Sunday, August 10, 2014

நவீன இயற்பியலும், தேவி பாகவதமும்

'நவீன இயற்பியலும், தேவி பாகவதமும்' என்ற இந்தக் கட்டுரை குங்குமத்தில் வெளிவந்தது. 
ஆன்மீகமும், அறிவியலும் மீண்டும் ஒரு புள்ளியில் சந்தித்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது. படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள்.

-ராஜ்சிவா-  





நவீன இயற்பியல் (Modern Physics) நம்பவே முடியாத பல கோட்பாடுகளைச் சமீப காலங்களில் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இயற்பியல் மற்றும் கணிதவியல் மேதையான 'அல்பேர்ட் ஐன்ஸ்டைன்' (Albert Einstein) 1920 காலங்களில், 'ஒருங்கமைக் கோட்பாடு' (Theory of Everything) என்னும் கோட்பாடு ஒன்றை விவரித்துச் சொன்னார். அவர் உயிருடன் இருக்கும்வரை அந்தக் கோட்பாட்டை, ஒரு கணிதச் சமன்பாட்டில் உள்ளடக்கிச் சமன்படுத்த முயன்றார். ஆனால் அவரால் அது முடியவில்லை. அணு முதல் அண்டம் வரை அமைந்துள்ள அனைத்தும் நான்கு அடிப்படை விசைகளால்தான் இயங்குகின்றன. அதாவது ஒட்டுமொத்தப் பிரபஞ்சமே நான்கு விசைகளுக்குள் உள்ளடங்கிவிடுகின்றது. இப்போதுள்ள அண்டம் (Universe) அந்த நான்கு விசைகளையும் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், 13,7 பில்லியன் வருடங்களுக்கு முன் அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிறிய புள்ளியாக இருந்திருக்கின்றன. அந்தச் சிறிய புள்ளி பெருவெடிப்பாக வெடித்ததனால் பிறந்ததுதான் இந்த அண்டம். அந்த பெருவெடிப்பை 'பிக்பாங்' (Big Bang) என்பார்கள். அதாவது 'பிக்பாங்' பெருவெடிப்பிற்கு முன் பல கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கூட, அந்த நான்கு விசைகளும் ஒன்றாகச் சேர்ந்து சமநிலைப்படுத்தப்பட்டு அமைதியான ஒரு பூச்சிய நிலையில், ஒருமை நிலையில் இருந்திருக்கின்றன. அதன் பின்னர்தான் ஏதோ ஒரு தூண்டல் கணம் ஏற்படுத்திய சலனத்தால் அது வெருவெடிப்பாக வெடித்து இப்போதுள்ள அண்டமாக விரிவடைந்திருக்கிறது. பிக்பாங் பெருவெடிப்பின் முன்னர் நான்கு விசைகளும் சமநிலையில் இருந்ததை அடிப்படையாகக் கொண்டு, ஐன்ஸ்டைன் அதற்கென ஒரு கணிதச் சமன்பாட்டை உருவாக்கப் பார்த்தார். அப்படி அவர் உருவாக்க நினைத்த கோட்பாட்டின் பெயர்தான் 'ஒருங்கமைக் கோட்பாடு' (Theory of Everything) எனப்படுகிறது.

ஐன்ஸ்டைனால் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியாத அந்தக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தே தீர்வது என்று அவருக்குப் பின்னர் வந்த இளம் விஞ்ஞானிகள் தீர்மானம் செய்தனர். அப்படிக் கண்டுபிடிக்க நினைத்தவர்கள் ஓரளவுக்கு வெற்றியும் அடைந்தனர். அந்த வெற்றிகளின் மூலமாக அதிர்ச்சிகரமானதும், ஆச்சரியகரமானதுமான பல புதிய கோட்பாடுகளையும் வெளியிட்டனர். நவீன இயற்பியல் நம்பவே முடியாத ஒரு ஆச்சரியமான பாதையில் பயனிக்கத் தொடங்கியது. ஸ்ட்ரிங்க் தியரி (String Theory), எம் தியரி (M Theory), சமாந்தர அண்டம் (Parallel Univers), பல அண்டங்கள் (Multyverse), பல் பரிமாணங்கள் (Dimensions) என்று மனிதனால் நம்பவும், நினைத்தும் பார்க்க முடியாத முடிவுகளை நவீன இயற்பியல் சொல்ல ஆரம்பித்தது. சமயத்தில் மந்திரவாதியின் கதைகள் போலவும், அம்புலிமாமா கதைகள் போலவும் கூட அவை இருந்தன. நம் முன்னோர்கள் சொல்லியிருந்த பல கதைகளும் இவற்றோடு ஒத்துப் போவதுதான் மிகவும் ஆச்சரியமான ஒன்று. அப்படி ஒத்துப் போகும் ஒன்றைப் பற்றி விபரிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.


