Sunday, August 10, 2014

'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி

இந்தக் கட்டுரை கடந்த மாதம் உயிர்மையில் வெளிவந்தது. இதன் அவசியம் கருதி இந்தப் புதிய கட்டுரையை இங்கு வெளிவிடுகிறேன். இதை வாசிப்பவர்கள் தயவுசெய்து விருப்பு வெறுப்பின்றி இதில் உள்ள தகவல்களைப் புரிந்து கொள்ளுங்கள். அணுஉலைகள் பற்றி உங்களுக்கு ஆயிரம் அபிப்பிராயங்கள் இருக்கலாம். எனக்கும் உண்டு. இங்கு அதுவல்ல பிரச்சனை. அணுஉலை வேண்டும், வேண்டாம் என்பதையும் தாண்டி, நுண்மையாகச் சிந்திக்க வேண்டிய தகவல்களை அடக்கியது இது. எந்த நாட்டின் அரசியலிலும் நான் அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை. அது தேவையுமில்லை. இதைப் படித்துவிட்டு என்மேல் கோபம் உங்களுக்கு ஏற்படுமானால், மிகப்பெரிய துரதிர்ஸ்ட கணமாக அது இருக்கும். முடிந்த வரை நடுநிலைமையுடன் இதைப் படியுங்கள். பிடித்திருந்தால், அடுத்தவருக்கும் பகிருங்கள். - ராஜ்சிவா.








கடந்து வந்த மனித வரலாற்றில், எத்தனையோ நாகரீகங்கள் தோன்றியிருக்கின்றன. எத்தனையோ வல்லரசுகள் தோன்றியிருக்கின்றன. நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில், எண்ணிக்கையில் அதிகமான நாடுகள் இருந்திருக்கின்றன. கலாசாரங்கள், சமுதாயங்கள், ஆட்சிகள், கூட்டாட்சிகள் என இலட்சக்கணக்கானவை இதுவரை காலமும் இருந்திருக்கின்றன. அவை இருந்ததை வரலாறு பதிவும் செய்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் இப்போ எங்கே என்று தெரியாமல் அழிந்துவிட்டன. எகிப்தின் பிரமிட்டாகவோ, ரோமின் கொலோசியமாகவோ, சீனாவின் பெருஞ்சுவராகவோ, பெருவின் மச்சுபிச்சுவாகவோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக மிச்சமாக விடப்பட்ட ஓரிரு அடையாளங்கள் பூமியில் காட்சி தந்தாலும், அவற்றுடன் சேர்ந்து கட்டப்பட்ட கட்டடங்கள் எல்லாமே, மண்ணோடு மண்ணாக ஒன்றுமேயில்லாமல் அழிந்துவிட்டன. உதாரணமாக, பிரமிட்டுகள் கட்டப்பட்ட போது, எகிப்தில் மாபெரும் சாம்ராஜ்யமே இருந்திருக்கிறது. 'பாரோ' (Pharoah) மன்னர்களின் வாழிடம் முதல், மக்களின் வாழிடம் வரை எத்தனையோ கட்டடங்களும், அரண்மனைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் எஞ்சியிருப்பவை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய பிரமிட்டுகளும், சில ஆலயங்களும்தான். ஏனைய அனைத்துமே மறைந்துவிட்டன. எகிப்தும், ரோமும், சீனாவும் சில உதாரணங்கள்தான். ஆனால் உலகம் முழுவதும் பார்த்தால், சரித்திரங்களைச் சொல்லிய எத்தனையோ அடையாளங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால், ராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெருங்கோவில் மட்டுமிருக்க, அவன் வாழ்ந்த அரண்மனையிலிருந்து, கோட்டை கொத்தளங்கள் எவையும் முழுமையாக எங்குமில்லை.
'காலம்'தான், இவையெல்லாம் நம்முன்னே இல்லாமல் மண்ணோடு மண்ணாகி மறைந்து போனதற்கான முக்கியமான காரணம். கடந்து செல்லும் 'காலம்', மெல்லமெல்லச் சுவடுகளை அழித்துச் செல்லும் கடலலை போன்றது. எதையுமே அது முழுமையாக விட்டு வைப்பதில்லை. சில நூறு ஆண்டுகளிலேயே இருப்பவற்றை சுத்தமாய் அழித்துவிடும் தண்மையுள்ள காலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளென்றால், அடியோடு அடையாளம் தெரியாமலாக்கிவிடும். நான் மேலே சொன்ன பிரமிட்டுகளும், கொலோசியமும், சீனப்பெருஞ்சுவரும் கூட, அதிகப்படியாக ஆறாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவைதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவையென்று, பூமியின் எந்த மூலையிலும், எதுவும் முழுமையானதாக இல்லை. அப்படி அவற்றைத் தேட வேண்டுமென்றால், பூமிக்கு அடியில் புதைபொருள் ஆராய்ச்சி மூலம் தோண்டியெடுத்தால்தான் உண்டு. அதுவும் உடைந்து சிதறிய சிதிலங்களாகத்தான் கிடைக்கும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கட்டடங்கள் மட்டுமில்லை. அதற்கு முன்னர் இருந்த மொழிகள் கூடப் பூமியில் இப்போதில்லை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் மொழி, இனம், கலாச்சாரம், அடையாளம், வாழ்விடம் அனைத்துமே எப்படி இருந்தன என்று, ஒரு கோட்பாட்டு ரீதியிலான கற்பனையாகவே நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும். இதே பத்தாயிரம் ஆண்டுகளை, இருபதாயிரம் ஆண்டுகளாகவோ, முப்பதாயிரம் ஆண்டுகளாகவோ எடுத்துக் கொண்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும். மனித இனத்தின் வடிவங்களில், தோற்றங்களில் கூட மாற்றங்களைக் கொண்டுவந்துவிடும். அதுவே ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றால்........? கற்பனை பண்ணிப் பாருங்கள்? ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குப் முன்னர் வாழ்ந்த மனிதர்களால், அவர்களுக்குப் பின்னர் வந்த சந்ததியினரான நமக்கு, எதையாவது அடையாளமாக விட்டுச் செல்ல முடிந்ததா? அதற்குச் சாத்தியங்கள்தான் உண்டா? முடியவே முடியாதல்லவா?

