Sunday, August 10, 2014

நிலவுக்குப் போன கதை நிஜமா? பகுதி I

'அன்று வந்ததும் அதே நிலா' என்னும் தொடரை 'உயிரோசை' இணையத்தளத்தில் எழுதி வந்தேன். ஆனால் நான் அதை எழுதும் போதே, சிலர் அதைக் காப்பி பண்ணி தங்கள் இணையத்தளத்தில் அவர்களது பெயரில் இடுகிறார்கள். அதனால் சந்திரனில் மனிதன் கால் வைத்ததை மட்டும் மையமாக வைத்து உயிர்மையில் 'நிலவுக்குப் போன கதை நிஜமா?' என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அது உங்கள் பார்வைக்காக........!

இந்தக் கட்டுரை பேஸ்புக்கில் ஒரேதடவையில் போட முடியாத அளவு நீளமாக இருப்பதால், இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரே சமயத்தில் பதிவிடுகிறேன்.

-ராஜ்சிவா-





"மனிதன் எடுத்து வைத்த சிறிய காலடி, மனித இனத்தின் ஒரு பெரிய பாய்ச்சல்" (That's one small step for man, one giant leap for mankind). 1969 களில் உலகம் முழுவதையும் பரவசமாகப் பேசவைத்த, மிகப்பிரபலமான வசனம் இது. சந்திரனில் காலடியெடுத்து வைத்த, முதல் மனிதனான 'நீல் ஆம்ஸ்ட்ரோங்க்' தனது காலடியைச் சந்திரனின் மேற்பரப்பில் வைத்த கணத்தில் சொன்ன அற்புதமான வசனம்தான் இது. 1969ம் ஆண்டு யூலை மாதம் 20ம் தேதி சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைத்த நிகழ்வு மிகச் சாதாரணமான ஒன்றல்ல. இன்று நாம் வாழ்ந்து வரும் சூழலில், கணணியின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் உச்சத்தை அடைந்த நிலையில், மிகச் சாதரணமான ஒரு நிகழ்வாகத் தோன்றலாம். ஆனால், நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், 1969ம் ஆண்டு நிலவுப் பயணம் என்பது நினைத்தே பார்க்க முடியாதது.

1969ம் ஆண்டு யூலை மாதம் 16ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்த, நாஸாவின் 'கென்னடி விண்வெளி மையத்தில்' (Kennedy Space Center) இருந்து, நீல் ஆம்ஸ்ட்ரோங்க் (Neil Amstrong), எட்வின் அல்ட்ரின் (Edwin Aldrin), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய மூன்று விண்வெளி விற்பன்னர்களையும், சந்திரனை நோக்கி அமெரிக்கா அனுப்பி வைத்தது. 'அப்போலோ 11' (Apollo 11) என்று பெயரிடப்பட்ட நிலவுப் பயணத்திற்கு 'சாட்டர்ன் V' (Saturn V) ரக ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. மூன்று நாட்களின் பின்னர், 19ம் தேதி சந்திரனை அடைந்த அப்போலோ 11, சந்திரனை வலம் வந்தது. நான்காம் நாளான 20 தேதி அப்போலோ 11 இலிருந்து பிரிந்த ஒரு சிறிய விண்கலம் சந்திரனில் இறங்கியது. சிலந்தி போன்ற வடிவமைப்பைக் கொண்ட அந்தச் சிறிய விண்கலத்துக்கு 'ஈகிள்' (Eagle) என்று பெயரிட்டிருந்தனர். அமெரிக்காவின் இலட்சனையான கழுகின் பெயரையே அந்த விண்கலத்துக்கும் வைத்திருந்தனர். 'ஈகிள்' சந்திரனில் இறங்கியது, அமெரிக்காவே இறங்கியதாக அடையாளப்படுத்தப்பட்டது ('The Eagle has landed'). அந்த ஈகிள் என்னும் விண்கலத்திலிருந்து வரலாறே வியக்கப் போகும் சாதனை மனிதனாக, நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் காலடியெடுத்து வைக்கும் முதல்வனாக இறங்கினார். அவர் தனது காலடியைச் சந்திரனில் பதிக்கும் போது கூறிய வசனம்தான் ஆரம்பத்தில் இருப்பது. ஆம்ஸ்ட்ரோங்கிற்கு அடுத்ததாக,  எட்வின் அல்ட்ரின் சந்திரனில் காலடி வைத்த இரண்டாவது மனிதரானார்.