அண்டம் (Universe) என்பது ஒன்று என்றுதான் நாம் இதுவரை நம்பி வந்தோம். ஆனால், இன்றுள்ள நவீன இயற்பியல் கோட்பாடுகள் அப்படி இல்லை என்கிறது. இருப்பது ஒரு அண்டம் அல்ல, நமது அண்டம் போலக் கோடிக்கணக்கான அண்டங்கள் இருக்கின்றன என்று அது சொல்கின்றது. ஒவ்வொரு அண்டமும் ஒன்றுக்கொன்று மிக அருகே காணப்படுகின்றன என்றும் சொல்கிறது. அருகே என்றால், மிக மிக மெல்லிய ஒரு தோல் போன்ற ஒரு படைதான் ஒவ்வொரு அண்டத்தையும் பிரிக்கின்றது என்று சொல்லும் அளவுக்கு மிக அருகே. நவீன இயற்பியல் இதைக் கண்டுபிடித்திருக்கிறது. இதைக் கோட்பாடாகவும் சொல்லியிருக்கிறது. இப்படிச் சொல்ல்பபட்ட கோட்பாட்டையும், சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, தேவிபாகவதத்தில் இருப்பதாக அவர் சொன்ன ஒரு கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் ஆடிப்போய் விட்டேன். அடிப்படையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். அறிவியல் ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்குபவன். இந்தக் கதையை கேட்டதும் என் சிந்தனை இயங்கிய விதங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதுவே நான் இதை எழுதவும் காரணமாகியது. முதலில் தேவிபாகவதத்தில் சொல்லப்பட்ட அந்தக் கதையைப் பார்க்கலாம்.

படைத்தலின் கடவுளான பிரம்ம்மாவுக்கு, தன் படைப்புத் தன்மையை நினைத்து கர்வம் உருவாகியது. தானே பெரியவன் என்னும் தலைக்கனமும் அவருக்குத் தோன்றலாயிற்று. படிப்படியாக இந்தத் தலைக்கனம் அதிகமாகப் போயிற்று. பிரம்மாவின் இந்தக் கர்வத்தை அவதானித்தாள் தேவி, பிரம்மாவிடம் அவள் சென்று, அவரை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தாள். தேவி அழைத்துச் சென்ற ஒவ்வொரு இடத்திலும், இந்தப் பிரம்மாவைப் போலவே வேறு ஒரு பிரம்மா இருந்து கொண்டு, படைப்புத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார். தேவி அழைத்துச் சென்ற கோடிக் கணக்கான இடங்களில் தனித்தனியே ஒரு பிரம்மாவாக, கோடிக்கணக்கான பிரம்மாக்கள் இருந்து படைப்புத் தொழில்களைச் செய்து கொண்டிருந்தனராம். இதைக் கண்ட தேவியுடன் சென்ற பிரம்மா, "தேவி, இவர்களெல்லாம் யார்? இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டாராம். அதற்குத் தேவி, "நாம் பயணம் செய்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அண்டமாகும். இவர்கள் ஒவ்வொருவரும் அந்த ஒவ்வொரு அண்டத்தில் இருந்து படைப்புத் தொழில்களைச் செய்யும் பிரம்மாக்கள். சிவபெருமானின் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும், ஒவ்வொரு அண்டமாகும். அந்த ஒவ்வொரு முடியிலும் உள்ள அண்டங்களிலும் உன்னைப் போல ஒரு பிரம்மா இருந்து கொண்டு படைத்தல் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே படைப்புத் தொழிலைச் செய்வது நீ மட்டுமல்ல. எனவே கர்வம் தவிர்ப்பாயாக" என்றாராம். பிரம்மாவும் கர்வம் கலைந்து படைப்புத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தாராம்.


இந்தக் கதை சொல்ல வருவது, சிவபெருமானின் தலையில் கோடிக்கணக்கான முடிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அண்டமாக இருக்கின்றன. ஒவ்வொரு அண்டமும் அருகருகே இருக்கின்றன. என்று இந்த தேவி பாகவதக் கதை சொல்கின்றது. நவீன இயற்பியல் இப்போது எதைச் சொல்கின்றதோ அதையே இந்தக் கதையும் என்றோ சொல்லியிருக்கிறது. இந்தக் கதை என்னை ஆச்சரியப்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை.

இந்தக் கதை சொல்லப்பட்டதால் கடவுள் கொள்கையையுடனோ, ஆன்மீகத்துடனோ நான் உடன்படுகிறேன் என்றல்ல அர்த்தம். ஆனால், நமது முன்னோர்களுக்கு ஏதோ ஒரு வகையில், பல அண்டங்கள் இருக்கின்றன என்றும், அவை மிக அருகருகே இருக்கின்றன என்றும் தற்போதய நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்கும் தகவல்களை, யாரோ அன்றே அறியத் தந்திருக்கின்றனர். புராதன காலத்தில் பல அரிய அறிவியல் தகவல்கள் புதைந்திருப்பதற்கு இவர்கள்தான் காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை அவர்களைத்தான் நாம் 'கடவுள்' என்றும் சொல்கின்றோமோ தெரியவில்லை.

Thanks to

-ராஜ்சிவா-

No comments:

Post a Comment