. 'பூச்சிய ஈர்ப்புவிசை’ (Zero Gravity) என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “படவில்லையா?” அப்படியென்றால் கொஞ்சம் பொறுங்க, உங்க கூடப் பேசனும்.
.
அண்டமெங்கும் பொருட்கள், ஈர்ப்புவிசையுடனே சுற்றித் திரிகின்றன. புவிக்கும் ஈர்ப்புவிசை உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். புவியின் ஈர்ப்புவிசையை, விசேசமாகப் ‘புவியீர்ப்புவிசை’ என்கிறோம். இந்தப் ‘புவியீர்ப்புவிசை’ என்னும் சொல்லைப் பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். சந்திரனின் ஈர்ப்புவிசையைப் பற்றிச் சொல்லும் போது கூட, “சந்திரனின் புவியீர்ப்புவிசை" என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, அது ஒருபுறம் இருக்கட்டும்.
. ஈர்ப்புவிசையென்பது அண்டமெங்குமுள்ள பொருட்களுக்கு இருப்பது போல, ஈர்ப்புவிசை இல்லாத இடமும் இருக்கிறது. விண்வெளியில் ஈர்ப்புவிசையென்பது கிடையாது. வளிமண்டலம் பல படலங்களாகப் படிந்து, பூமியைப் பாதுகாக்கும் வலயமாகக் காணப்படுகிறது. இதை ‘அட்மாஸ்பியர்’ (Atmosphere) என்று அழைக்கிறோம். இந்த அட்மாஸ்பியருக்குள் நாம் இருக்கும் வரை, புவியீர்ப்புவிசை நம்மைப் பூமியை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். அட்மாஸ்பியரை விட்டுத் தாண்டி விண்வெளியை அடையும் போது, அங்கு ஈர்ப்புவிசை இல்லாது போகின்றது. அதாவது அங்கே பூச்சிய ஈர்ப்புவிசை (Zero Gravity) ஆகிவிடுகின்றது. ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் நாம் இருந்தால், அங்கே மிதந்து கொண்டுதான் இருப்போம். கீழே எங்கும் விழமாட்டோம். தண்ணீரில் நீந்துவது போல, காற்றில்லா வெற்றிடத்தில் மிதந்து கொண்டிருப்போம்.
. காற்றில்லாத வெற்றிடத்தில் மிதப்பதை உங்களால் கற்பனைதான் பண்ண முடியுமேயொழிய, முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதல்லவா? அதனால், அதைப் புரிந்து கொள்வதற்கும், அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்குமான அடிப்படை அறிவைப் பெறுவதற்கும், விஞ்ஞானிகள் எப்போதும் விண்வெளிக்குச் சென்று கொண்டிருக்க முடியாது. அதனால், "பூமியிலேயே பூச்சிய ஈர்ப்புவிசையை உருவாக்க வேண்டும், அதற்கு என்ன செய்யலாம்?” என்று சிந்தித்த போதுதான், ஒரு ஆச்சரியமான வழி கிடைத்தது. அதற்கென உருவானதுதான் ‘பூச்சிய ஈர்ப்புவிசை விமானம்’ (Zero Gravity Flight அல்லது Zero G Flight).
. ஈர்ப்புவிசைகளற்று, வெளியியொன்றில் மிதப்பதற்கென ஒரு விமானமே தயார் செய்யப்பட்டது. இதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கைகள் அகற்றப்பட்டு அமைக்கப்பட்ட பெரிய விமானம் அது. இந்த விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அது 45 பாகை கோணத்தில் மேல் நோக்கிய வண்ணம், மிகை வேகத்தில் உயரப் பறக்கத் தொடங்கும். ஒரு குறித்த உயரத்தை அடைந்ததும் உடன் மீண்டும் 45 பாகைக் கோணத்தினூடாக கீழே இறங்க ஆரம்பிக்கும். இப்படி அது பல தடவைகள் ஒரு பரவளைவாகத் (Parabola) தொடர்ந்து பறந்து கொண்டிருக்கையில், இந்தப் பூச்சிய ஈர்ப்புவிசை விமானத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்கிறது. உயரப் பறக்கும் விமானம் கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும் சமயத்தில் இந்த பூச்சிய ஈர்ப்பு, கிட்டத்தட்ட 25 செக்கன்களுக்குக் கிடைக்கின்றன. அதி அற்புதமான மிதக்கும் விளவாக இது இருக்கும். பல விஞ்ஞானிகள், விண்வெளிக்கே போகாமல், அந்த விமானத்தில் பயணம் செய்து மிதந்திருக்கிறார்கள்.
. இப்போது நான் சொல்வதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். வழமை போல இதுவும் கற்பனைதான், உண்மையாக யாரும் பரீட்சித்துப் பார்க்க வேண்டாம். இது உங்கள் அம்மா மேல் சத்தியம். ராஜ்சிவா சொன்னாரேயென்று, எதற்கும் செய்து பார்ப்போம் என முயற்சிக்கவே வேண்டாம். உலகிலேயே உயரமான ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து நீங்கள் கீழே குதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கீழே நிலத்தை வந்து அடையப் பல நிமிடங்கள் எடுக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு உயரமான கட்டடம். நீங்கள் கீழே விழுந்து கொண்டிருக்கும் போது, உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ஒரு ரூபாய் நானயத்தை கையில் எடுத்து, அப்படியே விட்டுவிடுகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும், நாணயமும் இப்போது ஒரே வேகத்தில் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கீழேயும், வேறு எங்கும் பார்க்காமல், நாணயத்தை மட்டும் பார்ப்பீர்களானால், அந்த நானயம் காற்றில் மிதந்தபடி உங்கள் கூடவே வருவது போல உங்களுக்குத் தோன்றும். அதாவது அந்த நாணயம் பூச்சிய ஈர்ர்புவிசையில் இருப்பது போல மிதப்பதாக உங்களுக்குத் தெரியும். இந்தச் சம்பவத்தில், உங்களுக்கும் நாணயத்துக்கும் ஏற்பட்ட விளைவு போன்ற ஒரு விளைவுதான் பூச்சிய ஈர்ப்புவிசை விமானத்திலும் ஏற்படுகிறது. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்துப் பார்த்தால், இது நிச்சயம் உங்களுக்குப் புரியும்.
. பூச்சிய ஈர்ப்பு விமானத்தில் உலகப் பிரசித்தி பெற்ற கணித, இயற்பியல் மேதையான ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ அவர்கள் கூடத் தன் உடலை அசைக்க முடியாத நிலையிலும், பயணம் செய்து பரிசோதனை செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Thanks to
-ராஜ்சிவா-
No comments:
Post a Comment