"அதெல்லாம் சரிதான். இதையெல்லாம் ஏன் இங்கு எங்களுக்குச் சொல்கிறீர்கள்?" என்றுதானே யோசிக்கிறீர்கள். உண்மைதான்! விசயமில்லாமல் நான் இவற்றையெல்லாம் உங்களுக்குச் சொல்லவில்லை. இத்துடன் சேர்த்து, இன்னுமொரு விசயத்தையும் சொல்லிவிட்டு, இவற்றைச் ஏன் இங்கு நான் சொன்னேன் என்பதை விளக்குகிறேன்.



மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் அதிசயமாகவும், உபயோகமானகவும் இருந்த ஒரு கண்டுபிடிப்பு 'பிளாஸ்டிக்' (Plastic) ஆகும். ஆரம்பத்தில் பிளாஸ்டிக்கைத் தலையில் வைத்துக் கொண்டாடிய நாம், "பிளாஸ்டிக் பொருட்களைப் பாவனை செய்வதைத் தவிர்ப்போம்" என்று இப்போ கூக்குரல் எழுப்புகிறோம். பிளாஸ்டிக்குக்கு எதிரான மிகமுக்கியமாக ஒரு காரணத்தையும் சொல்கிறோம். 'மண்ணில் புதையும் பிளாஸ்டிக்குகள் கால ஓட்டத்தால் மண்ணோடு மண்ணாக மக்கிவிடாமல் அப்படியே இருப்பதால், நமது பூமித்தாய் மாசடைகிறாள். அதனால் மண்ணின் வளம் நாசமாகிவிடும். நமக்குப் பின்னர் வரும் நம் சந்ததியினர்களுக்கு நாம் செய்யும் துரோகம் அது' என்பதுதான் அந்தக் காரணம். அதாவது, நாம் இப்போ நிலத்தில் தூக்கி வீசும் பிளாஸ்டிக்கினால், நமது பிற்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரம் குலைந்துவிடும் என்ற கவலையில், நன்கு பயனளிக்கக் கூடிய பிளாஸ்டிக்கையே வேண்டாம் என்று தவிர்க்கப் பார்க்கிறோம். நமது எதிர்காலச் சந்ததியினர்களைப் பற்றிக் கவலைப்படும் நல்லவர்கள் அல்லவா நாம். கேட்கும் போது மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், உண்மையாகவே நம் எதிர்காலச் சந்ததியினர்கள் பற்றி நாம் கவலைப்படுபவர்கள்தானா? அந்த நல்ல பண்பு நமக்கு இருக்கிறதா? "நிச்சயமாக இருக்கிறது" என்று உங்களில் எவராவது சொல்வீர்கள் என்றால், 'ஒன்கலோ' (Onkalo) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் நபர் நீங்கள்தான். "அடுத்த சந்ததிகள் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. நான் நன்றாக வாழ்ந்தால் மட்டும் எனக்குப் போதும்" என்று நீங்கள் நினைப்பவரென்றால், ஒன்கலோ பற்றியல்ல, எதைப் பற்றிச் சொன்னாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆனாலும், 'இப்படி எல்லாம் இருக்கின்றனவா?' என்று அறிந்து கொள்ளவாவது தொடர்ந்து படித்துப் பாருங்கள்.