ேட்கும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும் இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த சம்பவங்கள் அனைத்துமே, 'அமெரிக்கா செய்து காட்டிய மிகமலினமான ஒரு நாடகம்' என்று உரத்துச் சொல்கின்றனர் பலர். "சந்திரனில் மனிதன் காலடியெடுத்தே வைக்கவில்லை. எல்லாமே நாஸா மூலமாக அமெரிக்கா செய்த பித்தலாட்டம். அப்போலோ மிசன் என்பதே ஒரு நாடகம். மனிதன் ஒருபோதும் சந்திரனுக்குச் செல்லவில்லை. அப்போலோ 11 மட்டுமில்லை அப்போலோ 12, 14, 15, 16, 17 களில் கூட மனிதன் சந்திரனைச் சென்று அடையவில்லை. இவையெல்லாம் பூமியிலே சந்திரனைப் போன்று ஒரு இடத்தை உருவாக்கி, அதில் உருவாக்கப்பட்ட சினிமா போன்ற காட்சிகள்." என்று பலமான குரலில் மறுக்கிறார்கள் அவர்கள். 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்ற நிலையில் இதை அவர்கள் சொல்லவில்லை. விதவிதமான ஆதாரங்களை முன்வைத்து நம்மைத் திகைக்க வைக்கிறார்கள். தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அவர்கள் சொல்வது சர்வநிச்சயம் என்றே நம்மையும் யோசிக்க வைக்கிறது. இதை ஒரு சூழ்ச்சிக் கோட்பாடாகவே உலகிற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

'சூழ்ச்சிக் கோட்பாடு' (Conspiracy Theory) என்று ஒன்று உண்டு. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஆளுமையுடையவர்களாலும், ஆளும் வர்க்கத்தினராலும் நடத்தப்பட்ட மர்மமான நிகழ்வுகளுக்கு, எப்போதும் அவர்கள் சார்பில் ஒரு காரணம் சொல்லப்பட்டிருக்கும். சில சமயங்களில் உண்மையாகவும், பல சமயங்களில் கேள்விக்குரியவையாகவுமே அந்தக் காரணங்கள் இருக்கும். இந்த மர்ம நிகழ்வுகளை படிப்படியாக ஆராய்ந்து, அவை வேறு விதமாக நடந்திருக்கலாம் எனப் பல கோணங்களில் ஆய்வு செய்து, அந்த நிகழ்வுகளில் இருக்கும் சதிச் செயல்களைப் பகிரங்கமாக உலகிற்குக் கொண்டுவருவதுதான் சூழ்ச்சிக் கோட்பாட்டாளர்களின் நோக்கம். நடைபெற்ற நிகழ்வுக்கெனச் சொல்லப்பட்ட காரணத்தையும், சூழ்ச்சிக் கோட்பாட்டின் மூலம் சொல்லப்பட்ட காரணத்தையும் எடுத்துக் கொள்ளும் போது, உண்மை என்பது அவை இரண்டுக்கும் இடையில் நின்றே ஊசலாடும். சூழ்ச்சிக் கோட்பாடுகளில் சொல்லப்படுபவற்றையும் கூட நாம் அப்படியே உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. அதனால்தான் அவை இதுவரை 'கோட்பாடு' என்று அழைக்கப்பட்டு வருகிறது. கோட்பாடுகள் எப்போதும் முழுமையான உண்மைகள் அல்ல. உண்மையை ஒட்டி அவை இருந்தாலும், அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதனாலேயே பலர், "அட! இது கான்ஸ்பிரஸித் தியரிதானே!" என்று அலட்சியமாக சொல்லிவிடுவார்கள். ஆனால், நடந்த சம்பவங்களின் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு, அவர்கள் தங்கள் உயிர்களையே பணயம் வைத்து உழைத்திருப்பார்கள். எப்போதும் கான்ஸ்பிரஸித் தியரிகள் ஆதிக்க வர்க்கத்துக்கு எதிரானதாகவே இருக்கும். இதனாலேயே இந்த கான்ஸ்பிரஸித் தியரிகளைப் பொய்யாக்க தங்கள் பணத்தையும், அதிகாரத்தையும் ஆதிக்க வர்க்கம் பயன்படுத்தும். இந்த வகையில், உலகிலேயே இதுவரை சொல்லப்பட்ட அனைத்துச் சூழ்ச்சிக் கோட்பாடுகளிலும் முதன்மை வகிக்கும் சூழ்ச்சிக் கோட்பாடாகவும், வலிமையான கோட்பாடாகவும் இருப்பது, 'சந்திரனில் மனிதன் காலடியெடுத்து வைக்கவே இல்லை' என்னும் சூழ்ச்சிக் கோட்பாடுதான். கடந்த நாற்பத்தி நான்கு வருடங்களாக "சந்திரனுக்கு மனிதன் சென்றது உண்மைதானா?" என்ற கேள்வியைக் கேட்க வைத்துக் கொண்டே இருக்கும் முதன்மைக் கோட்பாடு இது. இன்றுவரை உலகில் எங்காவது ஒரு மூலையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் இது பற்றி விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.



சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை என்னும் சூழ்ச்சிக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் 'பில் கேசிங்' (Bill Kaysing) என்பவர்தான். இவர் சாதாரணமான ஒரு ஆள் கிடையாது. ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் தலைமைப் பதவி வகித்தவர் இவர். அமெரிக்காவின் வெற்றியடைந்த, தோல்வியடைந்த விண்கலங்கள் அனைத்தின் சரித்திரங்களையும் நன்றாகத் தெரிந்து கொண்டவர். 'அப்போலோ 11' சந்திரனில் இறங்கியது என்று சொன்ன மறுவினாடியே, 'அது ஒரு ஏமாற்று வேலை' எனப் பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தவர். இவரின் கருத்துகளிலிருந்தே சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை என்னும் சூழ்ச்சிக் கோட்பாடு கருப்பெற்று, படிப்படியாக வளர்ந்து வந்தது. சந்திரனில் மனிதன் இறங்கிய ஆரம்ப காலங்களில் மிகவும் பலமான எதிர்ப்பாகத் தொடங்கிய இந்தக் கோட்பாடுகள், படிப்படியாக அமைதியாகி அடங்கிப் போயிருந்தாலும்,  இப்போது மிகச் சமீப காலமாக மீண்டும் வலிமையான எதிர்ப்புக் குரலாக எழ ஆரம்பித்திருக்கிறது. அன்று பில் கேஸிங் எதிர்ப்பதற்குச் சொன்ன காரணங்களோடு, இன்றுள்ள அறிவியல் காரணங்களும் சேர்வதால், சந்திரனுக்கு மனிதன் நிஜமாகவே செல்லவில்லை என்ற முடிவுக்கே பலர் வருகின்றார்கள்.

உலகிலேயே வலிமைமிக்க ஒரு நாடு அமெரிக்கா. சந்திரனில் மனிதன் இறங்குவதை, உலகமே தொலைக்காட்சியின் மூலம் பார்த்துக் கொண்டும், வானொலியில் கேட்டுக் கொண்டும் இருக்கும் போது, இவர்கள் அதை இலையென்று வன்மையாக மறுக்கச் சொல்லும் காரணங்கள்தான் என்ன? அமெரிக்காவின் வெளிப்படையான சாட்சியங்களை விட, அப்படி என்னதான் பெரிய காரணங்களாக அவை இருக்கப் போகின்றன? இன்றைய நவீன உலகம் மீண்டும் இதைக் கையிலெடுத்து, மறுப்பதற்குக் காரணங்கள்தான் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் இப்போது தேடவேண்டும். விவரமான ஒரு ஆராய்ச்சி மூலம் அந்த உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு கான்ஸ்பிரஸித் தியரியாக மட்டும் இதைப் பார்க்காமல், அறிவியல் சம்பவங்களைத் தெரிந்து கொள்ளும் அடிப்படையில் அவற்றை நாம் விரிவாகப் பார்க்கலாம்.............!



