பயிறு, உளுந்து போன்ற
அல்பவதி (3 மாதம்) பயிர்களையும்... சுரை, அவரை, மிளகாய்,
பூசணி, துவரை போன்ற மத்திமவதி (ஆறு மாதம்) பயிர்களையும்...
கரும்பு, வாழை என 'தீர்க்கவதி' (ஒரு வருடத்துக்கு மேல்)
பயிர்களையும் இங்கே பயிரிட்டு வருகிறோம். நன்றாக பலன் கிடைக்கிறது.
உப்பு உரம், பூச்சிக்கொல்லி மருந்து என்று எந்தச் செலவும் இல்லை.
ஆனால், விளைச்சல் கூடுதலாகவே கிடைக்கிறது. செய்யும் ஒரே
செலவு ஜீவாமிர்தம் மட்டுமே'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்.
''இங்கே
பெங்களூர் ரஸ்தாளிதான் பயிரிட்டுள்ளோம். மாதத்துக்கு ஒரு முறைதான்
நீர் விடுகிறோம். அதுவும் இரண்டு வரிசை வாழைகளுக்கு நடுவே
இருக்கும் 10 அடி அகல இடைவெளியின் மையப்பகுதியில், இரண்டடி
அகலமுள்ள சிறுவாய்க்காலில் மட்டுமே நீர் விடுகிறோம். பயிர்களைப்
பாருங்கள் எங்காவது வாட்டம் தெரிகிறதா?'' என்றபடியே வாழையையும்,
கரும்பையும் குழந்தையைக் கொஞ்சுவது போல தடவி கொடுக்கிறார்.
விவசாய விஞ்ஞானிகள் இந்த விந்தையை நேரில் பார்த்துவிட்டு பதில்
சொல்லவேண்டும்.
''வாழை மீது வெயில் நன்றாகப் படும்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வாழை நடவு செய்யும்போது, ஒரு யானை ஓடி ஆடி விளையாடும்
அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். அதாவது, 10 அடி இடைவெளி
கொடுத்து வரிசையாக வாழையை நடவு செய்யவேண்டும். அந்த
வரிசையில் இரு வாழைகளுக்கு நடுவே 8 அடி இடைவெளி இருக்கவேண்டும்.
ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடையில் ஒரு அங்குல நிலம்
கூட வெறுமனே காலியாக இருக்கக்கூடாது. வெங்காயம், தட்டை,
கடலை, மிளகாய், பூசணி, அவரை, துவரை, கொள்ளு, முருங்கை,
கீரை என ஊடுபயிர்களை நெருக்கமாக விதைக்க வேண்டும். இந்த
ஊடுபயிர்கள் எல்லாம் மூன்று மாதத்தில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.
அதன் அறுவடை முழுமையாக முடிந்த பிறகு, காய்ந்து போன அந்த
செடி, கொடிகளை அங்கேயே மக்கச் செய்யவேண்டும். அவை
மண்புழுக்களும், நுண்ணுயிரிகளுக்கும் உணவாக மாறுவதுடன், பூமியின்
ஈரப்பதத்தை சூரிய ஒளியிடமிருந்து காப்பாற்றவும் செய்கின்றன.
நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் 24 மணி நேரமும், மனைவியைப்
போல வாழைக்கு உணவு சமைத்து கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
வாழையும் தனிக்காட்டு ராஜாவாக... வளர்ந்து குலையோடு
குனிகிறது'' என்று குதூகலமாக ராமண்ணா சொல்லச் சொல்ல...
என் இதயப்பரப்பெங்கும் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி
மழை பொழிந்த ஆனந்த அனுபவம்!
''ஜீவாமிர்தம் (இதைத் தயாரிக்கும் முறைப்பற்றி முந்தைய இதழ்களில்
எழுதியுள்ளோம்) கலக்கும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்'' என்பது ராமண்ணாவின் எச்சரிக்கை.
''எந்த நிலத்துக்கு ஜீவாமிர்தம் கொடுக்கப் போகிறோமோ,
அதே நிலத்திலிருந்து ஜீவனுள்ள மண் எடுத்து, ஜீவாமிர்த கரைசலில்
கலக்க வேண்டும். வேற்று மண் கலந்தால், அந்த மண்ணில் இருக்கும்
நுண்ணுயிரிகள், ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் மண்ணில் ஏற்கெனவே
இருக்கும் நுண்ணியிரிகளுடன் இணைந்து போகாவிட்டால் தேவையில்லாத
பிரச்னைகள் வரும்'' என்று தன் அனுபவத்தை எடுத்து வைத்தார்.
மேலும், திரவ ஜீவாமிர்தத்தோடு கன ஜீவாமிர்தமும் கொடுப்பதாகவும்
கூறுகிறார். ''மாட்டுச் சானம் அதிகமாக உள்ளதால், அந்தச்
சாணத்தை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்கிறோம். தேவைப்படும்போது
அதைத் துகள்களாக்கி கொஞ்சம் திரவ ஜீவாமிர்த கரைசலைத்
தெளித்து பயிர்களுக்குக் கொடுப்பதால் கூடுதலான ஊட்டச்சத்து
கிடைத்து விடுகிறது. ஜீவாமிர்தம் தயாரிக்க நல்ல நாட்டு மாடு
வேண்டும். நல்ல நாட்டு மாடு என்று எப்படிக் கண்டுப் பிடிப்பது?
திமிழ் நன்கு உயரமாக இருக்க வேண்டும். சீமைப்பசு மாட்டுச்
சாணமெல்லாம் உபயோகப்படுத்துவதில்லை'' என்று விளக்கம் அளித்த
கையோடு, வாழை மகசூல் கணக்கையும் கொடுத்து அசத்தினார்
ராமண்ணா.
வாழை மட்டுமல்ல... இன்னும் என்னென்னவோ!
|
This is a RARE DETAILS BLOG that focus on everything about Tamil language and Tamilans cultures,Amazing News,Scientific News, Tamil Medicines,Cooking Tips,World's Mystery,Rare History,Sex Education,Electronics Technology,Business,Etc.,
Saturday, August 30, 2014
செலவில்லாமல் விளையுது வாழை!
Category List:
PLANTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment