Tuesday, August 12, 2014

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய்

ஆகஸ்ட் 12: இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் பிறந்த தினம் இன்று



விக்ரம் சாராபாய் என்கிற பெயரை உச்சரிக்கிற பொழுதே பெருமிதம் கொள்ளவேண்டும் ஒவ்வொரு இளைஞனும்,இந்திய தேசத்தின் கனவுகளை கட்டமைத்த இளைஞர் கூட்டத்தில் அறிவியல் துறையில் மாபெரும் முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். இவரின் திருமணத்தின் பொழுது இவர் வீட்டில் இருந்து கலந்து கொள்ள யாருமே இல்லை -வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக போராடி எல்லாரும் சிறை சென்று இருந்தார்கள் ,கேம்ப்ரிட்ஜில் படித்து முடித்து விட்டு சி.வி.ராமனிடம் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்த இவர் தன் ஆய்வுகளை காஸ்மிக் கதிர்களை சார்ந்து செய்தார்.
நாட்டிற்கு அறிவியல் சார்ந்த பார்வை தேவை என நேரு வாதிட்ட பொழுது இந்திய விண்வெளி கழகத்தை அமைத்தார் சாராபாய் ;அதற்காக தாராள நிதியை அரசிடம் இருந்து வாதாடிப்பெற்றார். பல்வேறு கனவுத்திட்டங்களுக்கான விதைகளை ஊன்றி,இளைஞர்களை அறிவியல் துறைக்கு வர ஊக்குவித்தார். ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் மறைவுக்கு பின் இந்திய அணுசக்தி துறைக்கான பொறுப்பையும் ஏற்று செயல்பட்டார்

கல்பாக்கத்தில் Faster Breeder Test Reactor (FBTR),

கொல்கத்தாவில் சைக்ளோட்ரான் திட்டம்,

இந்திய யூரேனிய கழகம் ஆகியவற்றையும் உருவாக்கி சாதித்தார்.

 தும்பாவில் ராக்கெட் ஏவுதளமும் இவரால் உருவாக்கப்பட்டது

இன்றைக்கு உலகஅளவில் கவனம் பெறும் இந்திய மேலாண்மை மையங்களுள் முதன்மையான ஐ.ஐ.எம். அகமதாபாத் இவரின் உருவாக்கமே.

விண்வெளிப்பயணங்கள் மாதிரியான விலை மிகுந்த பயணங்கள் இந்தியா மாதிரியான ஏழை நாட்டுக்கு தேவையா என்கிற கேள்விக்கு இப்படி பதில் சொன்னார் சாராபாய் :


"முன்னேற்றப்பாதையில் தற்போது தான் பயணிக்க ஆரம்பித்திருக்கிற ஒரு தேசத்துக்கு விண்வெளிப்பயணம் தேவையா என்று வினாக்கள் எழும்புகின்றன. இரு வேறு எண்ணங்கள் இல்லாமல் உறுதியாக நாங்கள் இந்த பயணத்தை முன்னெடுத்து இருக்கிறோம். நிலவை நோக்கியோ, கோள்களை கண்டறியவோ, மனிதர்களை விண்ணுக்கு கொண்டு செல்லும் பணக்கார நாடுகளோடு போட்டி போடுவதற்கான கனவுகள் இல்லை இவை ! பொறியியல் மற்றும் விஞ்ஞான நுணுக்கங்களை சராசரி மனிதனின் சிக்கலை தீர்ப்பதிலும் ,சமூக பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் தான் இந்த கனவு அமைப்பு. உலக சமூகத்துக்கு எந்த வகையிலும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேசத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு அர்த்தமுள்ள பணியே இது !"
ஐம்பத்தி இரண்டு வயதில் மறைந்து போன இந்த தீர்க்கதரிசியின் கனவுகளின் வெற்றிகள் தான் இன்றைக்கு இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தியில் பெற்று இருக்கும் இடம்.

No comments:

Post a Comment