மனிதன் சந்திரனுக்குப் போவதற்குச் சாத்தியப்படாத ஒரு காலகட்டத்தில், மனிதனை அங்கு அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறது. இதற்குக் காரணம் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட ஒரு நிர்ப்பந்தம்தான். அந்த நிர்ப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால், மனிதனைச் சந்திரனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்னும் அவசர நிலையை அமெரிக்கா ஒரு போதும் எடுத்திருக்காது. இதனால் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது என்ற முடிவை அவசர அவசரமாக எடுத்து, அதை உலகிற்கு அறிவித்தவர் அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான்.எஃப்.கென்னடிதான். கென்னடி அவசரப்பட்டதற்கு ஒரு பெரிய நிர்ப்பந்தம் காரணமாக இருந்தது. அந்த நிர்ப்பந்தத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நாம் இரண்டாம் உலகப் போருக்கு அப்புறம் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நிலவிய 'பனிப்போர்' (Cold War) என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். "சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைத்ததற்கும், பனிப்போருக்கும் என்னய்யா சம்மந்தம்?" என்று நீங்கள் இப்போ கேட்கலாம். 'இருக்கிறது. சம்மந்தம் நிறையவே இருக்கிறது'. அவற்றைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்'.



உலகமே இரண்டாகப் பிரிந்து, ஒரு மாபெரும் யுத்தத்தை நடத்தி முடித்தது. அந்த யுத்தம்தான் 1939ம் ஆண்டிலிருந்து 1945ம் ஆண்டு வரை நடைபெற்ற 'இரண்டாம் உலகப் போர்'. கிட்டத்தட்ட எழுபது கோடிக்கும் அதிகமான உயிர்களை இந்தப் போர் பலியெடுத்தது. இந்த உயிரிழப்புகளில் இராணுவம், பொதுமக்கள் என அனைவரும் அடங்குவர். ஜேர்மனி, இத்தாலி, யப்பான், ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகள் உட்படப் பல நாடுகள் ஓரணியிலும், அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா உட்பட்ட ஏனைய நாடுகள் இன்னுமொரு அணியிலுமாகப் பிரிந்து, இந்த இரண்டாம் உலகப் போரை நடத்தி வைத்தன. 'தங்கள் தலைகளில் யானைகள் மட்டும் மண்ணை அள்ளிப் போடுவதில்லை. மனிதர்களும் போடுவார்கள்' என்பதற்கு இந்தப் போர் நல்லதொரு உதாரணம். அந்தக் காலகட்டங்களில் ஜேர்மனியும், யப்பானும், இத்தாலியும் மிகவும் வலிமையுள்ள நாடுகளாக இருந்தன என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனாலும், அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அணியே இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றது. வெற்றியையும், வெற்றி பெற்ற நாடுகளையும் இந்த நாடுகள் தமக்குள்ளே பங்கும் போட்டுக் கொண்டன. இந்தப் போரில் ஒரே அணியில் இருந்து ஒன்றாகப்  போரிட்ட அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில், போருக்கு அப்புறம் ஏற்பட்ட முறுகல் நிலையே 'பனிப்போர்' என்று அழைக்கப்பட்டது.

முதலாளித்துவம்,  கம்யூனிசம் என்னும் இரண்டு வெவ்வேறு தத்துவங்களின் அடிப்படையில் அமெரிக்காவும், ரஷ்யாவும் தம்மைக் கட்டமைத்துக் கொண்டதால் ஏற்பட்ட முரண்பாடுகளில் ஆரம்பித்த முறுகல் நிலை, படிப்படியாக வளர்ந்து, நிஜமான ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இரு நாடுகளையும் தயார்படுத்தியது. இந்தப் பகை வளர்ந்து, உலகில் பெரியவன் நீயா? நானா? என்னும் உச்சக்கட்டப் போட்டியாக உருக்கொண்டது. ஒருபுறம் கம்யூனிசக் கொள்கைகளை முன்னிறுத்தி, தனக்கு ஆதரவாகத் தன் பக்கத்தில் பல நாடுகளை ரஷ்யா ஒன்று சேர்க்க, மறுபுறம் முதலாளித்துவத்தை முன்னிறுத்தி அமெரிக்கா தனக்கான ஆதரவு நாடுகளை ஒன்று சேர்க்கத் தொடங்கியது. மீண்டும் இரண்டு அணிகள் உருவாகின. உலக நாடுகள் அனைத்தும் இரண்டாகப் பிரிந்து ஒன்றுடன் ஒன்று முறைத்துக் கொண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்ப்பட்டன. எந்த நேரத்திலும் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து, ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்படலாம் என்ற ஒரு பனிப்போர்த் தன்மை இருந்து கொண்டே இருந்தது. கியூபா, ஹங்கேரி, வியட்னாம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சிறிய யுத்தங்கள் மூலம் இந்தப் பனிப்போர், பெரும்போராக மாறக் கூடிய சந்தர்ப்பங்களும் தோன்றின. ஆனாலும், அவை புத்திசாலித்தனமாக (அல்லது உள்ளுர இருக்கும் பயத்தால்) இரண்டு பக்கத்தாலும் அடக்கப்பட்டது.