மீண்டும் இலட்சம் ஆண்டுகளுக்கு மனித வரலாற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நாம் பேசியதற்கான காரணங்களைப் பார்க்கலாம். இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் மூதாதையர்களின் அடையாளங்கள் எதுவுமே பூமியில் இப்போது முழுமையாக இல்லை. கிடைத்தவை எல்லாமே மண்ணில் புதைந்திருந்த பாஸில் (Fossil) வகை எச்சங்கள்தான். இது இப்படியிருக்க, இனி வரப்போகும் எதிர்காலத்தைப் பாருங்கள். இன்றிருக்கும் நமது அடையாளங்களில் ஒன்றாவது, இன்னும் பத்தாயிரம் வருடங்களின் பின்னர் அப்படியே இருக்குமா என்பதை யோசியுங்கள். இனி வரப்போகும் பத்தாயிரம் ஆண்டுகளில் பூமியிலும், மனிதனிலும் எத்தனை மாற்றங்கள் வரலாம் சொல்லுங்கள்? எத்தனையோ யுத்தங்கள் ஏற்படலாம். இப்போதிருக்கும் நகரங்கள் அனைத்துமே அழிந்து போகலாம். கடந்த ஒரு நூற்றாண்டிலேயே இரண்டு உலக யுத்தத்தைக் கண்டவர்கள் நாம். இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளில் எத்தனை எத்தனை உலக யுத்தங்களைச் சந்திக்கப்போகிறோமோ யாருக்குத் தெரியும்? ஒட்டுமொத்த உலகையே, பல ஆயிரம் தடவைகள் அழிக்கும் அளவுக்கு அணு ஆயுதங்களைக் கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறோம். 'ம்' என்றால் பட்டனைத் தட்டிவிடுவோம் என்று பயங்காட்டும் சூழ்நிலையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிலத்தில் இருந்து அணுகுண்டுகளைச் செலுத்துவதோடு இல்லாமல், விண்வெளியில் செயற்கைக் கோள்களில் அணுகுண்டுகளை அடுக்கி வைத்துப் பயமுறுத்தும் தந்திரங்களையும் ஆரம்பித்துவிட்டோம். இன்னும் சில ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் பூமியும் அணு யுத்தத்தால் அழிந்துவிடும் என்ற நிலை இப்பொழுதே உருவாகிவிட்டது. அப்படியென்றால், பத்தாயிரம் ஆண்டுகளின் பின்னர் இருக்கப் போகும் நிலையை யோசித்துப் பாருங்கள்? யுத்தங்கள் நடைபெற்று, அதில் எஞ்சிய ஒரு இனம் மீண்டும் துளிர்த்து, புதியதொரு மனித சமுதாயமாக உருவாகக் கூடிய சாத்தியங்களும் நிறையவே உண்டு. இன்றிருக்கும் அமெரிக்காவோ, ரஷ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ நாளை இருக்காது. பத்தாயிரம் ஆண்டுகளின் பின்னர் வாழும் மனிதன், என்ன பெயரில் உள்ள நாட்டில், எப்படி வாழ்வானோ? அவன் என்ன மொழி பேசுவானோ? எதுவுமே தெரியாது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கே இப்படியென்றால், இனிமேல் வரப்போகும் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப்போகும் மனிதன் பற்றி என்ன தெரியும் நமக்கு? அவன் நம்மைப் போல உருவில் இருப்பானா என்று தெரியாது. என்ன மொழி பேசுவான் என்றும் தெரியாது. ஆங்கிலம், ஜேர்மன், தமிழ் போன்ற மொழிகள் மட்டுமில்லை, பூமியில் இருக்கும் எந்த மொழியும் அப்போது வழக்கில் இருக்கவே இருக்காது.
ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப்போகும் மனிதன், நமது வருங்காலச் சந்ததியினன் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். அது தவிர்ந்த அவனைப் பற்றிய எந்த நிலைப்பாட்டையும் நம்மால் இப்போ கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. எதிர்கால மனிதன், அறிவியலில் வளர்ந்து, பிரபஞ்சம் முழுவதும் ராக்கெட்டுகளின் மூலம் பயணம் செய்யும் ஒரு அதிபுத்திசாலியானவனாக இருப்பான் என்றே நாம் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் யாருக்குத் தெரியும், நடக்கப் போகும் அணு யுத்தங்களினால் அழிந்து போய், அறிவியல் என்பதே அற்றுப் போய், பூச்சியதிலிருந்து ஆரம்பிக்கும் கற்கால மனிதன் போலக் கூட அவன் இருக்கலாம். அணுக்கதிர் வீச்சுகளால், பூமியின் மேற்பரப்பில் வாழமுடியாமல், நிலத்துக்குக் கீழே வாழும் குகை மனிதனாகக் கூட இருக்கலாம். இந்தச் சாத்தியங்களையெல்லாம் நாம் நன்கு புரிந்து கொண்டோமானால், 'ஒன்கலோ' பற்றித் தெரிந்து கொள்ள முழுமையாகத் தகுதி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமாகும். இனிமேல் 'ஒன்கலோ' என்றால் என்னவென்று நாம் பார்க்கலாம்.

'ஒன்கலோ' (Onkalo) என்பது பின்லாந்து (Finland) மொழியில் உள்ள ஒரு சொல்லாகும். இதன் அர்த்தம் குகை, குழி, மறைக்கப்பட்டது என்பதாகும். உலகிலேயே முதன்முதலாக, மிகமோசமான முன்னுதாரணமாக, பின்லாந்து நாட்டில் இந்த 'ஒன்கலோ' அமைக்கப்படுகிறது. நிலத்துக்கு 420 மீட்டர்கள் கீழே, கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்கள் நீளமான சுரங்கம்தான் இந்த 'ஒன்கலோ'. 'இவ்வளவு ஆழத்திலும், நீளத்திலும் சுரங்கம் கிண்டி, நிலக்கரியையோ, பெற்றோலையோ, தங்கத்தையோ எடுக்கப் போகிறார்கள்' என்றா நினைக்கிறீர்கள்? இல்லை இந்தச் சுரங்கத்தை வெட்டி அதிலிருந்து எதையும் எடுக்கப் போவதில்லை. அதற்கு மாறாக அங்கே எதையோ அடுக்கி வைக்கப் போகிறார்கள். புதைக்கப் போகிறார்கள். எதைப் புதைக்கப் போகிறார்கள் தெரியுமா? பின்லாந்து நாட்டில், அமைக்கப்பட்டிருக்கும் ஏழு அணு உலைகளினாலும் வெளிவந்த அணுக்கழிவுகளை இந்த ஒன்கலோவில் புதைத்து வைக்கப் போகிறது பின்லாந்து அரசு. 420 மீட்டர்கள் ஆழத்தில் வரிசையாகக் குழாய் போன்ற அமைப்பில் குழிகள் தோண்டி, அதனுள் அணுக்கழிவுகளை இட்டு, மேலும் கீழும் காங்கிரீட் நிரப்பி பாதுகாக்கப் போகிறது பின்லாந்து. எவ்வளவு காலத்துக்குப் பாதுகாக்கப் போகிறது தெரியுமா? ஒரு இலட்சம் வருடங்களுக்கு.

இப்போது வாழும் மனித இனத்துக்கு இந்தப் பாதுகாப்புப் போதுமானதுதான். சொல்லப் போனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கூடப் போதுமானதுதான். ஆனால் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு இவை பாதுகாப்பானவையா? மேலே நான் சொன்னவற்றை இப்போது மீண்டும் யோசித்துப் பாருங்கள்? எவ்வளவு முட்டாள்தனமான ஒரு திட்டம் இது. பத்தாயிரம் ஆண்டுகளிலே எல்லாமே அழிந்து போய்விடும் நிலை இருக்கும் போது, ஒரு இலட்சம் ஆண்டுகள் வரை பாதுகாப்பதற்குத் திட்டம் போடுவதில் உள்ள முட்டாள்தனம் புரிகிறதா? எல்லாமே தடயமில்லாமல் அழிந்த நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் நம் சந்ததி மனிதன், ஏதோ ஒரு காரணத்துக்காக நிலத்தை தோண்டும் போது, இந்தக் கட்டடங்கள் தென்பட்டால், 'அட! நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஏதோ ஒரு கட்டடம் என்று நினைத்து, உடைத்துப் பார்ப்பான் அல்லவா? அப்போது அவன் நிலை என்ன? அப்படித்தானே நாம் நிலத்துக்குக் கீழே உள்ள கட்டடங்களையும், பாஸில்களையும் இப்போது கிண்டி ஆராய்கிறோம். அதுபோல, ஏதோ ஒரு விதத்தில் தப்பிப் பிழைத்து வாழும் நம் சந்ததி மனிதனும் இந்தக் கட்டடங்களைத் தோண்டிப் பார்ப்பான். அப்போது அவனை அடியோடு இந்த அணுக்கழிவுகள் அழித்து விடுமல்லவா? கண்ணுக்குத் தெரியாத, மூக்கினால் நுகர முடியாத, வாயினால் ருசி அறியமுடியாத, உடலினால் உணர முடியாத கொடிய விசமல்லவா அது. இப்போது நீங்கள், "ஒரு இலட்சம் ஆண்டுகளாகவா அது ஆபத்தாக இருக்கப் போகிறது? சில ஆயிரம் ஆண்டுகள் ஆபத்து இருக்கலாம். அதை இவர்கள் பெரிதாக்கி, ஒரு இலட்சம் ஆண்டுகள் என்கிறார்கள். அவ்வளவு ஆண்டுகளுக்கு ஆபத்தாகவா இருக்கப் போகின்றன இந்த அணுக்கழிவுகள்?" என்று நினைக்கலாம். ஆனால், அணு உலைகளில் பயன்படுத்தப்படும், 'அதியுயர் கதிர்வீச்சு மூலகங்களின் கழிவுகள்' (High level radioactive waste) தங்கள் சக்தியை இழப்பதற்கு ஒரு இலட்சம் ஆண்டுகள் தேவை என்பதுதான் இங்கு வேதனையான உண்மை.



அணு உலைகளில் மின்சாரம் பெற்றுக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் அணுக்கதிர் மூலகங்களைச் சிறிய குழாய்களின் அமைப்பில் தண்டுகள் (Fuel Rods) போல உருவாக்கி, அவற்றில் பலவற்றை ஒன்று சேர்த்து பெரியதொரு குழாயாக அமைத்திருப்பார்கள். இதனுள்ளேயே நியூட்ரானின் மோதலுக்கு உள்ளாக்கப்பட்டு, சன்கிலித் தொடர்ச்சியாக அணு மோதல்கள் ஏற்பட்டு, அதனால் பெறப்படும் வெப்பத்தினால் மின்சாரம் பெறப்படுகின்றது. இதன் மூலம் எஞ்சும் கழிவுப் பொருளும் ஒரு அணுக்கதிர் மூலகமாகவே மாற்றப்பட்டிருக்கும். அவை மிக மோசமாக அணுகதிரை வெளியிடுபவையாக இருக்கும். இவற்றின் வீரியத்தைக் குறைப்பதற்கு, போரிக் அமிலம் (Boric acid) கொண்ட குளிர்ந்த திரவத்தில் தண்டுகள் முழுமையாக அமிழ்த்தப்பட்டு, அணு உலை இருக்குமிடத்திலேயே பல மாதங்களாகப் பாதுகாக்கப்படும். பின்னர், அங்கிருந்து அகற்றப்பட்டு 'ஒன்கலோ' போன்ற ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்படும். ஒரு இலட்சம் ஆண்டுகள் என்றதும் வியப்பில் ஆழ்ந்து போகும் நீங்கள், சில அணுக்கதிர் மூலகங்களின் அரைவாழ்வு காலத்தை அறிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு அணுக்கதிர் மூலகத்தின் 'அரைவாழ்வு காலம்' (Half life) என்றால் என்னவென்று பார்க்கலாம். 'அணுக்கதிர் மூலகம் ஒன்று, அணுக்கதிரை வெளியே விடுவதால் சிதைவடைகிறது. அப்படிச் சிதைவடைவதால் அது தன் எடையை இழக்கிறது. ஒரு குறித்த எடையுள்ள அணுக்கதிர் மூலகம் ஒன்று, அணுக்கதிர்களை வெளியிட்டுச் சிதைவடைந்து, அதன் எடையின் அரைவாசிக்கு மாற எவ்வளவு காலம் எடுக்கிறதோ, அது அந்த அணுக்கதிர் மூலகத்தின் 'அரை வாழ்வு காலம்' என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, ஒரு கிலோ அணுக்கதிர் மூலகம், அணுக்கதிர்வீச்சினால் சிதைவடைந்து அரைக்கிலோவாக மாறத் தேவையான காலம். இதன்படி 'புளுட்டோனியம் 239' மூலகத்தின் அரவாழ்வு காலம் எண்பதாயிரம் (80,000) வருடங்களாகும். இது போல, 'யூரேனியம் 233' மூலகத்தின் அரை வாழ்வு காலம், 159,000 வருடங்களும், 'யூரேனியம் 235' மூலகத்தின் அரை வாழ்வு காலம், 704 மில்லியன் வருடங்களுமாக இருக்கின்றன. அதன் அர்த்தம் அத்தனை ஆண்டுகளுக்கு அந்த மூலகங்கள் அணுக்கதிர்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். இப்போது புரிகிறதா, ஏன் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு இந்த திட்டம் தீட்டப்பட்டதென்று? இப்படி ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பாதுகாப்பதாகச் சொல்லப்படும் இந்தத் திட்டம் முடிவடைய நமது மூவாயிரமாவது சந்ததியினன் உயிருடன் இருப்பான். மூன்றாவது சந்ததியின் பெயரையே சரிவரத் தெரிந்து கொள்ளாத மக்கள் நாம். மூவாயிரமாவது சந்ததிகள் பற்றி எதுவுமே தெரியாமல் இப்படித் திட்டமிடுகிறோம்?


பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சிங்கியிலிருந்து (Helsinki) இருநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் 'ஒய்ரோஓக்கி' (Eurajoki) என்னுமிடத்திலேயே இந்த 'ஒன்கலோ' அமைக்கப்பட்டிருக்கிறது. பின்லாந்து நாடு வெளிப்படையாகச் செய்யும் இந்தச் செயலை அமெரிக்கா, சுவிஸ், பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், கனடா, பெல்ஜியம் போன்ற நாடுகளும் செய்வதற்காக சுரங்கங்களை அமைத்தன. ஆனால், புக்கிஷிமாவின் நடந்த அணு உலைப் பயங்கரத்தினால், பின்லாந்து தவிர்ந்த ஏனைய நாடுகள் திட்டங்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டுள்ளன. அதுவும் மக்களின் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில். உலகம் பூராவும் இதுவரை இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் (250,000) தொன்கள் அணுக்கழிவு சேர்ந்து போயிருக்கின்றன. அவற்றை எங்கே எப்படிப் பாதுகாப்பது என்று தெரியாமல் முழி பிதுங்கிப் போய் இருக்கின்றனர். 'ஒன்கலோ' போலப் புதைக்கப்படாமல் இருந்தால், தினமும் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிந்து கொண்டே இருக்கும். 'அட! அதற்காக பின்லாந்து நாடு, 'ஒன்கொலோ' அமைப்பதற்காக செலவழிக்கும் தொகை சாதாரணமானதென்று நினைத்துவிட வேண்டாம்.  மொத்தமாக 818 மில்லியன் யூரோக்களைப் பின்லாந்து செலவிடுகின்றது. ஒவ்வொரு நாடும் இப்படிப் புதைக்காமல் அணுகதிர்க் கழிவுகளைப் பாதுகாப்பதென்றால், இதைவிட அதிக பணத்தைச் செலவிட வேண்டும்.

அணுஉலை என்பது தடையில்லா மின்சாரத்தையும், கரியினால் ஏற்படும் சூழல் மாசற்ற மின்சாரத்தையும் தருகிறது என்பது உண்மைதான். ஆரம்பத்தில் அது இலாபகரமானதாகவே தோன்றும். ஆனால் அணுக்கழிவைக் கருத்தில் கொண்டால், அதன் பின்னர் ஏற்படப்போகும் செலவு என்பது நினைத்தே பார்க்க முடியாததாக மாறிவிடும். ஒவ்வொரு திட்டங்களும் மில்லியன் மில்லியன் கணக்கான டாலர்களை விழுங்குவதாகவே இருக்கும். இந்த மோசம் போகும் திட்டங்கள் மூலமும் ஒரு கூட்டம் பணம் பண்ணும் வித்தையை நடாத்திக் கொண்டிருக்கும்.
இப்படியோ, அப்படியோ அவர்களுக்கு மட்டும் பணம் போவது உறுதி. மக்கள் பொருளாதாரத்தினால் அடிபடுவதும் உறுதி. 


இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். 'அணு உலை ஒன்றின் மூலம், ஒரு நாடு ஒரு மணி நேரத்துக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்கும் போது, அதே அளவு அணுக்கழிவையும் உருவாக்குகின்றது. ஒரு மணி நேரத்துக்குத் தேவையான மின்சாரம், அந்த ஒரு மணி நேரத்தில் செலவழிந்த பின் மாயமாகிவிடும். ஆனால் அதனால் உருவாக்கப்பட்ட அணுக்கழிவு, ஒரு இலட்சம் வருடங்களுக்கு நம்முடனும், நமது மூவாயிரம் சந்ததிகளுடனும் சேர்ந்தே வந்து கொண்டிருக்கும். அருகில் இருந்து வாயைப் பிளந்து, நம்மை விழுங்கப் பார்க்கும் அரக்கனாக, என்றாவது ஒரு நாள் அது நம்மை விழுங்கிவிடும்'.

-ராஜ்சிவா-  


பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்த தம்பி ஆம்பூர் எட்வினுக்கும் (Ambur Edwin), இந்தத் தகவல்களின் மூலமாக இருந்த, 'இன் டு எடர்னிடி' (Into Eternity) ஆவணப்படத்துக்கும் என் நன்றிகள்.  -ராஜ்சிவா- 

No comments:

Post a Comment