Monday, August 11, 2014

சிறப்புச்சார்பியல் கோட்பாடு பகுதி - 3

சிறப்புச்சார்பியல் கோட்பாட்டின் படி ஒளியின் வேகத்தில் பயணித்தால் முக்கியமாக இரண்டு நிகழ்வுகள் நிகழ்கின்றன. இவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டால் சற்றே புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

1. பொருண்மை உள்ள ஒரு பொருள் பயணிக்கும் திசையில் தன் நீளத்தில் சற்றே குறுகுகின்றது.
2. ஒளியின் வேகத்தில் பயணிப்பவருக்கு காலமும் சுருங்கிவிடுகின்றது.

1. நீளக்குறுக்கம் (Length Contraction)

5மீட்டர் நீளமுள்ள ஒரு சிற்றுந்து (Car) 60% ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றது எனக்கொள்வோம். அப்பொழுது அதன் நீளம் 4 மீட்டர் எனச் சற்றே குறைவுபட்டிருப்பதை தரையில் நிற்கும் நீங்கள் அளவிடலாம்.

அதேசமயம், அச்சிற்றுந்தில் பயணிப்பவர் உங்கள் கையில் இருக்கும் அளவுகோலின் நீளம் குறைந்திருப்பதைக் காண்பார்.ஒருவேளை நீங்களும் 60% ஒளிவேகத்தில் அச்சிற்றுந்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டு அளப்பீர்களேயானால் அதன் நீளம் 5 மீட்டரே இருக்கும்.

2. காலவிரிவு (Time Dilation)

ஒளியின் வேகத்தில் பயணிக்கும்பொழுது மட்டும் காலமும் சுருங்கிவிடுகின்றது. ஆனால் அதனை அவ்வேகத்தில் பயணிப்பவர் இருக்கும் குறியீட்டுச்சட்டத்திலிருந்து உணர முடியாது. வேறொரு குறியீட்டுச்சட்டத்தில் இருப்பவரால் மட்டுமே உணர முடியும்.

இந்த காலவிரிவினைக் காட்ட ஒரு பிரபலமான கருத்து ஒன்று உள்ளது. அதுதான் இரட்டையர் முரண்மெய் (Twin Paradox).



அதாவது பாபு-கோபு இருவரும் இரட்டையர். இருவரிடத்தில் இரண்டு துல்லியமான நேரங்காட்டும் கடிகாரங்கள் உள்ளன. அதனை இருவரும் ஒரே நேரத்தைக் காட்டுமாறு ஒருங்கிசைத்துக் கொள்கின்றனர். தற்பொழுது இருவருமே ஒரே குறியீட்டுச்சட்டத்தில் உள்ளனர்.

இப்பொழுது பாபு மட்டும் ஒரு விண்கலத்தில் ஏறி 60% ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார். இருவருமே தங்களது பார்வையில் நீளக்குறுக்கம் மற்றும் காலவிரிவு விளைவுகளை மற்றவரிடத்தில் காண்பர். ஒருவேளை பாபு திரும்பவே இல்லை என்றால் பிரச்சனை இல்லை. திரும்பிவிட்டால்....?

ஒளியின் வேகத்தில் பயணித்த பாபுவை விட, நிலையாக நின்ற கோபுவிற்கு வயது கூடியிருக்கும். ஆனால் இருவரும் இரட்டையர்கள். இதனை அவர்களின் கடிகாரங்களை ஒத்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். முரண்பாடு போல் தோன்றினாலும் அதுதான் மெய்.

இந்த இரட்டையர் முரண்மெய்க்குள் நிறைய அலசல்கள் உள்ளன. பாபு போகும்பொழுது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு சமிக்ஞை அனுப்புவது, ஒருவர் குறியீட்டுச் சட்டத்தில் இருந்து அடுத்தவரின் குறியீட்டுச்சட்டத்திற்கு மாறி விளைவுகளை அளப்பது என்று நிறைய சாத்தியக்கூறுகளை பிரித்தலசுவார்கள்.

அடுத்தது காலப்பயணம்....

No comments:

Post a Comment