தங்கள் யுத்த தளபாடங்களை நிலம், நீர், ஆகாயத்தில் என்று அனைத்துத் தளங்களிலும் பெருக்கி, அதனடிப்படையில், 'நான் பெரியவன்.. நீ பெரியவன்..' என அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று போட்டியாக மார்தட்டிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் ரஷ்யா ஒரு புதுவிதமான யுக்தியைக் கையாண்டு, பனிப்போரின் வடிவத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு சென்றது. ஆகாய வெளியில் போர் விமானங்கள் என்ற அளவில் நின்று கொண்ட ரஷ்யா, திடீரென 'ஸ்புட்னிக் 1' (Sputnik 1) என்ற செயற்கைக் கோளை (Satellite), 1957ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. ஸ்புட்னிக் பூமியின் மேல்பரப்பில் உள்ள விண்வெளியைச் சுற்றி வந்தது. மனித வரலாற்றிலேயே விண்வெளிக்கு மனிதனால் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக் கோள் என்ற பெயரை 'ஸ்புட்னிக் 1' பெற்றுக் கொண்டது. இதன் மூலம் தனது காலடித் தடத்தை விண்வெளியில் உயரத் தூக்கி எடுத்து வைத்துவிட்டதாக மறைமுகமாக மார்தட்டிக் கொண்டது ரஷ்யா. ரஷ்யாவின் இந்தச் செயல் உண்மையில் வியப்பான ஒன்றுதான். உலகம் முழுவதும் மூக்கில் விரலை வைத்து, ஆச்சரியமாகவும், பயத்துடனும் ரஷ்யாவைப் பார்க்க வைத்த நிகழ்வாக, அந்த நிகழ்வு அமைந்தது. அதனால் அமெரிக்கா பெருத்த அவமானத்தை அடைந்ததாக எண்ணிக் கொண்டது. அத்துடன் அமெரிக்காவுக்கு ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. விண்வெளியில் தளம் அமைத்து, அங்கு அணுகுண்டுகளைப் பொருத்தி, அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலாக ரஷ்யா இனி அமைந்துவிடுமோ என்று வெளிப்படையாகவே தன் பயத்தை வெளிக்காட்டியது அமெரிக்கா. அணுகுண்டை ஏவி யுத்தத்தை நடத்துவார்களோ என்று இரண்டு பக்கமும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளை அது. இப்போது பனிப்போரின் சக்தியில் ரஷ்யாவே முன்னிலையில் இருப்பது போல ஒரு தோற்றமும் உருவாகிவிட்டதால், அமெரிக்காவின் பதட்டம் அதிகரித்தது.

ரஷ்யாவின் அதிரடி இத்துடன் நின்றுவிடவில்லை. 'ஸ்புட்னிக் 1' ஐ அனுப்பிய அடுத்த ஒரு மாதத்தில், அதாவது 1957ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி, 'ஸ்புட்னிக் 2' என்ற பெயரில் அடுத்த செயற்கைக் கோளையும் தொடர்ந்து விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. இந்தத் தடவை ரஷ்யா செயற்கைக் கோளை வெறுமையாக அனுப்பி வைக்கவில்லை. அதனுள் 'லைக்கா' (Laika) என்னும் பெண் நாய் ஒன்றையும் வைத்து அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு பிரயாணம் செய்த முதல் உயிரினம் என்ற பெயரை லைக்கா தட்டிக் கொண்டது. விண்வெளிக்குச் சென்ற லைக்கா, வெப்பக் கதிர்களின் தாக்கத்தால் சில மணி நேரமே உயிருடன் இருந்தாலும், உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. லைக்காவைப் பெருமைப்படுத்தவென ரஷ்ய அரசும், அதன் ஆதரவு நாடுகளும் லைக்காவின் படத்துடன் கூடிய தபால் தலைகளை வெளியிட்டன. லைக்காவை விண்வெளிக்கு ரஷ்யா அனுப்பியது, அமெரிக்காவின் தலையில் இறங்கிய இரண்டாவது பேரிடியாகும். அமெரிக்கா மிகவும் கூசிப்போனது. சொல்லப் போனால், அமெரிக்காதான் விண்வெளிக்கு செயற்கைக் கோள் ஒன்றை அனுப்புவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தது. ஆனால் ரஷ்யா மிகவும் ரகசியமாக தன் திட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் எண்ணம் தோன்றியதற்கும் ஒரு காரணமும் இருந்தது. விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தை இவர்கள் இருவரும் பெற்றுக் கொண்டது ஜேர்மன் விஞ்ஞானிகள் மூலம்தான். இரண்டாம் உலகப் போரின் வெற்றியின் பின்னால் ஜேர்மனியை ரஷ்யாவும், அமெரிக்காவும் பங்கு போட்ட போது, ஜேர்மனியின் முதன்மை விஞ்ஞானிகளையும் பங்கு போட்டுக் கடத்திக் கொண்டு சென்றனர். அவர்கள் மூலம் இரு நாடுகளும் ராக்கெட் தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொண்டன. 



இதன் பின்னர் 1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி, அமெரிக்கா 'எக்ஸ்ப்ளோரர் 1' (Explorer 1) என்ற செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. பூமியைச் சுற்றி மின்காந்த ஏற்றங்களையுடைய, கதிர்வீச்சுள்ள மிகப்பெரிய இரண்டு பட்டிகள் (Belts) அமைந்திருக்கின்றன என்பதை எக்ஸ்ப்ளோரர் 1 செயற்கைக் கோள்தான் கண்டுபிடித்தது. 'வான் அலன் கதிர்வீச்சுப் பட்டி' (Van Allen Radiation Belt) என்று இதை அழைக்கிறார்கள். மனிதன் சந்திரனுக்குச் செல்லவில்லை என்பதற்கு இந்தப் பட்டியும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது பற்றி விளக்கமாக பின்னர் பார்க்கலாம். 'எக்ஸ்ப்ளோரர் 1' ஐ விண்வெளிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்ததன் மூலம், தானும் ரஷ்யாவுக்கு சமமானவன் என்று காட்டிக் கொண்டது. அதன் பின்னர் இந்த இரண்டு நாடுகளும், தங்களில் யார் விண்வெளியில் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ளும் போட்டியில் இறங்கினர். பில்லியன் பில்லியன் டாலர்கள் இதனால் விண்வெளியில் கொட்டப்பட்டது. எத்தனையோ தோல்விகள், ஏதோ சில வெற்றிகள் என நடந்த இந்த விண்வெளித் தொடர் ஓட்டத்தில் வெடித்துச் சிதறியதும், விழுந்து மோதியதுமான வின்கலங்கள் அதிகமாக இருந்தன. இவர்களின் இந்தப் போட்டி, 'விண்வெளிப் பந்தயம்' (Space Race) என்று அழைக்கப்பட்டது. இந்த ஓட்டப் பந்தயத்தில் ரஷ்யாவே பலசமயங்களில் முன்னிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் ரஷ்யா யாருமே நம்பமுடியாத ஒரு காரியத்தைச் செய்து முடித்தது. அமெரிக்கா என்ன செய்வதென்றே தெரியாமல் கைகளைப் பிசைந்தபடி நின்ற சம்பவமாக அது அமைந்தது. மனித வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல்லாக அந்தச் சம்பவம் பதியப்பட்டது.


No comments:

Post a Comment